;
Athirady Tamil News

மின்சாரம் – தண்ணீர் கட்டணங்கள் குறித்து விவாதிக்கப்படவில்லை!!

0

மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன, இதனைக் கூறியுள்ளார்.

எனினும், எரிபொருள் விலை திருத்தம் காரணமாக ரயில் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம கடந்த வார அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு வந்துள்ள சரக்குகளை விடுவிக்க கடன் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், எரிவாயு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என கூறியுள்ளார்.

லிட்ரோ கேஸ் நிறுவனத்தால் ஒரு நாளைக்கு 100,000 எரிவாயு சிலிண்டர்களை மட்டுமே வழங்க முடியும் என்று கூறிய அமைச்சர், கடந்த வாரத்தில் 85,000-90,000 சிலிண்டர்களின் தேவை இருந்ததாக சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், கடந்த வாரத்தில் ஏற்பட்ட பல்வேறு குறைபாடுகள் காரணமாக எரிவாயு விநியோகம் தடைபட்டதன் காரணமாக தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், லிட்ரோ எரிவாயு நிறுவனம் எதிர்வரும் 7 முதல் 10 நாட்களுக்குள் விநியோகத்தை பூர்த்தி செய்யும் என அறிவித்துள்ளதாக அமைச்சர் பத்திரன தெரிவித்தார்.

இதற்கிடையில், ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பிலோ அல்லது பதவிக் காலத்தை நீடிப்பது தொடர்பிலோ எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும் அவ்வாறானதொரு நடவடிக்கை அல்லது கோரிக்கை தொடர்பில் தமக்கு தெரியாது என அமைச்சர் பத்திரன தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.