;
Athirady Tamil News

1000 மைல் நடக்க முடியுமா?- ராகுலிடம் ஆச்சரியத்துடன் கேட்ட சிறுமி..!!

0

பாரத ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த 7-ந் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல்காந்தி. இந்த நடைபயணத்தில் நாடு முழுவதும் மக்களை சந்திக்கும்போது பல்வேறு அனுபவங்கள் கிடைக்கும் என்று ராகுல் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அதை போலவே தனது பயணத்தில் சந்திக்கும் அனுபவங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் தினமும் ராகுல் பதிவிட்டு வருகிறார்.

தற்போது கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் தன்னை சந்தித்த சிறுமிகளுடன் வாஞ்சையோடு உரையாடினார். சந்தோஷத்தில் ஒரு குழந்தையை தோள் மீது தூக்கி வைத்துக்கொண்டு சிறிது தூரம் நடந்தார். மற்றொரு சிறுமியையும் தூக்கி வைத்து கொஞ்சினார். அப்போது அந்த சிறுமி சந்தோஷத்தில் வாயை பொத்திக்கொண்டே சிரித்தார். குழந்தைகளை கொஞ்ச தொடங்கியதும் ஆசையுடன் குழந்தைகளிடம் நான், ஆயிரம் மைல் நடக்க வேண்டும்.

அதனால் உங்களிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்க முடியாது என்று கூறினார். அதை கேட்டதும், அங்கிள் ஆயிரம் மைல் நடக்க முடியுமா? என்று ஆச்சரியத்துடன் சிறுமி கேட்டாள். ம்ம்.. முடியும் என்று சிரித்தபடி சொல்லிக்கொண்டே நகர்ந்தார். இதேபோல் பல இடங்களில் நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்ததாக அந்த மாநில பொறுப்பாளரும் அகில இந்திய செயலாளருமான முன்னாள் எம்.பி. விசுவநாதன் கூறினார். ஒரு இடத்தில் மாற்று திறனாளி இளைஞர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து ராகுலை சந்திக்க தவித்து கொண்டிருந்தார். அதை கவனித்த ராகுல் அவர் அருகில் சென்று கையை பிடித்து தட்டி கொடுத்தார்.

அந்த இளைஞர் ராகுலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து மகிழ்ந்ததை பார்த்து எல்லோரும் நெகிழ்ந்தனர். இன்னொரு இடத்தில் சுமார் 10 வயது சிறுமி ஒருவர் யாத்திரையில் புகுந்து கோஷம் எழுப்பியபடியே சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தார். ஒரு சிறுமியின் கோஷம் கேட்டு கொண்டிருக்கிறதே என்று கவனித்த ராகுல் ஒரு கட்டத்தில் அந்த சிறுமியை தேடி கண்டுபிடித்து கையை பிடித்து முன்வரிசைக்கு அழைத்து வந்தார். அந்த சிறுமியும் உற்சாகத்துடன் ராகுலோடு நடந்தாள். இப்படி மக்கள் பல இடங்களில் காட்டிய ஆர்வமும், அவர் மீது காட்டிய அன்பும் அவரை நெகிழ வைத்தது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.