;
Athirady Tamil News

அந்நியச் செலாவணியை ஈட்டும் முக்கிய துறையாக ஆயுர்வேதம் அடையாளம் !!

0

தற்காலத்தில் சுதேச மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைமைக்கு அதிகபட்ச கேள்வி நிலவுவதால், அந்தியச் செலாவணியை ஈட்டும் பிரதான துறையாக அவை அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவித்த ஆயுர்வேத ஆணையாளர் கலாநிதி எம்.டீ.ஜே.அபேகுணவர்தன, அதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

“சர்வதேசத்தை நோக்கி சுதேச மருத்துவம்” என்ற தொனிப்பொருளில், ஜனாதிபதி ஊடக மையத்தினால் இன்று (09) நடத்தப்பட்ட வீடியோ தொழில்நுட்பத்தினூடான ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுதேச மருத்துவ அபிவிருத்தி, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் பொதுச் சுகாதார இராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகரவும் பங்கேற்றிருந்த இந்த ஊடகச் சந்திப்பை, ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க வழிநடத்தினார்.

இதன்போது தொடர்ந்துரைத்த ஆணையாளர், கொவிட் தொற்றுப் பரவல் காலப்பகுதியில், தேசிய மற்றும் ஆயுர்வே மருத்துவ முறைமை மற்றும் சுதேச மருந்துகளுக்குப் பாரியளவிலான கேள்வியும் வணிக ரீதியிலான மதிப்பும் கிடைத்ததென்றார்.

அதனால், புதிய திட்டமிடல்களின் கீழ் இத்துறையின் அபிவிருத்திக்குச் சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

மேற்கத்தேய, சுதேச மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளைச் சரியான ஒருங்கிணைப்புடன் ஒருங்கிணைந்த சேவையாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை ரீதியிலும் வீட்டுக்கு வீடு சென்றும் தொற்றா நோய்களைத் தடுப்பதற்கான பாரிய வேலைத்திட்டமொன்றை ஆயுர்வேத பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர் என்று தெரிவித்த சுதேச மருத்துவ அபிவிருத்தி, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் பொதுச் சுகாதார இராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர, தேசிய உணவு முறைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்துதல் மற்றும் நச்சுத்தன்மையற்ற உணவை உண்ண ஊக்கப்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்கள் செயற்பாட்டில் உள்ளன என்றார்.

நம் நாட்டின் மகப்பேற்று மரண விகிதக் குறியீட்டைத் தொகுப்பதில் உள்நாட்டு மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறையின் சாத்தியக்கூறுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது என்றும்

இலங்கையின் சுதேச மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறையானது, சர்வதேசப் பாராட்டைப் பெற்றுள்ளதென்றும் செயலாளர் எடுத்துரைத்தார்.

பெருமளவிலான சுதேச மருந்துகள் தற்போது சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருக்கின்ற நிலையில், மருந்துக் கட்டுப்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான கண்காணிப்பு அவசியமாகியுள்ளதென்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

கஞ்சா பயிர்ச் செய்கையைச் சட்டரீதியாக்குவதற்கான திட்டமிடல்கள் மற்றும் சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பான அளவுகோல்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்று ஊடகவியலாளர்கள் இதன்போது எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஆயுர்வேத ஆணையாளர், “1961ஆம் ஆண்டு சுதேச மருத்துவச் சட்டத்தின் கீழ், சுதேச மருந்துவ முறையின் குறிப்பிடத்தக்கதோர் ஔடதமாக கஞ்சாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

அத்துடன், தற்கால மருத்துவத்துக்குத் தேவையான கஞ்சாவுக்குப் பற்றாக்குறை நிலவவில்லை என்றும் சுதேச மருத்துவர்களுக்கான கஞ்சாவை விநியோகிக்கும் போது, ஒரு கலவையாக மாத்திரமே அது விநியோகிக்கப்படுகிறது என்றும் கூறினார்.

ஆயுர்வேத மசாஜ் நிலையங்களாகச் செயற்பட்டு வரும் அனைத்து நிலையங்களையும் ஒழுங்குமுறைப் படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் ஆயுர்வேதம் என்ற பெயரில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வரும் அனைத்து மசாஜ் நிலையங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும், இந்த ஊடகச் சந்திப்பின்போது நிபுணர்களால் தெரிவிக்கப்பட்டது.

சுற்றுலாத் துறையை இலக்கு வைத்து, பயிற்சி பெற்ற ஆயுர்வேத மசாஜ் தெரபிஸ்ட்டுகளுக்கு தேசிய தொழில் தகுதிச் சான்றிதழ் (NVQ) வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எதிர்வரும் காலங்களில், மூலிகைத் தோட்டங்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் சுகாதார மையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இந்த ஊடகச் சந்திப்பில், ஆயுர்வேத பொதுச் சுகாதார வைத்தியர் உதார அத்தபத்து அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.