;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்: அதிகாரபூர்வமாக அறிவித்த கட்சிகள்..!!

0

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் சூடுபிடித்து வருகின்றன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதி நிறைவு அடைகிறது. அடுத்த ஜனாதிபதி ஜூலை மாதம் 25-ந் தேதி பதவி ஏற்க வேண்டும். இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த 9-ந் தேதி வெளியிட்டது. இதன்படி அடுத்த மாதம் 18-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் 776 எம்.பி.க்கள், 4,033 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கி உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் 29-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்க தீவிர ஆலோசனை நடந்து வந்தது. நேற்று மாலை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடந்தது. அதில், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்கிடையே நேற்று இரவு பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார். அதன்படி பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு (வயது 64) அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர். ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாய்டாபோசி என்ற கிராமத்தில் கடந்த 1958-ம் ஆண்டு ஜூன் 20-ந் தேதி பிறந்தார் திரவுபதி முர்மு. இவரது தந்தை பெயர் பிராஞ்சி நாராயண் டுடு. இவர் சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஜார்கண்டில் அதிக அளவில் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் திரவுபதி முர்மு படித்தார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். கணவரும், மகன்கள் இருவரும் இறந்து விட்டனர். அரசியல் ஆர்வம் காரணமாக பா.ஜ.க.வில் சேர்ந்த திரவுபதி முர்மு ராய்ரங்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். ஒடிசாவில் பா.ஜ.க., பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் (2000-2004) வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை மந்திரியாகவும், கால்நடை வளர்ச்சித் துறை மந்திரியாகவும் இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மே 18-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி வரை ஜார்க்கண்ட் கவர்னராக பதவி வகித்தார். ஜார்கண்டின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமையும் திரவுபதி முர்மு பெற்றார். ஒடிசாவை சேர்ந்தவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் பிஜூ ஜனதா தளம் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றால் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி என்ற சிறப்பை பெறுவார். எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, டெல்லியில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று கூட்டி இருந்தார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ், ராஷ்டிரீய ஜனதாதளம் மூத்த தலைவர் மனோஜ் ஜா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., தேசிய மாநாடு கட்சியின் ஹஸ்னயின் மசூதி, புரட்சிகர சோஷலிஸ்டு கட்சியின் சார்பில் என்.கே.பிரேமசந்திரன், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி சார்பில் இம்தியாஸ் ஜலீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதி மந்திரி யஷ்வந்த் சின்காவை (84) நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதை சரத்பவார் நிருபர்களிடம் தெரிவித்தார். யஷ்வந்த் சின்கா, பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி. 1984-ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் களத்தில் குதித்தார். ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக, ஜனதாதளம் கட்சியின் பொதுச்செயலாளராக, பா.ஜ.க.வின செய்தி தொடர்பாளராக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக பணியாற்றி உள்ளார். நேற்றுதான் அவர் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து அவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகின. அதுவே நடந்துள்ளது. யஷ்வந்த் சின்கா, சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது மத்திய நிதி மந்திரியாக பணியாற்றி உள்ளார். வாஜ்பாய் பிரதமர் பதவி வகித்தபோது மத்திய நிதி மந்திரியாகவும், வெளியுறவு மந்திரியாகவும் இருந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.