;
Athirady Tamil News

தொண்டர்கள் சொன்னால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி: அசோக் கெலாட் அறிவிப்பு..!!

0

காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந்தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல், வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. ராகுல்காந்தி தலைவர் பதவியை ஏற்க வலியுறுத்தி, பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கமிட்டிகள் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன. ராகுல்காந்தி இன்னும் தனது முடிவை தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் மேலிட விருப்பப்படி, ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. அதை அசோக் கெலாட் மறுத்து வந்தார். இந்தநிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பினால், அதற்கு கட்டுப்படுவேன் என்று நேற்று அசோக் கெலாட் கூறினார். ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி விமான நிலையம் வந்தவுடன் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கட்சியும், கட்சி மேலிடமும் எனக்கு எல்லாமே கொடுத்துள்ளன. கடந்த 40, 50 ஆண்டுகளாக நான் பதவியில் இருக்கிறேன். பதவி எனக்கு முக்கியம் அல்ல. கட்சி என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதை நிறைவேற்றுவேன். சோனியாகாந்தி குடும்பம் மட்டுமின்றி, ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் அன்பை பெற்ற அதிர்ஷ்டசாலி நான். எனவே, அவர்கள் தலைவர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யுமாறு கூறினால், என்னால் மறுக்க முடியாது. இருந்தாலும், ராகுல்காந்தியை நிற்குமாறு கடைசியாக ஒருதடவை வலியுறுத்துவேன். ராஜஸ்தானிலோ அல்லது டெல்லியிலோ கட்சிக்கு பயனளிக்கும்வகையில் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றுவேன். காங்கிரசை வலுப்படுத்தக்கூடிய முடிவை எடுப்பேன். தலைவர் தேர்தலில் நின்றாலும், முதல்-மந்திரி பதவியில் நீடிக்க முடியும். நான் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பேனா, இல்லையா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். என்னால் கட்சிக்கு எங்கு பலன் கிடைக்குமோ அங்கு இருப்பேன். எந்த பதவியும் வேண்டாம் என்று முடிவு எடுத்தாலும், ராகுல்காந்தியுடன் இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்து கொள்வேன். தலைவர் தேர்தலில் சசிதரூர் போட்டியிடுவது பற்றி கேட்கிறீர்கள். உட்கட்சி ஜனநாயகத்துக்கு போட்டி நடப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், கேரள மாநிலம் கொச்சிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். 10 காங்கிரஸ் பிரதிநிதிகள் ஆதரவு இருந்தால், வேட்புமனு தாக்கல் செய்யலாம். தேர்தலில் போட்டியிட சோனியாகாந்தி அல்லது ராகுல்காந்தியின் ஒப்புதல் பெறத் தேவையில்லை. தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்கும். வேறு எந்த கட்சியும் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது இல்லை. அதே சமயத்தில், காமராஜர் மாடல்படி, கருத்தொற்றுமை அடிப்படையில் கட்சி தலைவரை தேர்வு செய்வதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஒவ்வொருவரிடமும் பேசி, கருத்தொற்றுமை அடிப்படையில் பொருத்தமானவரை தலைவர் பதவிக்கு தேர்வு செய்வதுதான் காமராஜர் மாடல். கருத்தொற்றுமை ஏற்படாவிட்டால், தேர்தல் சரியானதுதான். தேர்தல் நடத்துவதில் இருந்து நாங்கள் ஓடவில்லை. யார் யார் போட்டியிடுவார்கள் என்று எனக்கு தெரியாது. பாதயாத்திரைக்கு 23-ந் தேதி ஓய்வு விடப்படுகிறது. அப்போது, ராகுல்காந்தி டெல்லிக்கு சென்றால், நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயாரை பார்க்க செல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் இரண்டு, மூன்று வாரங்களாக தனது தாயாரை பார்க்கவில்லை. அவரும் மனிதர் தானே? உங்கள் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், பார்க்க செல்ல மாட்டீர்களா? இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.