;
Athirady Tamil News

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது குறைப்பு; யார் விட்ட பிழை? (கட்டுரை)

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த செவ்வாய்க்கிழமை (30) முன்வைத்த இடைக்கால வரவு -செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை 60ஆக நிர்ணயிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரச மற்றும் அரச சார் நிறுவனங்கள் பலவற்றில், ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லை 65ஆகக் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில், இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில், 60 வயதைக் கடந்துவிட்ட அனைத்து அரச ஊழியர்களும், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியோடு, ஓய்வுபெற்றுச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியை இலங்கை கோரிய போதே, அரச, அரச சார் நிறுவனங்களின் கட்டமைப்புகளில் பாரியளவு மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில், நாட்டின் நிர்வாக கட்டமைப்பில், தேவையற்ற விதத்தில் எங்கெல்லாம் நிதி வீணடிக்கப்படுகின்றதோ, அந்த பகுதிகளை எல்லாம் ஒழித்து, மீளமைப்புச் செய்யும் நிபந்தனையை, சர்வதேச நாணய நிதியம் விதித்து வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்திடம், ஏற்கெனவே உதவி பெற்ற நாடுகள், இதற்கு உதாரணங்களாக இருக்கின்றன.

22 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில், 1.5 மில்லியன் அரச ஊழியர்கள் இருக்கிறார்கள். அதாவது, 15 பேருக்கு ஓர் அரச ஊழியர் என்ற விகிதம் காணப்படுகின்றது. எந்தவொரு நாடும், இவ்வாறான விகிதத்தில் அரச ஊழியர்களைப் பேணுவதில்லை. அநேக நாடுகளில், 50 பேருக்கு ஓர் அரச ஊழியர் என்ற விகிதமே பேணப்பட்டு வந்திருக்கின்றது. அவ்வாறான நிலையில், 15 பேருக்கு ஓர் அரச ஊழியர் என்பது, அரச கட்டமைப்பில் பெருமளவு மனித வளமும் நிதியும் வீணடிக்கப்பட்டு வந்திருக்கின்றமைக்கான சாட்சி. இந்த நிலைக்கு நாடு செல்வதற்கு, நாட்டை ஒவ்வொரு கட்டத்திலும் ஆட்சி செலுத்திய அரசாங்கங்களே பொறுப்புக் கூற வேண்டும்.

இலங்கை போன்ற மத்தியதர மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில், அரச மற்றும் அரச சார் வேலையைப் பெறுவது என்பது, பெரும் கௌரவமாகப் பார்க்கப்பட்டது. அதற்கு, அரச ஊழியராக இணைந்துவிட்டால், அவரின் ஓய்வுபெறும் வயது வரை, தொழிலுக்கான உறுதிப்பாடு உண்டு. அத்தோடு, ஓய்வுக்குப் பின்னரும் ஓய்வூதியம் என்கிற சலுகை உண்டு.

இதனால், மிகவும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு, அரச வேலை அவசியம் என்ற உணர்வு, நாட்டு மக்களிடையே ஏற்பட்டது. அதனை கட்சிகளும் அரசியல் தலைவர்களும் தங்களுக்கான வாக்குகளை ஈர்க்கும் யுக்தியாகக் கைக்கொள்ளத் தொடங்கினார்கள். நாட்டை கடந்த காலங்களில் ஆண்ட ஐக்கிய தேசிய கட்சியோ, சுதந்திரக் கட்சியோ அல்லது அவற்றின் தொடுப்புள்ள கட்சிகளோ, தங்களில் தேர்தல்கால வாக்குறுதிகளில் மிகமுக்கிய ஒன்றாக, அரச வேலை வாய்ப்பை வழங்குவதைக் குறிப்பிட்டு வந்திருக்கிறார்கள்.

அது, நாட்டின் அரச கட்டமைப்பில், காலத்துக்கு காலம், தேவைக்கு அதிகமாக ஊழியர்களை இணைக்கும் நிலையை உருவாக்கியது. அதனால், அரச வரி வருமானங்களில் பெருமளவு, அரச மற்றும் அரசு சார் நிறுவனங்களின் ஊழியர்களுக்கான ஊதியமாகக் கரைந்து போனது. இன்றைக்கு அரச ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்குவதற்காக, பணத்தை அச்சிடும் நிலை உருவாகியிருக்கின்றது.

நாட்டை ஆட்சி செலுத்திய ஆட்சியாளர்களின் முறையற்ற தேர்தல் வாக்குறுதிகளும், அதனால் இணைக்கப்பட்ட இலட்சக்கணக்கான அவசியமற்ற ஊழியர்களால் அரச இயந்திரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அது நிதிச்சுமை என்கிற அளவில் மாத்திரமல்ல; சேவையின் தரத்தையும் கீழிறக்கியது.

மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த சமயத்தில், தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ஒரு இலட்சம் இளைஞர் – யுவதிகளுக்கு அரச வேலை என்கிற விடயத்தை நடைமுறைப்படுத்தினார். அதில், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என்கிற பெயரில், ஆயிரக்கணக்கான இளைஞர் – யுவதிகள் பிரதேச செயலங்களில் இணைக்கப்பட்டார்கள். அவ்வாறு இணைக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புகள் என்று எதுவும் உறுதியாக வரையறுக்கப்படவில்லை.

மாறாக, அவர்களுக்கும் பிரதேச செயலகங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்ற மாதிரியான நிலையே இருந்தது. அவ்வாறு இணைக்கப்பட்டவர்களின் நேரமும், சேவையும் வீணடிக்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறு ஊழியர்களாக இணைக்கப்பட்டு, ஏழெட்டு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும். அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் பலரும், பிரதேச செயலகங்களில் வளாகத்துக்குள் இருக்கின்ற மரங்கள், கொட்டகைக்கு கீழ் கூடி நின்று, அதிக நேரங்களில் பேசிக் கொண்டிருப்பதை காண முடியும்.

அது, அந்த ஊழியர்களின் பிழையில்லை. மாறாக, எந்தவித தேவையும் இல்லாமல் அரச வேலையில் ஆட்களை இணைத்துவிட்ட ஆட்சியாளர்களின் பிழை.

நாட்டின் மத்தியதர மக்களின் மனங்களில், அரச வேலைக்கான கௌரவ மற்றும் உறுதிப் பெறுமனம் கேள்விக்கு உள்ளாக்கப்படும் போதுதான், இவ்வாறான முறையற்ற ஊழியர்கள் உள்ளீர்ப்பை, ஆட்சியாளர்கள் நிறுத்துவார்கள். ஏனெனில், தனியார் துறையில் அதிக ஊதியம் பெற்றாலும், அரச வேலைக்கான மத்திய தர மக்களின் ஏக்கம், இன்னும் தீர்ந்த பாடில்லை.

அது, எவ்வாறான நிலையில் இருக்கின்றது என்றால், பட்டதாரிகளாக வந்துவிட்ட அனைவருக்கும், அரசாங்கம் வேலை வழங்க வேண்டும் என்பது நிர்ப்பந்தம் என்ற உணர்நிலையை பேண வைத்திருக்கின்றது. அதுதான், வேலையற்ற பட்டதாரிகள் என்ற பெரும் இளைஞர் – யுவதிகள் கூட்டத்தை சேர்த்திருக்கின்றது.

அவர்களில் குறிப்பிட்டளவானர்கள், தனியார் துறையில் வேலை வாய்ப்பைப் பெற்ற போதிலும் பெரும்பான்மையினர், அரசாங்கம் தொழில் வழங்கும் வரையில், குடும்பங்களில் தங்கி வாழும் நிலை பேணப்படுகின்றது. அந்த நிலையை, அந்தக் குடும்பங்கள் கேள்விக்கு உள்வாக்குவதில்லை.

பட்டதாரி ஆகிவிட்டால், அவருக்கு வேலை வழங்க வேண்டியது அரசின் கடமை. அதனை நிறைவேற்றாதது அரசின் தவறு. அதனால், தொழில் இல்லாமல் தங்கி வாழ்ந்தாலும் அது சம்பந்தப்பட்டவரின் தவறு இல்லை என்பது, மத்தியதர குடும்பங்களிலுள்ள உணர்நிலை.

இந்த நிலை என்பது, நாட்டுக்கு மாத்திரமல்ல வீட்டுக்கும் பெரும் சுமையாகும். இலட்சக்கணக்கான பொறுப்பற்ற இளைஞர் – யுவதிகளை சுமைகளாக உருவாக்கிவிடும் கட்டத்தை, இந்தச் சூழல் உருவாக்கி விட்டிருக்கின்றது.
இந்தக் கட்டத்தைத்தான் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் பிடித்துக் கொண்டு, அரச வேலை என்கிற விடயத்தை தேர்தல் வாக்குறுதிகளில் சேர்த்து, நாட்டின் பொருளாதார நிலையை மிக மோசமாக்கும் கட்டங்களில் இயங்கியிருக்கிறார்கள்.

நாட்டின் பொருளாதாரத்தை மீளத் தூக்கி நிறுத்துவது என்றால், தேவையற்ற செலவுகள் எங்கெல்லாம் செய்யப்படுகின்றனவோ அங்கெல்லாம் ஆணி அடிக்கப்பட வேண்டும். அது, உதவி வழங்கும் பேச்சுகளை ஆரம்பித்த போதே, சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனை.

அதனால்தான், ரணிலும் அவரின் அமைச்சர்களும் நாட்டின் தேவைக்கு அதிகமாக, ஒரு மில்லியன் அரச ஊழியர்கள் இருக்கின்றார்கள் என்று அண்மைக்காலமாக பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இலங்கை போன்றதொரு நாட்டில், ஐந்து இலட்சம் அரச ஊழியர்கள் போதுமென்பது நிபுணர்களின் கருத்து.

அவ்வாறான நிலையில், ஏற்கெனவே இணைத்துக் கொள்ளப்பட்ட அரச ஊழியர்களை, வேலையை விட்டு அனுப்பும் கட்டங்கள் குறித்து அரசாங்கம் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றது. அதன் ஒரு கட்டமே 60 வயதோடு அனைத்து அரச, அரச சார் ஊழியர்களும் ஓய்வுபெற வேண்டும் என்ற அறிவிப்பு.

அதனால், 65 வயது வரை ஓய்வுபெறும் வயது எல்லையை அனுபவித்து வந்த ஆயிரக்கணக்கானவர்கள், இந்த ஆண்டோடு வெளியேற்றப்படுவார்கள். அதனால், பெருமளவு நிதிச்சுமை அரசாங்கத்துக்கு குறையும். அதுபோல, இன்னும் சில ஆண்டுகளுக்கு அரச ஊழியர்களை இணைப்பது தொடர்பில் எந்தவோர் அரசாங்கமோ, கட்சிகளோ தேர்தல் வாக்குறுதிகளை வழங்கும் சூழலும் இல்லை.

சர்வதேச நாணய நிதியத்திடம் கையை நீட்டிவிட்டால், அதன் நிபந்தனைகளுக்கு உடன்பட்டே ஆகவேண்டும். இல்லையென்றால், அந்த நாடுகளின் நிலை படுமோசமாக மாறும். அவ்வாறான நெருக்கடியை நாணய நிதியம் கொடுத்து வந்திருக்கின்றது.

அதனால்தான் எவ்வளவு பொருளாதார நெருக்கடி வந்தாலும் நாடுகள், சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை விரும்புவதில்லை. ராஜபக்‌ஷர்கள் அதனால்தான் நாடு முழுமையாக முடங்கும் நிலை வந்த போதும் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதில் இருந்து பின்நின்றார்கள்.

இறுதியில் வேறு வழியில்லை என்ற போதுதான், அந்தக் கட்டத்தை அடைந்தார்கள். அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லை குறைப்பு போன்று, எதிர்காலத்தில் இன்னும் அரச நிர்வாக ரீதியிலான கட்டுப்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளும். அப்போதும், இவ்வாறான நெருக்கடிகளை மக்கள் சந்திக்க வேண்டி வரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.