மும்பை ரயில் குண்டுவெடிப்பு.. 19 ஆண்டுகளுக்குப் பின் 12 பேர் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

2006ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 180 பேர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். சம்பவம் நடந்து சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்பின்போது, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சந்தேகத்துக்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாகவம், இது முற்றிலும் அரசுத் தரப்பின் தோல்வி என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஆதாரங்கள், இவர்களை குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப் போதுமானவை இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு மும்பை ரயில் வெடிகுண்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்புப் படைக்கு மிகப்பெரிய பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. மும்பையில் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றாக இது உள்ளது குறிப்பிடத்தக்கது.
2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மாலை 6.23 மணி முதல் 6.28 மணிக்குள் அதாவது வெறும் 7 நிமிடங்களில் உள்ளூர் பயணிகள் ரயில் பெட்டிகளில் ஏழு குண்டுகள் வெடித்தன. இதில் 180 பேர் பலியான நிலையில் 829 பேர் படுகாயமடைந்தனர்.
சிறப்பு விசாரணை நீதிமன்ற அமர்வு பிறப்பித்த தீர்ப்பில், விசாரணையில் மிக மோசமான கவனக்குறைவுகள் இருந்துள்ளன. இவர்கள்தான் இந்தக் குற்றங்களைச் செய்திருக்கிறார்கள் என்று நம்புவதற்கே கடினமாக உள்ளது. அவர்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்திருந்தது.
இதைவிட குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் எந்தவகையானது என்பதைக் கூட நிருபிக்கத் தவறிவிட்டதாகவும், சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட தடயங்களும், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளும் கூட, குற்றவாளிகளுக்கு எதிரான முக்கிய சாட்சிகளாக அமைந்திருக்க வில்லை என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.
இந்த வழக்கு விசாரணையின்போது, கார் ஓட்டுநர், வெடிகுண்டுகளை வைத்தபோது நேரில் பார்த்ததாகக் கூறப்பட்ட சாட்சி, வெடிகுண்டுகளைத் தயாரித்ததை நேரில் பார்த்ததாகக் கூறப்பட்ட சாட்சிகளை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் நம்பகத்தன்மை அற்றதாகவும், அதனை வைத்து ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்க முடியாத நிலையிலும் இருந்ததாகவும், அரசு தரப்பில் தாக்கல் செய்த சாட்சிகள் உறுதித்தன்மை கொண்டதாக இல்லாததோடு, அதனை குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்குரைஞர்கள் மிக எளிதாகவே உடைத்துவிட்டதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், அடையாள அணிவகுப்பு நடத்த அதிகாரம் பெற்றிராத காவல்துறை மூலம், குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை அடையாளம் காணும் அணிவகுப்பு, சம்பவம் நடந்து 4 மாதங்களுக்குப் பிறகு ஒரு முறையும், மீண்டும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறையும் நடத்தப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், சம்பவத்தன்று, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை, சாட்சிகள் சரியாகப் பார்க்கத் தவறியிருப்பார்கள் என்பதால், அவர்கள் சரியாக அடையாளம் காட்டுவதற்காக காவல்துறை தரப்பில் அணிவகுப்பு நடத்தப்பட்டதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் நாங்கள் குற்றத்தைச் செய்ததாகக் கொடுக்கப்பட்ட வாக்குமூலங்களையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. விசாரணை அமைப்பினால் கொடுக்கப்பட்ட துன்புறுத்தல் காரணமாக அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கலாம் என்றும், ஒரு சில குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்கள், காப்பி – பேஸ்ட் செய்யப்பட்டது போன்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.