;
Athirady Tamil News

சின்னத் தேர்தலும் பெரிய கேள்விகளும் !! (கட்டுரை)

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான சத்தியத்தன்மை குறித்த வாதப் பிரதிவாதங்களே, இன்று அரசியல் அரங்கை நிரப்பியுள்ளன. தேர்தல் நடந்தால், நாட்டில் நிலவும் பெரும்பாலான பிரச்சினைகள், நெருக்கடிகள் எல்லாம் முற்றாகத் தீர்ந்து விடும் என்ற அளவுக்கு அதன் முக்கியத்துவம் பெருப்பித்துக் காட்டப்படுகின்றது.

இந்தப் பின்னணியில், தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தின்படி, வேட்புமனு தாக்கல் பூர்த்தியாகி, ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

எனவே, எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் சபைகளைக் கலைத்து, மார்ச் மாதத்தில் வாக்கெடுப்பை நடத்தப் போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சமகாலத்தில், உள்ளூராட்சி சபைகளின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் குழுவின் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், தேர்தலை நடத்துவதற்கான போதிய நிதி அரசாங்கத்திடம் இல்லை என்ற கதைகளை ஒரு தரப்பினர் கூறத் தொடங்கியுள்ளனர். எவ்வாறிருப்பினும், அந்நிதி ஏற்கெனவே வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டு விட்டதாக, தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

‘சின்னத் தேர்தல்’ என்று பேச்சுவழக்கில் அழைக்கப்படும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு முன்னர், விடை தேட வேண்டிய முக்கியமான பல பெரிய கேள்விகள் உள்ளன.

முதலாவது கேள்வி, மாகாண சபைத் தேர்தல் பற்றியதாகும்.

நாட்டில் உள்ளூராட்சி சபைகளுக்கு முன்னரே, மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் முடிவடைந்து விட்டது. அந்தவகையில், தேர்தல் ஒழுங்குவரிசையில் நோக்கினால், இப்போது அவசரமாக நடத்தப்பட வேண்டியது மாகாண சபைகளுக்கான தேர்தல் ஆகும்.

அப்படியென்றால், இதுவரை மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு, ஏன் ஆர்வம் காட்டப்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது.

மாகாண சபை முறைமையை பற்றிய மீள்பரிசீலனை, 13ஆவது திருத்தம், இந்தியாவின் அழுத்தம் போன்ற இன்னோரன்ன அரசியல் காரணங்களால் மாகாண சபை தேர்தலைக் கடந்து, உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு அரசாங்கம் பாய்ந்துள்ளதாக அனுமானிக்க முடிகின்றது.

அடுத்த கேள்வி, உண்மையிலேயே ‘சின்னத் தேர்தல்’ ஒன்று நடைபெறத்தான் போகின்றதா? அல்லது அப்படியான ஒரு மாயத் தோற்றம் கட்டமைக்கப்படுகின்றதா என்பதாகும்.

பொதுவாக தேர்தல்களை நடத்த விரும்பாத ஓர் ஆட்சியாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலங்களில் விமர்சிக்கப்பட்டார். இப்போது ‘மொட்டு’ ஆதரவு ஜனாதிபதியாகவே அவர் இருக்கின்றார். அவரது சொந்தக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் ஒரேயோர் ஆசனம் மட்டுமே இருக்கின்றது.

இந்நிலையில், எந்தத் தேர்தல் நடத்தினாலும் அதன் பெறுபேறுகள் அதற்கடுத்த தேர்தலில் செல்வாக்குச் செலுத்துவதாக இருக்கும் என்பதுதான் யதார்த்தமாகும். எனவே, இப்படியே காலத்தை இழுத்தடித்துவிட்டு, நேரடியாக பெரிய தேர்தல் ஒன்றுக்கு, அதாவது ஜனாதிபதி தேர்தலுக்குச் செல்லலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் கசிந்துள்ளது.

ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு தேர்தல்கள் அடிப்படையானவை என்பதில், யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. உரியகாலத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் பொது விதியுமாகும்.

ஆனால், நாடும் நாட்டு மக்களும் வாழவே வழியில்லாமல் இருக்கின்ற இன்றைய காலகட்டத்தில், தேர்தல் ஒன்று அவசியமானதுதானா என்ற கோணத்தில் முன்வைக்கப்படும் கேள்வி, புறக்கணிக்கப்படக் கூடியதல்ல.

தேர்தலுக்காகவும் அதன் பின்னர் உள்ளூராட்சி சபைகளை நிர்வகிக்கவும் பெருந்தொகை நிதியைச் செலவிட வேண்டியிருக்கின்றது. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் வழிப்படுத்தலில் செயற்படுகின்ற அரசாங்கம், நாணய நிதியம் எந்த எல்லை வரை தேர்தலை நடத்த இடம்கொடுக்கும் என்பதும் ஒரு யதார்த்தமான கேள்விதான்.

ஆகவேதான், உள்ளூராட்சி தேர்தல் மிகக் கிட்டிய காலத்தில் நடைபெறுவதற்கான நிகழ்தகவுகள் மிகக் குறைவாக இருப்பதாக, அரசியல் அரங்கில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

கசியும் தகவல்கள் இப்படியான சந்தேகங்களுக்கு வித்திட்டாலும், பொதுவெளியில் அரசாங்கம் தேர்தலை நடத்தப் போவதாகவே உறுதியாகக் கூறி வருகின்றது. அதுமட்டுமன்றி, உள்ளூராட்சி தேர்தலுக்கான தடபுடல் ஏற்பாடுகளை, தேர்தல்கள் ஆணைக்குழுவும் மேற்கொண்டு வருகின்றமை சாத்தியத்தன்மை குறித்த நம்பிக்கை ஏற்படக் காரணமாகியுள்ளது.

இதேவேளை, தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியத்தன்மை குறித்த கேள்விகளை விட, உள்ளூராட்சி மன்றங்கள், கடந்த காலங்களில் ஆற்றிய சேவையின் செயற்றிறன் அல்லது மக்களுக்கு கிடைத்த பயன் பற்றிய கேள்விகள் மிகப் பெரியவையாகும்.

நாட்டில் 341 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. இவற்றில் 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகள் உள்ளடங்குகின்றன. இவற்றில், ஒரு பிரதேச சபை தவிர்ந்த ஏனைய அனைத்துச் சபைகளின் ஆட்சிக்காலம் ஏற்கெனவே முடிவுற்று, ஒரு வருடத்தால் நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது இருக்கின்றன.

இதுவெல்லாம் சரிதான்! ஆனால், இந்த உள்ளூராட்சி மன்றங்களும் அதன் தலைவர்களும் உறுப்பினர்களும் தமது ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு எந்தளவுக்கு வினைத்திறனாக, ஆக்கபூர்வமாக செயற்பட்டு இருக்கின்றார்கள் என்ற கேள்வியை, இப்போது எழுப்ப வேண்டியுள்ளது.

2018இல் உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெற்றதற்குப் பின்னர், நாட்டில் பல எதிர்பாராத சம்பவங்கள் இடம்பெற்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், கொரோனா அலைகள், எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடி என இன்றுவரை ​இத்தகைய நெருக்கடிகள் தொடர்கின்றன.

இவையெல்லாம் வழக்கத்துக்கு மாறான, அசாதாரண சூழ்நிலைகள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இக்காலத்திலும் கூட, உள்ளூராட்சி மன்றங்களுக்கு, காலம் வித்தியாசமான வாய்ப்புகளை வழங்கியது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தத் தருணங்களில், குறிப்பாக முஸ்லிம், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளின் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் தமது அதிகாரங்களை எந்தளவுக்கு மக்களுக்காக பயன்படுத்தினார்கள்?

தமக்கு வாக்களித்த மக்களுக்கு சேவையாற்றும் விடயத்தில், எத்தனை புள்ளிகளை அவர்கள் பெற்றிருக்கின்றார்கள்? மீண்டும் தேர்தல் கேட்டு வருவதற்கு அவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது போன்ற கேள்விகளுக்கு, மக்கள் விடைகள் காண வேண்டும்.

இன்று ஆட்சியில் இருப்பவர்கள் மட்டுமன்றி, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற நமது எம்.பிக்களும் மக்களை மறந்து ஆடுகின்ற கூத்தை, நாம் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம். அதிலும் குறிப்பாக, முஸ்லிம் எம்.பிக்கள் எந்தளவுக்கு மக்கள் நலனை கணக்கிலெடுக்காமல் செயற்படுகின்றார்கள் என்பது பட்டவர்த்தனமானது.

பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளுக்கான உறுப்பினர்களின் ‘நாற்றுமேடை’ போலவே, உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளதாக குறிப்பிடலாம். பெரும்பாலும் உள்ளூராட்சி சபையில் பதவி வகித்தவர்கள், அடுத்தடுத்த காலங்களில் மாகாண சபைக்கு, பாராளுமன்றத்துக்குப் போட்டியிடுகின்றார்கள்.

ஆகவே, உள்ளூராட்சி சபைகளுக்கு சிறந்தவர்களை மட்டும் தெரிவு செய்வதுடன், மக்களை மறந்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். எக்காரணம் கொண்டும் அவர்கள் அடுத்த கட்டமாக, மக்களை ஏமாற்றுவதற்கு இடமளிக்கக் கூடாது.

அந்தவகையில் பார்த்தால், சிங்கள மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் மக்கள் கேள்வி எழுப்புகின்ற தன்மை அதிகம் என்பதால், அச்சபைகளின் செயற்பாடுகள் ஓரளவுக்கு பரவாயில்லை எனலாம். தமிழ் மக்களின் பிரதேசங்களில் நிலைமை திருப்திப்படும் விதத்தில் இல்லை.

முஸ்லிம்கள் வாழும் பகுதிகளின் அநேக பிரதேச சபைகள், மக்கள் சார்பு அரசியலில் தோல்வி அடைந்துள்ளதாகவே தோன்றுகின்றது. கொரோனா காலத்தில் அயல் பிரதேசத்தை மறித்து கயிறு கட்டினால், ஊரைப் பாதுகாக்கலாம் எனக் கருதிய சபை தவிசாளரின் நடவடிக்கையும் ‘ஒரு பதச்சோறாக’ இந்த இடத்தில் நினைவுக்கு வந்து போகின்றது.

உண்மையில், மக்களுக்காக உயர்ந்த பட்சம் சேவையாற்றுவதற்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்துவதை விடுத்து, ஊரில் குப்பை அள்ளுவதையும், மின்விளக்கு பொருத்துவதையும் கூட சரிவரச் செய்ய முடியாமல் போன சபைகளும் கால நீட்டிப்பை அனுபவித்து வருகின்றன.

இந்நிலையில், ‘நீங்கள் இந்த ஆட்சிக் காலத்தில் என்ன செய்தீர்கள்’ என்று ஒரு முன்னேற்ற அறிக்கையை சபை தலைவரிடம், உறுப்பினர்களிடம் கேட்டால், சமர்ப்பிப்பதற்கு அவர்களிடம் உருப்படியாக எதுவும் இருக்காது என்பதே கசப்பான உண்மையாகும்.

ஆனால், முஸ்லிம்கள் வாழும் பல சபைகளின் தவிசாளர்களின் உறுப்பினர்களின், மாகாண சபை உறுப்பினர், எம்.பி கனவுக்கு மட்டும் பஞ்சமில்லை. இந்த இலட்சணத்தில்தான் இப்போது உள்ளூராட்சி சபை தேர்தல் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம்.

உள்ளூராட்சி சபையில் மட்டுமன்றி, மாகாண சபையிலும் பாராளுமன்றத்திலும் அங்கம் வகிக்கின்ற அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் பற்றி, மக்கள் தமக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காணாமல் தொடர்ச்சியாக வெறுமனே வாக்களிக்கும் இயந்திரங்கள் போல இருக்கும் காலம் வரைக்கும், இந்தத் தலைவிதி மாறப் போவதில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.