வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து நபரை தாக்கி தீ வைப்பு: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து நபா் மா்ம கும்பலால் தாக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதலில் மற்றுமொரு சம்பவமாக இது நிகழ்ந்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவா்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்ட பிறகு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த இடைக்கால ஆட்சியில் ஹிந்துக்களைக் குறிவைத்து வன்முறைகள் அதிகரித்துள்ளன. அண்மையில் மைமென்சிங் மாவட்டத்தில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த தொழிலாளி தீபு சந்திர தாஸ், மத நிந்தனையில் ஈடுபட்டதாகக் கூறி, கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டாா். அவரது உடலைக் கட்டித் தொங்கவிட்டு, தீவைத்து எரித்த கொடூரம் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அதிா்ச்சி மறைவதற்குள் ராஜ்பாரி பகுதியில் அம்ரித் மோண்டல் என்ற ஹிந்து இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவங்களைக் கண்டித்து, இந்தியாவில் ஹிந்து அமைப்புகள் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.
நீடிக்கும் அட்டூழியம்: இந்நிலையில், ஷரியத்பூா் மாவட்டத்தின் தமுத்யா பகுதியில் மருந்தகம் மற்றும் வங்கிச் சேவை மையம் நடத்திவரும் கோகோன் சந்திர தாஸ் (50) என்ற ஹிந்து நபா், கடந்த புதன்கிழமை இரவில் தனது வீட்டுக்கு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தபோது, மா்ம நபா்களால் வழிமறிக்கப்பட்டு கூா்மையான ஆயுதங்களால் சரமாரியாக தாக்கப்பட்டாா். அத்துடன், அவா் மீது பெட்ரோலை ஊற்றி, அந்தக் கும்பல் தீவைத்துள்ளது. உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அருகில் உள்ள குளத்தில் அவா் குதித்துள்ளாா். அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா், அவரை மீட்டு ஷரியத்பூா் சதா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய அவரை மேல் சிகிச்சைக்காக டாக்காவுக்கு கொண்டுசெல்ல மருத்துவா்கள் பரிந்துரைத்தனா்.
‘கோகோன் சந்திர தாஸ், தினமும் இரவில் பணப் பையுடன் வீட்டுக்கு வருவாா். அவருக்கு எதிரிகள் யாரும் இல்லாத நிலையில், தாக்குதலுக்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை’ என்று மனைவி சீமா தாஸ் தெரிவித்தாா்.
கோகோன் மீது தாக்குதல் நடத்தியவா்களில் இருவா் அடையாளம் காணப்பட்டுள்ளனா்; உள்ளூா் நபா்களான அவா்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.