;
Athirady Tamil News

நிலாவெளியில் பிரதேச செயலகம் அமைக்குமாறு மக்கள் கோரிக்கை!! (படங்கள்)

0

திருகோணமலை நிலாவெளி கிராமத்தில் தனியான பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை என்பவற்றை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குச்சவெளி பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிவரும் நிலாவெளி கிராமசேவகர் பிரிவானது, தங்கள் பிரதேசத்தை சூழவுள்ள கிராமங்களுக்கு அரச சேவைகளை பெற்றுக்கொள்ள தனியாக பிரதேச செயலகம் ஒன்றை அமைத்து துருமாறு கோரிக்கை முன் வைத்துள்ள போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சுக்கள் மக்கள் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை என விசனம் வெளியிட்டனர்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட, நிலாவெளி வாழையூற்று அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் மாணிக்கம் மணிவண்ணன்.
குச்சவெளி பிரதேச செயலக பிரிவானது, பெரியகுளம் கிராமசேவகர் பிரிவு தொடக்கம் தென்னமரவாடி கிராம சேவகர் பிரிவுவரையுள்ள ஒரு பாரிய தூரப்பிரதேசமாக அமைந்துள்ளது.

இதன் காரணமாக மக்கள் அன்றாட தமது தேவைகளை பிரதேச செயலகத்திலோ, அல்லது கிராம அலுவலர் அலுவலகத்திலோ பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் அரச அலுவலகங்களை நாடும் போது, அங்கு அதிகாரிகள் இல்லாவிட்டால் தங்கள் தேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், நீண்ட தூரத்தில் அமைந்துள்ள தங்கள் கிராமங்களுக்கு மீண்டும் திரும்பி செல்லும் அவல நிலைமை காணப்படுகின்றது.

குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவில் பல கிராம அலுவலர் பிரிவுகள் நிலத்தொடர்புகள் அற்றுக் காணப்படுகின்றது. குறிப்பாக கோணேசபுரி, ஜெய்க்கா, காந்திநகர் குறிப்பாக கும்புறுப்பிட்டி கிராம சேவகர் பிரிவானது இறக்கக்கண்டி பாலம் தொடக்கம் சலப்பையாறு பாலம் வரை உள்ளது. அதை விபுலானந்தா கிராமம், சலப்பையாறு, காந்திநகர் என மூன்று பிரிவுகளாக பிரிக்க வேண்டும்.
பிரதேசங்களை கிராம சேவகர் பிரிவுகளாக பிரிப்பது தொடர்பாக, எல்லை நிர்ணய குழுவிற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கும் மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை, குறிப்பாக பத்து கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய கோமரங்கடவல, மொறவௌ போன்ற கிராமங்களுக்கு தனி பிரதேச செயலகம் அமைக்கப்பட்டு மக்களுக்கு சீரான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்கள், நிலாவெளி பிரதேசத்தில், தனியான பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக முன்வைத்து வருகின்றனர். இக்கோரிக்கைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் எல்லை நிர்ணய குழு, பொது நிர்வாக அமைச்சு ஆகியவற்றிற்கு தெரியப்படுத்தியுள்ள பொதிலும் நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே எமது பிரதேச மக்கள் தமது அன்றாட சேவைகளை பெற்றுக்கொள்ளும் முகமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.