;
Athirady Tamil News

பருமனான குழந்தைகளுக்கு டீடாக்ஸ் டயட்?! (மருத்துவம்)

0

சினிமா பிரபலங்கள், மாடலிங் கலைஞர்கள், பாடி பில்டர்கள் பின்பற்றி வந்த டீடாக்ஸ் டயட்டை தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் பின்பற்றி வருகிறார்கள். அத்துடன் பருமனான தங்கள் குழந்தைகளுக்கும் டீடாக்ஸ் டயட்டைப் பரிந்துரைப்பதாகவும் கேள்விப்படுகிறோம். டீடாக்ஸ் டயட் என்பது என்ன, குழந்தைகளும் அதைப் பின்பற்றலாமா என்று உணவியல் நிபுணர் கோமதி கௌதமனிடம் கேட்டோம்…

‘‘ஒரு நாள் முழுக்க அல்லது குறிப்பிட்ட வேளை உணவுக்குப் பதிலாக வெறும் பச்சைக் காய்கறிகள், பழங்களை மட்டுமே உணவாகச் சாப்பிடுவது அல்லது காய்கறிகளை வேகவைத்துச் சாப்பிடுவதுதான் Detox diet. இந்த டீடாக்ஸ் டயட்டைக் கடை பிடிக்கும்போது காய்கறிகள், பழங்களில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளையும், நச்சுக்களையும் வெளியேற்றிவிடும். இதனால் உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக முடிவதால் டீடாக்ஸ் டயட்டைப் பலரும் விரும்புகிறார்கள்.

அந்த வகையில் டீடாக்ஸ் டயட் என்பது நல்லதுதான் என்றாலும் 20 வயதுக்கு மேற்பட்டோர் கடைபிடிப்பதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும். குழந் தைகளிடத்தில் டீடாக்ஸ் டயட்டைப் பழக்கப்படுத்த நினைப்பதும், முயற்சிப்பதும் தவறு. இதனால் அவர்களுக்கு மற்ற அத்தியாவசியச் சத்துகள் கிடைக்காமல் தடைபடும். குழந்தைகளின் உயரம் மற்றும் எடையை சோதிக்கும்போது, பரிந்துரைக்கப்பட்ட எடையைக் காட்டிலும் 5 கிலோ அதிகமாக இருந்தால் மட்டுமே உடல் பருமனான குழந்தையாக கருத்தில் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையிலேயே தகுதிவாய்ந்த மருத்துவர் உதவியை நாட வேண்டும்.

உயரத்துக்கேற்ற எடையும், நேர்த்தியான உடலமைப்பும் கொண்ட குழந்தைகளைப்பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. சிலர் ஒல்லியாக இருந்தாலும் தொப்பை வெளியே தள்ளி இருக்கும். இவர்களின் உணவுப்பழக்கத்தைத்தான் கவனிக்க வேண்டும். தேவைக்கும் அதிகமான கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை கொடுப்பதாலேயே இதுபோன்ற உடலமைப்பு ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக, குழந்தைகளுக்கு புரத உணவுகளை அதிகமாக கொடுத்து பழக்க வேண்டும். மனிதனின் உடல் கட்டமைப்புக்கு புரதச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது என்பதுடன் உயரமாக வளர்வதற்கும் புரதம் அவசியமானது.

எனவே, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்துக் கொண்டு புரதம், வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த சரிவிகித உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். இது அவர்களின் உடல்பருமனை குறைத்து ஆரோக்கியமாக வளர உதவும். பெரியவர்கள் எடுத்துக் கொள்வதுபோல் பழங்கள், காய்கறிகள் அல்லது ஜூஸ் போன்ற ‘டீடாக்ஸ்’ உணவுகளை மட்டுமே கொடுக்கக்கூடாது. இது, குழந்தைகளின் மூளை ஆற்றலை குறைப்பதோடு, கவனக்குறைவையும் ஏற்படுத்தும். மேலும் ஓடி ஆடி விளையாடும்போது நீர்ச்சத்து குறைந்து மயக்கமடைந்துவிடுவார்கள்.

பெரியவர்களைப் போல சமநிலைப்படுத்திக் கொள்ளத் தெரியாது. குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு அன்றாட காலை, மதிய உணவுகளில் தலா ஒரு வகை பொரியலும், ஒரு நாளைக்கு ஒரு பழமும் சாப்பிடக் கொடுத்தாலே போதுமானது. மேலும், மாலை நேரங்களில் காய்கறி சூப்பும், அவ்வப்போது நறுக்கிய காய்கறிகளையும் கொடுக்கலாம். குழந்தைகளின் எடை குறைய டயட் மட்டுமே சரியான வழியல்ல. அவர்களை ஓடியாடி விளையாட விடவும் அல்லது ஏதேனும் ஒரு விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட வைப்பதும் அவசியம்’’ என்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.