;
Athirady Tamil News

பங்குச்சந்தை முறைகேடு- டெல்லி, மும்பை உள்பட 10 இடங்களில் சி.பி.ஐ. சோதனை..!!

0

தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணா.

இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், பங்கு சந்தை விவரங்களை முகம் தெரியாத சாமியாரிடம் கூறியதாகவும் முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை தலைமை ஆலோசகராக நியமித்து சலுகைகள் வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியம் ஆகியோர் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்தது.

தேசிய பங்கு சந்தை விவரங்களை கசிய விட்டதாக எழுந்த புகார் காரணமாக இருவருக்கும் சி.பி.ஐ. லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பியது.

கடந்த பிப்ரவரி மாதம் ஆனந்த் சுப்பிரமணியத்தை சென்னையில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அதன்பின் டெல்லியில் சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது சிறையில் உள்ளனர்.

இந்த நிலையில் பங்கு சந்தை முறைகேடு தொடர்பாக இன்று சி.பி.ஐ. சோதனை நடத்தியது. நாடு முழுவதும் 10 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.

மும்பை, டெல்லி, நொய்டா, குர்கிராம், காந்திநகர், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் சோதனை நடந்தது.

பங்குச் சந்தை இடைத்தரகர்கள், வர்த்தகர்களின் வீடுகள் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். மொத்தம் 12 கட்டிடங்களில் நடந்த சோதனையின்போது யாரும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை.

இடைத்தரகர்கள், வர்த்தகர்களிடம் இருந்த ஆவணங்கள், செல்போன், இ-மெயில் தகவல் உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டன.

தேசிய பங்குச் சந்தை விவரங்களை கசிய விட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் இன்று நடந்த சி.பி.ஐ. சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதில் முறைகேடு தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.