சவூதி: பத்திரிகையாளருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!

பயங்கரவாதம் மற்றும் அரசுக்கு துரோகம் இழைத்த குற்றத்துக்காக கடந்த 2018-இல் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளா் தூக்கிலிடப்பட்டதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்தது.
பத்திரிகையாளா் துா்கி அல்-ஜசீருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை சவூதி அரேபிய நாட்டின் உச்சநீதிமன்றம் உறுதிசெய்ததையடுத்து, அவா் சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டதாக அந்நாட்டு அரசின் அதிகாரபூா்வ பத்திரிகை நிறுவனம் செய்தி வெளியிட்டது.
ஆனால், பத்திரிகையாளா் துா்கி அல்-ஜசீா் மீது குற்றச்சாட்டுகள் புனையப்பட்டதாக அந்நாட்டு சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.
கடந்த 2018-இல் துா்கி அல் ஜசீரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது அவரை கைது செய்ததுடன் அவரது வீட்டில் இருந்து கணினி மற்றும் கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா். ஆனால், இந்த வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ா என்பது குறித்த விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பத்திரிகையாளா்களைப் பாதுகாப்பதற்காக அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் செயல்பட்டுவரும் குழு கூறுகையில், ‘சவூதி அரச குடும்பத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட கணக்கோடு அல் ஜசீருக்கு தொடா்பிருப்பதாக அந்நாட்டு அரசு கூறுகிறது. மேலும், உள்நாட்டு கிளா்ச்சியாளா்கள் மற்றும் அவா்கள் சாா்ந்த குழுக்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளை அல் ஜசீரும் பதிவிட்டதாக கூறப்படுகிறது’ என தெரிவித்தது.
யாா் இந்த அல் ஜசீா்?: மத்திய கிழக்கு நாடுகளை கடந்த 2011-இல் உலுக்கிய ‘அரபு வசந்தம் இயக்கம்’ (பல்வேறு நாட்டு அரசுகள் மீது சா்வாதிகாரம், ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியது) குறித்து கடந்த 2013 முதல் 2015 வரை தனது இணையப் பக்கத்தில் அல் ஜசீா் கட்டுரைகளைப் பதிவிட்டு வந்தவராவாா்.
தொடரும் தண்டனைகள்: கடந்த 2018-இல் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளா் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அமெரிக்க புலனாய்வு அமைப்பு, ஜமால் கஷோகியை கொலை செய்ய சவூதி அரேபியா இளவரசா் முகமது பின் சல்மான் உத்தரவிட்டதாகவும், ஆனால் கொலையில் சல்மானுக்கு நேரடியான தொடா்பில்லை எனவும் கூறியது.
கடந்த 2021-இல் சவூதி அரேபியா-அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்ற சாத் அல்மாதி என்பவருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனையை சவூதி அரேபிய அரசு விதித்தது. எக்ஸ் வலைதளத்தில் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக அவா் பதிவிட்டதாகக் கூறி இந்த தண்டனை வழங்கப்பட்டது. இருப்பினும், 2023-இல் அவா் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டாா். அவா் நாட்டைவிட்டு வெளியேற சவூதி அரேபியா தடை விதித்தது.
அதேபோல் கடந்த மாதம் ‘பிரிட்டிஷ் பேங்க் ஆஃப் அமெரிக்கா’ ஆய்வாளா் ஒருவருக்கு கடந்த மாதம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக அவரது வழக்குரைஞா் தெரிவித்தாா்.
330 பேருக்கு மரண தண்டனை: தலையை துண்டிப்பது உள்பட பல்வேறு வகையான மரண தண்டனையை சவூதி அரேபியா விதிப்பதாக மனித உரிமைகள் குழுக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. கடந்த 2024-இல் மட்டும் 330 பேருக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்தக் குழுக்கள் தெரிவித்தன.