;
Athirady Tamil News

முதலீட்டாளர்களை அடித்து விரட்டும் நாடு !! (கட்டுரை)

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓரளவுக்காவது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார் என்பதையும் பொதுஜன பெரமுன இன்னமும் திருந்தவில்லை என்பதையுமே, கட்டானையில் உள்ள ஓமான் நாட்டவருக்குச் சொந்தமான ஆடை உற்பத்தித் தொழிற்சாலை மீதான தாக்குதல் எடுத்துக் காட்டுகிறது.

கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி இந்தத் தாக்குதல் இடம்பெற்றது. அன்றிலிருந்து ஒன்றரை மாதம் சென்றுள்ள போதிலும், பொலிஸார் தாக்குதலை நடத்திய குண்டர்களை இன்னமும் கைது செய்யவில்லை.

இலங்கையின் பொலிஸார் திறமையற்றவர்கள் அல்லர். எந்தவொரு குற்றச் செயலும் இடம்பெற்று, சில நாள்களில் குற்றவாளிகளை கண்டுபிடித்து, கைது செய்வர். ஆனால், அவர்கள் சில சந்தர்ப்பங்களில் குற்றவாளிகளை கைது செய்ய முற்படுவதில்லை. ஆளும் கட்சி அரசியல்வாதிகள் பின்புலத்தில் இருந்து நடத்திய குற்றச் செயல்கள், சிறுபான்மையினருக்கு எதிராக பெரும்பான்மையினர் நடத்திய குற்றச் செயல்கள், ஏழை மக்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் போன்றவற்றை செய்தவர்களைக் கைது செய்ய அவர்கள் அக்கறை செலுத்துவதில்லை.

சிறுபான்மையினருக்கு எதிராகவும் ஏழைகளுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள், ஊடகங்களில் பெரிதாக இடம்பிடித்துக் கொண்டால் சிலவேளை, பொலிஸார் சற்றுத் துணிந்து செயலாற்றுவர். ஆயினும் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் பின்புலத்தில் இருந்து செய்த குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய, அவர்கள் துணியவே மாட்டார்கள். ஊடக பிரசாரத்தின் காரணமாக அவ்வாறு சந்தேக நபர்களை கைது செய்தாலும், குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளும் வகையிலேயே சட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

இதனால் தான், திருகோணமலையில் ஐந்து மாணவர்களைப் படுகொலை செய்த சம்பவம், ரவிராஜ் கொலைச் சம்பவம், ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலைச் சம்பவம் போன்றவற்றில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. அதனாலேயே, 2014ஆம் ஆண்டு பேருவளை பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களின் போதும், 2019ஆம் ஆண்டு மினுவாங்கொடையை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்களின் போதும் கொல்லப்பட்டவர்கள் விடயத்தில் நீதி வழங்கப்படவில்லை.

கட்டான ஆடைத் தொழிற்சாலை மீதான தாக்குதலை நடத்தியவர்கள் கைது செய்யப்படாதிருப்பதற்கும் அதுவே தான் காரணம். கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியே அதன் பின்னால் உள்ளார் என்று ஊடகங்கள் பரவலாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், தாக்குதல் நடத்திய குண்டர்களை கைது செய்யாது, தொழிற்சாலையை கட்டானையில் இருந்து, வேறு பகுதிக்கு எடுத்துச் செல்வதையே அரசாங்கம் ஊக்குவிக்கிறது; இது ஒரு கேவலமான நிலைமையாகும்.

‘அல் ஒபைதானி’ என்ற பெயரிலான இந்த ஆடை உற்பத்தி தொழிற்சாலை மீதான தாக்குதலை, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவின் கையாட்களே நடத்தியுள்ளார்கள் என்று கடந்த வாரம், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறப்பினர் நளின் பண்டார, பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதை இந்திக்க அநுருத்த மறுத்தாலும், அவரது மறுப்பை எத்தனை பேர் ஏற்றுக் கொண்டார்கள் என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

கட்டானையில் அமைந்துள்ள ‘அல் ஒபைதானி’ நிறுவனம், ஒமான் நாட்டிலுள்ள பல்தேசிய நிறுவனம் ஒன்றின் கிளையாகும். கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி, ஐந்து பேரைக் கொண்ட கும்பல், திடீரென நிறுவன வளாகத்துக்குள் புகுந்து, முதலில் அதன் பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கியுள்ளது. அதையடுத்து, அதே வளவில் அமைந்த அதன் உரிமையாளரின் விடுதிக்குள் புகுந்து, உரிமையாளரையும் கடுமையாகத் தாக்கியுள்ளது. மிரட்டி, கப்பம் கறப்பதே அவர்களது நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.

சம்பவம் இடம்பெற்று ஆறு நாள்களுக்குப் பின்னர், ஏப்ரல் ஐந்தாம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய முதலீட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, இத்தாக்குதலில் ஈடுபட்டோரை விரைவில் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தவதாகக் கூறினார். ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு இருந்த பொலிஸாரின் விசாரணைகளைப் பற்றி, தாம் திருப்தி அடையவில்லை என்றும் எனவே, விசாரணைகளை இரகசியப் பொலிஸாரிடம் கையளிப்பதாகவும் அவர் அப்போது கூறினார்.

இந்த நிறுவனத்தில் நிச்சயமாக சி.சி.ரி.வி பொருத்தப்பட்டு இருக்கும். எனவே, தாக்குதல் நடத்த வந்தவர்களை அடையாளம் காண்பது அவ்வளவு சிரமமாக இருக்காது. அவர்கள் முகமூடி அணிந்து வந்ததாகவே கூறப்படுகிறது. ஆயினும் அவர்களைக் கைது செய்ய, பொலிஸார் இவ்வளவு நாள்கள் தாமதிப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

தாக்குதல் நடத்தப்பட்ட உடனேயே, நிறுவன உரிமையாளர் நிறுவனத்தை மூடிவிட்டு, நாடு திரும்ப முடிவு செய்ததாக செய்திகள் கூறின. உண்மையிலேயே பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று தெரிந்தால், அவர் வேறு என்ன தான் செய்ய முடியும்? நிறுவன உரிமையாளர் நாடு திரும்பத் தயாராகி வருவதாக, கடந்த வாரம் செய்திகள் கூறின. அப்போது தாக்குதல் இடம்பெற்று சுமார் ஐந்து வாரங்கள் உருண்டோடிவிட்டிருந்தன.

அப்போது தான் இந்நாட்டுத் தலைவர்களுக்கு நிலைமையின் பாரதூரத்தன்மை விளங்கியது போலும்! எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், ‘அல் ஒபைதானி’ நிறுவனத்தின் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிறுவனத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாக கூறியிருக்கிறார்.

அதன் பிரகாரம், நிறுவன உரிமையாளர் நாடு திரும்பும் யோசனையை கைவிட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது. எனினும், தமது நிறுவனத்தைத் தொடர்ந்தும் கட்டானையில் நடத்துவதா அல்லது நாட்டில் மற்றொரு பிரதேசத்துக்கு எடுத்துச் செல்வதா என்பதை, தமது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முடிவு செய்வதாகவும் அவர் அமைச்சரிடம் தெரிவித்து இருந்தார்.

மற்றொரு பிரதேசத்துக்கு நிறுவனத்தை எடுத்துச் செல்வதா என்று அவர் யோசிப்பது, அவர் அமைச்சரின் பாதுகாப்பு உத்தரவாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. தம்மைத் தாக்கியவர்கள் பலம்வாய்ந்தவர்கள் என்பதை, ஓமான் நாட்டுக்காரர் அறிந்துள்ளார் என்பதையும் அது காட்டுகிறது.

இந்நிறுவனம், இலங்கை முதலீட்டுச் சபையின் கீழேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக முதலீட்டுச் சபையும் கடந்த ஒன்பதாம் திகதி கூறியது. 10ஆம் திகதி அறிக்கையொன்றை வெளியிட்ட முதலீட்டுச் சபை, ‘இந்த ஆடை உற்பத்தித் தொழிற்சாலையை, மற்றொரு பிரதேசத்துக்கு இடமாற்றம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ எனவும் குறிப்பிட்டிருந்தது.

நளின் பண்டார எம்.பி, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவைப் பற்றிக் குறிப்பட்ட கருத்து பிழையாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாக கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், இத்தாக்குதலின் பின்னால் இருந்தார் என்பதை, இப்போது சகலரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆயினும் அந்த அரசியல்வாதியையோ அவரது குண்டர்களையோ கைது செய்ய, பொலிஸாரால் இன்னமும் முடியவில்லை.

இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகள் அத்தியாவசியமாக இருக்கும் நிலையிலேயே, மிகவும் முக்கியமானதொரு முதலீட்டாளர் மீதான இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள போதிலும், அதன் மூலம் நாடு தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நிச்சயமாக மீளும் என்ற உத்தரவாதம் இல்லை.

ஏற்கெனவே பெற்ற கடனை செலுத்த முடியாமலும், அதனால் மேலும் கடன் பெற முடியாமலும் இருந்த இலங்கைக்கு, மேலும் கடன் பெற நாணய நிதியம் வாய்ப்பளித்துள்ளது. அத்தோடு நாட்டுக்குள் இருந்து வரிகள் மூலமும் அரச வர்த்தக நிறுவனங்களை விற்றும் பணத்தை பெற்று, அரச நிதி நிலைமையை பலப்படுத்திக் கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளது. ஆயினும், நாட்டை அபிவிருத்தி செய்யும் திட்டமோ அல்லது வெளிநாட்டு செலாவணியை பெருக்கும் திட்டமோ நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தில் இல்லை.

உள்நாட்டு உற்பத்திகளை பெருக்கியும் வெளிநாடுகளுக்கு தேவையான தொழில்நுட்ப சேவைகளை வலுப்படுத்தியும், நாட்டை பொருளாதார ரீதியாக வளப்படுத்தும் திட்டத்தை அரசாங்கமே வகுக்க வேண்டும். அதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் அத்தியாவசியமாகும். ஆனால், இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திருப்தியடையும் சூழ்நிலைமை இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகும்.

30,000 தொழில் வாய்ப்புகளை வழங்கக்கூடிய 19 தொழிற்சாலைகளை இலங்கையில் ஆரம்பிக்க அனுமதி கேட்டு, கடந்த எட்டு ஆண்டுகளாக 20 முறைக்கு மேல் இலங்கைக்கு வந்துள்ளதாக கொரிய முதலீட்டாளர் ஒருவர், கடந்த வாரம் ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் வெளியான கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார். தாம் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இலஞ்சம் வழங்காமையே இதற்குக் காரணம் என்பதை அவர் அதில் சூசகமாக குறிப்பிட்டு இருந்தார்.

அண்மையில், ‘டெய்லி மிரர்’ பத்திரிகையுடனான நேர்காணல் ஒன்றில், முதலீடுகளைப் பற்றிக் குறிப்பிட்ட அவுஸ்திரேலிய தூதவர் போல் ஸ்டீவன்ஸ், அவுஸ்திரேலிய முதலீடுகளுக்கு இலங்கையில் அனுமதி பெறுவது கடினமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட ‘2020 Investment Climate Statements: Sri Lanka’ என்ற அறிக்கையிலும் அமெரிக்க முதலீட்டாளர் தொடர்பில் இதே கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதொட்டமுல்ல குப்பை மேட்டை, மறுசுழற்சி செய்வதற்காக அதன் ஆரம்பத்திலிருந்து 108 முதலீட்டாளர்கள் வந்துள்ளதாகவும் ஆனால், அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அவர்களிடம் இலஞ்சம் கேட்டதால் அவர்கள் திரும்பிச் சென்றதாகவும் அப்போதைய அரச நிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி, அக்குப்பை மேடு சரிந்த நாள்களில் கூறியிருந்தார்.

இந்த இலஞ்சப் பேர்வழிகள், முதலீட்டாளர்களை வரவிடுவதுமில்லை; வந்தவர்களையும் அடித்து விரட்டவும் முயல்கிறார்கள். நாடு உருப்படுமா?

You might also like

Leave A Reply

Your email address will not be published.