பேசுவதற்கான சக்தி இல்லை… வங்கதேசத்தில் கொல்லப்பட்ட ஹிந்து வியாபாரியின் நண்பர்!
வங்கதேசத்தில் கொலை செய்யப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த மளிகைக் கடைக்காரரின் நண்பர் பேசிய விடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு அமைக்கப்பட்ட இடைக்கால அரசான முகமது யூனுஸ் ஆட்சியில் ஹிந்துக்களைக் குறிவைத்து வன்முறைகள் அதிகரித்துள்ளன.
ஹிந்து மதத்தைச் சேர்ந்த வியாபாரி கொலை
நர்சிங்டி மாவட்டத்தில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளரான மோனி சக்ரவர்த்தி (40 வயது), என்பவரை அவரது வீட்டிற்கு வரும் வழியில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கூர்மையான ஆயுதத்தினால் குத்திக்கொலை செய்துள்ளனர்.
இந்தக் கொலையைக் கண்டித்து சார்சிந்தூர் பஜாரில் நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் ‘கொலை செய்தவர்களை 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும்’ என மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட சக்ரவர்த்தியின் நெருங்கிய நண்பர் ராஜேந்திர சோஹ்ரி பேசிய விடியோவை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த விடியோவில் அவர் பேசியதாவது
பேசுவதற்கான சக்தி இல்லை…
பேசுவதற்கான சக்தி தற்போது எங்களுக்கு இல்லை. சக்கரவர்த்தி மிகவும் நல்ல மனிதர். அவருக்கு விரோதிகள் இருப்பார்கள் என்பது கற்பனைக்கும் எட்டாத ஒன்று.
இந்தக் கொலைக்கான பின்னணியில் மத ரீதியான காரணம் அல்லது தீவிர ஆதரவாளர்கள் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன் என்றார்.
இந்தக் கொலையை நேரில் பார்த்த மற்றுமொரு சாட்சியான பிரதீப் சந்ரா பார்மன், “இது திட்டமிட்டு நடந்துள்ளது. கொலைச் செய்தவர்கள் அவரின் மொபைல் போன் அல்லது இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்லவில்லை.
அவரது வீட்டுக்கு முன்பாகவே கொல்லப்பட்டார். இது மிகவும் துயரமான சம்பவம்” எனக் கூறினார்.
வங்கதேசத்தில் 7.95 சதவிகித ஹிந்துக்கள்
சக்கரவத்தி கொலையான சில மணி நேரத்தில் மற்றுமொரு ஹிந்து வியாபாரி ராணா பிரதாப் பைரகி (38 வயது) திங்கள்கிழமை மாலை சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இவர் ஏற்கெனவே ‘டைனிக் பேட் கபர்’ எனும் செய்தித் தாளில் இடைக்கால செய்தி ஆசிரியராக வேலைச் செய்து வருகிறார்.
ஜன.3 – கோகோன் சந்திர தாஸ் – அடித்து, எரித்துக் கொலை.
ஜன.24 – அம்ரித் மோண்டல் – தூக்கிட்டு கொலை
டிச.18. – திபு சந்திர தாஸ் – அடித்து, எரித்துக் கொலை.
2022 மக்கள் தொகை கணக்கீட்டின்படி வங்கதேசத்தில் சுமார் 1.313 கோடி ஹிந்துகள் இருக்கிறார்கள். இது வங்கதேச மக்கள் தொகையில் 7.95 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.