;
Athirady Tamil News

22 ஆண்டுகளுக்கு பிறகு தாய்-சகோதரியை தேடி கேரளா வந்த வாலிபர்..!!

0

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்பாய். இவர் வேலை தேடி கடந்த 1990-ம் ஆண்டு கேரளாவுக்கு வந்தார். கோட்டயம் அருகே காக்கச்சல் பகுதியில் தங்கி இருந்து வேலை பார்த்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கீதா என்ற பெண்ணுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 1½ வயது ஆன போது கீதா மீண்டும் கர்ப்பிணி ஆனார். அப்போது அவரது கணவர் ராம்பாய், மகனை தனது உறவினர்களிடம் காண்பித்து வருகிறேன் எனக்கூறி அவரை குஜராத் அழைத்து சென்றார். குஜராத் சென்ற ராம்பாய் அதன்பின்பு கேரளா திரும்பவில்லை. மனைவி கீதாவை மறந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இதற்கிடையே கர்ப்பிணியாக இருந்த கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையுடன் கீதா தனியாக வசித்து வந்தார். குஜராத் சென்ற கணவரும் மகனும் என்றாவது ஒரு நாள் தன்னை தேடி வருவார்கள் என்ற நம்பிக்கையில் கீதா வாழ்க்கையை நகர்த்தி வந்தார். இதற்கிடையே குஜராத்தில் தந்தையுடன் வசித்து வந்த மகனுக்கு 22 வயதாகி வாலிப பருவத்தை அடைந்தார். ஒரு நாள் அவர் தந்தையின் பெட்டியை நோண்டிய போது அதில் மலையாளத்தில் எழுதப்பட்ட கடிதங்களை பார்த்தார். அந்த மொழி தெரியாததால் தனது நண்பர்கள் மூலம் மலையாளம் தெரிந்த சிலரை பார்த்து அதில் இருந்த தகவல்களை தெரிந்து கொண்டார். அப்போது தான் அவருக்கு கேரளாவில் தாய் இருப்பதும், தனக்கு ஒரு தங்கை இருப்பதையும் அறிந்து கொண்டார். உடனே அவர் இதுபற்றி தந்தையிடம் கேட்டபோது அவரும், கேரளாவில் கோட்டயம் பகுதியில் ஒரு போலீஸ்காரர் வீடு அருகே வசித்த தகவலை தெரிவித்தார். இந்த ஒரு தகவலுடன் தாயை தேடி ராம்பாயின் மகன் கேரளா வந்தார். இங்கு வந்ததும் கோட்டயம் போலீஸ் நிலையம் சென்று தனக்கு தெரிந்த தகவலை கூறி தாயை கண்டுபிடிக்க உதவுமாறு உருக்கமாக கேட்டுக்கொண்டார். இதையடுத்து போலீசார் 1990 மற்றும் 1993-ம் ஆண்டுகளில் கோட்டயம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த போலீசார் மற்றும் அவர்கள் வசித்த பகுதியில் கீதா இருந்தாரா? என்பது பற்றி விசாரித்தனர். இதில் கீதா கோட்டயம் நெடுங்குன்னம் பகுதியில் வசித்து வருவது தெரியவந்தது. போலீசார் அவரை தொடர்பு கொண்டு அவரது மகன் அவரை தேடி வந்திருக்கும் தகவலை தெரிவித்தனர். இதை கேட்டு ஆச்சரியப்பட்ட கீதா, தனது மகளுடன் மகனை தேடி போலீஸ் நிலையம் சென்றார். அங்கு 1½ வயதில் தன்னிடம் இருந்து எடுத்து செல்லப்பட்ட மகன் வளர்ந்து வாலிபனாக இருப்பதை கண்டு ஆனந்த கண்ணீர் விட்டார். தாயை தேடி குஜராத்தில் இருந்து கேரளா வந்து அவர்களை கண்டுபிடித்து விட்ட மகிழ்ச்சியில் அந்த வாலிபரும் கண்ணீர் விட்டார். இதனை கண்டு அங்கிருந்த போலீசாரும் நெகிழ்ந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.