;
Athirady Tamil News

வெட்கம்கெட்ட அரசியல்!! (கட்டுரை)

0

இலங்கை அரசியலில் வெட்கம்கெட்ட போக்கை தொடர்ச்சியாக கண்டு வருகின்றோம். வெட்கம்கெட்டவர்களால் நமது அரசியல் நிரம்பியிருப்பதே இதற்கு அடிப்படைக் காரணமாகும். இப்படியான பண்புகளைக் கொண்டவர்களால் மட்டுமே இந்த அரசியலில் எது நடந்தாலும் நிலைத்திருக்க முடிகின்றது என்பது வேறுகதை.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏம்.எம்.ஹிஸ்புல்லா இணைந்து கொண்டமை இப்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியிருக்கின்றது. முன்னதாக ஆளுக்காள் நையாண்டி செய்த ரவூப் ஹக்கீமும் ஹிஸ்புல்லாவும் இப்போது கொஞ்சம்கூட வெட்கமின்றி இணைந்து கொண்டுள்ளதாகவே விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இன்னும் ஒரு வாரத்தில் இதுவெல்லாம் அடங்கி விடும்.

முஸ்லிம் மக்களுக்கான அரசியல் என்று நோக்குகின்ற போது இரு முக்கிய தலைவர்கள் ஒன்றிணைந்தது மிகவும் வரவேற்கத்தக்க விடயம் என்பதில் இரு நிலைப்பாடுகள் இருக்க முடியாது. இதுபோல அனைத்து முஸ்லிம் தலைவர்களும் அணிகளும் சமூகத்தை மையமாகக் கொண்டு இணைந்து செயற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நீண்டகாலமாக இருக்கின்றது.

ஆனால், ஹக்கீம் – ஹிஸ்புல்லா இணைவது போன்ற அல்லது பெருந்தேசிய மற்றும் தமிழ்த் தேசிய அரசியலில் இடம்பெற்றுக் கொண்டிருப்பது போன்ற இணைவுகள், கூட்டுகள் உண்மையில் சமூக நோக்கம் கருதியதா என்பதில் இன்னும் சந்தேகமிருக்கின்றது.

இலங்கைச் சூழலில், தேர்தல் கால கூட்டுகளும் தேர்தலுக்கான கூத்துகளும் நாமறியாத சங்கதியுமல்ல! தேர்தலையோ அல்லது சுய அரசியல் இலாபத்தையோ மையமாக வைத்து அரசியல் முடிவுகளை எடுப்பதும், சேர்வதும் பிரிவதுமான வெட்கம்கெட்ட போக்கு எப்போது முடிவுக்கு வரும் என்பதுதான் தெரியவில்லை.

பொதுவாக இலங்கை அரசியலுக்கோ அல்லது முஸ்லிம் அரசியலுக்கோ இதுவொன்றும் புதிதல்ல; இது முதலாவது நிகழ்வும் அல்ல; கடைசி நிகழ்வும் அல்ல. அத்துடன் யதார்த்த அரசியலைப் பொறுத்தமட்டில், இதில் ஆச்சரியப்படுவதற்கும் எதுவுமில்லை.

‘அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை’ என்று சொல்வது குறிப்பாக, நமது அரசியலுக்கு மிகப் பொருந்தக் கூடிய உவமானம் ஆகும். ஆனால், இப்போது கைகோர்க்கின்ற அரசியல்வாதிகள் கடந்த காலத்தை மறந்து, சமூக நலனுக்காக கடைசிவரை உண்மையில் இணைந்து செயற்படுவார்கள் என்றால், இந்த விமர்சனங்கள் இத்தோடு முடிவுக்கு வந்து விடும்.

எது எப்படியிருப்பினும், நம்மால் மக்களுக்குச் சேவை செய்யவில்லை; நமது வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லையே என்பதற்காக அரசியல்வாதிகள் ஒருபோதும் வெட்கப்பட்டதில்லை. செயற்பாட்டு அரசியலில் மேற்கொண்ட பெரிய ஊழல்கள், குற்றங்களுக்காக சம்பந்தப்பட்டவர்கள் மனம் வருந்திய, வெட்கப்பட்ட, பிராயச்சித்தம் தேடிய வரலாறு நமது நாட்டில் கிடையாது.

மேற்கத்தேய நாடுகளில் மட்டுமன்றி அரசியல் ரீதியாக பக்குவப்பட்ட சில ஆசிய நாடுகளில் கூட, ஓர் அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால் அல்லது அவரது பொறுப்பற்ற தனத்தால் ஒரு தவறு நேர்ந்து விட்டால், உடனடியாக பதவி விலகும் முடிவை எடுத்துவிடுவார். பொறுப்புக்கூறலின் ஓர் அடிப்படையாகவே இதனை உலகம் நோக்குகின்றது.

ஆனால், நமது நாட்டில் எல்லாம் தலைகீழாகவே நடக்கின்றது. இதற்கு நல்ல உதாரணம் ராஜபக்‌ஷர்களின் ஆட்சியாகும். நாட்டில் திட்டமிடப்படப்படாத ஓர் ஆட்சியை நடத்தி, அதன் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதற்காக ஒருபோதும் ராஜபக்‌ஷர்கள் வெட்கப்பட்டதாக, மனம் வருந்தி பிராயச்சித்தம் தேட முனைந்ததாக தெரியவில்லை.

குறிப்பாக, கோட்டபாய ராஜபக்‌ஷ மீதே கணிசமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதும் அவர் துரத்தியடிக்கப்படும் வரை, ஜனாதிபதி பதவியில் எந்தவிதமான உறுத்தலும் இன்றி, அகலக் கால்விரித்து அமர்ந்திருந்தார். இப்போது மீண்டும் எந்தச் சலனமும் இன்றி நாடு திரும்பினார்.

ஆட்சி கவிழ்க்கப்பட்ட ராஜபக்‌ஷர்கள் மீண்டும் அரசியலில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியுள்ளனர். தமது தவறுகளுக்கு அவர்கள் பிராயச்சித்தம் தேடும் பாணியிலான அரசியல் செயற்பாடுகளை பெரும்பாலும் அவதானிக்க முடியவில்லை.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி உள்ளடங்கலாக, பெரும் ஊழல்களுடன் தொடர்புபட்ட முக்கிய புள்ளிகள் தண்டிக்கப்படவில்லை. நாட்டையே சூறையாடி வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய முன்னைய ஆட்சியாளர்களுக்கு, புதிய ஜனாதிபதியும் அரசும் எந்தப் பாடத்தையும் படிப்பிக்கவில்லை. வெட்கமின்றி, ஒருவரை ஒருவர் பாதுகாக்கும் பாணியிலான அரசியலே இனியும் தொடருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

மறுபுறத்தில், ராஜபக்‌ஷ ஆட்சியை கவிழ்ப்பதற்காக பின்னணியில் நின்ற அரசியல் சக்திகளும் இப்போது வெட்கம் கெட்ட தனமாகவே செயற்படுவதாகச் சொல்லலாம்.

அதேபோல், ராஜபக்‌ஷர்கள் உள்ளடங்கலாக இந்த நாட்டை நாசமாக்கிய பெரும்பான்மை, சிறுபான்மை அரசியல்வாதிகளுக்கு, இனிவரும் தேர்தல்களில் வெட்கம் கெட்ட தனமாக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதுதான் உச்சக்கட்ட மோசமான நிலையாகும். அதாவது. மக்கள் சுரணையில்லாமல் செயற்படுகின்ற போக்கு.

இது தேர்தல் காலம் !

நமது அரசியலின் மிக உச்சபட்ச வெட்கம்கெட்ட தனங்கள் எல்லாம் வெளிப்படும் ஒரு பருவகாலமாக இதனைக் கொள்ளலாம். ஹிஸ்புல்லா – ஹக்கீம் இணைவு மட்டுமன்றி, இன்னும் பல விநோத நிகழ்வுகளும் இடம்பெறத் தொடங்கியுள்ளன. எல்லாம் மக்களுக்காகவே என்ற மாயத் தோற்றமும் கட்டமைக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் ஒருவரை ஒருவர் கிண்டலடித்த, விமர்சித்த அரசியல்வாதிகள் எத்தனையோ பேர் பின்னர் இணைந்தார்கள். நகமும் சதையுமாக இருந்த பலர் பிளவுபட்டு வேறு வேறு திசைகளில் பயணித்து, மீண்டும் இணைந்து கொண்டார்கள். இலங்கை அரசியலுக்கு இது பொது இயல்பு எனலாம்.

முஸ்லிம் அரசியலில் பரவலாகவும் தமிழர் அரசியலில் அவ்வப்போதும் இந்தக் கூட்டுகள்; மன்னிக்கவும்! கூத்துகள் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த இடத்தில்தான் வாக்காளர்களான மக்கள் மிகத் தெளிவுடனும் கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

ஆகப் பிந்திய உதாரணமான ஹக்கீம் – ஹிஸ்புல்லா இணைவை எடுத்துக் கொள்வோம். கடந்த காலத்தில் இவர்கள் இருவரையும் ஆதரித்த மக்கள் பிரிவின,ர் இரு துண்டங்களாக துருவப்படுத்தப்பட்டிருந்தனர். எதிர் எதிர் அரசியல் செய்தனர்;. இப்போது தலைவர்கள் இருவரும் இலகுவாக இணைந்து கொண்டனர். ஆனால் இருதரப்பு தொண்டர்களின் நிலைதான் தர்மசங்கடமானது.

இது ஒரு நிகழ்வு மட்டும்தான். இது தேசிய ரீதியில் ஒவ்வோர் ஊரிலும் காலகாலமாக நடந்து கொண்டிருக்கின்றது என்பது முக்கியமானது.

நாம் ஆதரிக்கின்ற தலைவருக்காக, கட்சிக்காக இரு குழுக்களாக பிரிந்தவர்கள்; ஆளுக்காள் சண்டையிட்டவர்கள்; தங்கள் மீது அடிகளை வாங்கிக் கொண்ட ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களில் அநேகர் கடைசியில் அரசியல்வாதிகளால் கைவிடப்பட்டனர் என்பதை மறந்து விடக் கூடாது.

இன்று நீங்கள் வேறுவேறு கட்சிகளுக்கு ஆதரவளித்து, உங்களுக்கு இடையில் சண்டை பிடித்துக் கொள்ளலாம். ஆனால், இன்னும் சில காலத்தில் அரசியல்வாதிகள் வெட்கமின்றி கைகோர்த்து விடுவார்கள். பொதுமகனான நீங்கள்தான் ஒருவரை முகத்தை பார்க்க வெட்கப்பட்டு, சங்கடப் பட வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

கடந்த காலங்களில் குறிப்பாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் கட்சிசார் முரண்பாடுகள், பிரிவுகள் ஏற்பட்டன. மாகாண சபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் ஊர்களுக்கு இடையிலும் குழுக்களுக்கு இடையிலும் கருத்துச் சண்டைகளும் கள மோதல்களும் நடந்தேறின. உயிர், உடமைகளை இழக்க வேண்டி ஏற்பட்டது.

ஆனால், எல்லாக் காலமும் நிலைமை இப்படியே இருக்காது. அரசியல்வாதிகள், தமது ஆதரவாளர்களைப் பற்றிக் கவலைப்பாடாது சேர்ந்து விடுவார்கள் அல்லது பிரிந்து விடுவார்கள். எனவே ஆதரவாளர்கள் தேர்தல் என்ற போதை அடங்கி, சுய நினைவுக்கு திரும்புகின்ற போது தமது வெட்கம்கெட்ட செயலை எண்ணி உள்ளுக்குள் வெட்கப்பட வேண்டிய நிலை உருவாகும்.

இந்தத் தேர்தலில் இல்லாவிட்டாலும் அதற்குப் பிறகாவது, இலங்கை அரசியலில் சிறியதும் பெரியதுமான மாற்றங்கள் நிகழத்தான் போகின்றன. அது என்னவென்று நம்மால் இப்போது முன்கணிக்க முடியாது. எனவே எல்லாச் சூழ்நிலைகளுக்கும் முகம்கொடுக்கக் கூடியவாறான நடைமுறை ஒன்றை பொதுவாக நாட்டு மக்களும், விசேடமாக முஸ்லிம் சமூகமும் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.

தேர்தல் காலத்தில் யாருக்காவும், எந்தக் கட்சிக்காகவும், எந்தத் தலைவருக்காகவும் மக்கள் இன்னுமொரு தரப்புடன் முரண்படத் தேவையில்லை. நாம் சண்டைபிடித்து ஆதரவு தேடுமளவுக்கு தகுதியுள்ள அரசியல் கட்சிகளும் இலங்கையில் இல்லை.

அதனையும் மீறி மக்களும் ஆதரவாளர்களும் இத்தேர்தல் காலத்தில் வெட்ககரமான, அநாகரிகமான காரியங்களில் ஈடுபட்டால், எல்லா ஆட்டங்களும் முடிந்த பிறகு வெட்கம்கெட்ட தனமாகவே இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டியிருக்கும். இதுதான் ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் மட்டுமன்றி, சமூகத்திலும் நடக்கின்றது.

நாம் உண்மையில் நாட்டில் ‘கட்டமைப்பு’ அல்லது ‘முறைமை’ மாற்றம் ஒன்றை வேண்டி நிற்கின்றோம் என்றால், அது மக்கள் பிரதிநிதிகளை மாற்றுவது மட்டுமன்றி, நமது அரசியல் பண்புகளை மாற்றுவதிலும் இருந்து தொடக்கி வைக்கப்பட வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.