;
Athirady Tamil News

7 வருடங்களாக பயன்படுத்தப்படாத 80 பஸ்கள் பாடசாலை சேவைக்கு!!

0

நாட்டிற்கு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தி 7 வருடங்களாக சேவையில் ஈடுபடாத பாடசாலை பஸ்கள், பாடசாலை மாணவர்களின் வசதிக்காக சேவையில் ஈடுபடுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள அரச நிறுவனமான லங்கா அசோக் லேலண்ட், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 80 பஸ்களை 7 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்திருந்தது.

இந்த பஸ்கள், கொள்வனவுக்கான தொழில்நுட்பக் குழுவின் அனுமதி கிடைக்காத காரணத்தினால் குறித்த நிறுவனத்தின் பனாகொட தொழிற்சாலை வளாகத்திலேயே இன்னும் நிறுத்தப்பட்டுள்ளன.

பெருமளவிலான அந்நியச் செலாவணியைச் செலவிட்டு இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்தப் பஸ்களை பாடசாலை மாணவர்களின் பாவனைக்கு பயன்படுத்துவதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தையும் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பஸ்களின் தற்போதைய சந்தை மதிப்பில் பாதிக்கு இந்தப் பஸ்களை வழங்கவும் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

அந்தந்த பஸ்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட காலப்பகுதியில் நிலவிய அந்நிய செலாவணி விகிதத்தில் வழங்கப்படவுள்ளன.

மேலும்,பஸ்களை இயக்கி வருமானம் ஈட்டும் போது, நான்கு ஆண்டுகளில் பணத்தை செலுத்தும் வசதியை வழங்கவும் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

பஸ்களை கொள்வனவு செய்வதற்கான தொழிநுட்ப குழு, நாட்டிற்கு மிகவும் சாதகமான முடிவாக இருந்தும் சில காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கான அனுமதியை தாமதப்படுத்தியமை வருத்தமளிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பேருந்துகளின் அனைத்து உதிரிபாகங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கான முழுப் பொறுப்பையும் அசோக் லேலண்ட் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

எனவே இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சரவை மற்றும் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டு நிறுவனத்தின் சான்றிதழ்களின் அடிப்படையில் முன்னோடி திட்டமாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இயங்கும் அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் தேவையான பாடசாலைகளுக்கு இந்த பஸ் வழங்கிவைக்கப்பட்டு, பாடசாலை சேவைகளில் ஈடுபடுத்தப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஹோமாகம பனாகொடவில் அமைந்துள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இலங்கை தொழிற்சாலையில் நேற்று இடம்பெற்ற ஆய்வு நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டிற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் 7 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த பஸ்கள் பாடசாலை மாணவர்களின் வசதிக்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.