;
Athirady Tamil News

ஸ்மார்ட் பள்ளியும், ஸ்மார்ட் ஆசிரியரும்..!!

0

ஸ்மார்ட் வகுப்பறைகள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் வினாத்தாள்கள் வடிமைத்தல், கணினியில் தட்டச்சு பயிற்சி வழங்குதல், பாடம் சம்பந்தமாக திட்டம் தயாரிக்க இணையதள சேவை வழங்குதல் போன்றவை இந்த ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. அதேசமயம் அறிவியல் மேதைகள், ஆராய்ச்சியாளர்களின் வாழ்க்கை வரலாறுகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்றவையும், வீடியோ காட்சி களாக காண்பிக்கப்படுகிறது.

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள பூவாளூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மிகவும் ஸ்பெஷலானது. மற்ற எல்லா பள்ளிகளை விடவும், ஒருபடி மேலானது. இங்கே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள் அமலாகிவிட்டன. ஏன்..? சுத்தத்தை உறுதிப்படுத்தும் நவீன கழிப்பறை, சுகாதாரத்தை பேணும் தானியங்கி நாப்கின் இயந்திரம், கழிவுகளை அழிக்கும் நாப்கின் எரியூட்டும் எந்திரம், பாதுகாப்பை உறுதி செய்யும் திரவ கிருமி நாசினி, தண்ணீர் பிரச்சினையை சமாளிக்கும் 110 அடி போர் வெல்… என நவீன அரசு பள்ளியாக இது மிளிர்கிறது.

இதற்காக, அங்கு பணியாற்றும் ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் பாராட்ட வேண்டும்; குறிப்பாக அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் சதீஷ் குமாரை கொஞ்சம் கூடுதலாக பாராட்ட வேண்டியிருக்கிறது. ஏனெனில் அவ ரது உந்துதலில்தான், இந்த புதுமை சிந்தனைகள் எல்லாம் உயிர்பெற்றிருக்கின்றன. இதுதொடர்பாக, அவரை சந்தித்து பேசினோம். அவர் பகிர்ந்து கொண்டவை…

”கடந்த 14 ஆண்டுகளாக பூவாளூர் அரசுப் பள்ளியில்பணியாற்றி வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி அறிமுகமானது. இதன் மீதான பெற்றோர்களின் மோகத்தால் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைய ஆரம்பித்தது. இதைத் தடுக்க நினைத்தேன். எனவே, நான் பணியாற்றும் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வசதியை ஏற்படுத்த முடிவெடுத்தேன். தலைமை ஆசிரியர் முதற்கொண்டு எல்லா ஆசிரியர்களும் சம்மதம் தெரிவிக்க, என் சொந்த சேமிப்பில் இருந்து ரூ.25 ஆயிரத்தை நிதியுதவியாக வழங்கினேன். நண்பர்கள் சிலரும் பொருளாக உதவினர். நாங்கள் ஆசைப்பட்டது போலவே, மூன்றரை லட்சம் ரூபாய் செலவில் ஸ்மார்ட் கிளாஸ் கட்டிமுடிக்கப்பட்டது” என்று பொறுப்பாக பேசும் சதீஷ், கடந்த 5 ஆண்டுகளாகவே தன் பள்ளி மாணவ-மாணவிகள் ஸ்மார்ட் கிளாஸில் பாடம் கற்கிறார்கள் என்று மனம் மகிழ்கிறார்.

”ஸ்மார்ட் கிளாஸை தொடர்ந்து, எங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் தண்ணீர் பற்றாக்குறையால் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்தப் பிரச்சினையை சரி செய்ய நினைத்தோம்.

புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைப்பது மட்டுமே ஒரே வழியாக இருந்தது. இதற்கும் முதல் கொடையாளராக ரூ.17 ஆயிரத்தை வழங்கி, பொருளுதவி திரட்டினோம். நண்பர்கள் பலரும் செலவுகளை ஏற்றுக்கொண்டனர். மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் 110 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணற்றை அமைத்தோம். இதன் மூலம் மாணவர்களின் குடிநீர் மற்றும் தண்ணீர் பிரச்சினை சரிசெய்யப்பட்டது. இனி இருபது ஆண்டுகளுக்கு எந்தவித தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படாது” என்று பெருமிதம் கொள்கிறார், ஆசிரியர் சதீஷ்குமார்.

”புதுமைகளை செய்ய தொடங்கிவிட்டால், அதன் மீதான ஆர்வம் அதிகமாகவே இருக்கும். அந்தவகையில், எங்களுடைய அடுத்த தேவையான மாணவி களுக்கான சுகாதார வளாகம் பற்றி சிந்தித்தோம். அப்போது, தனியார் அமைப்பின் மூலம் எனக்கு சிறந்த ஆசிரியர் விருதுடன், ரூ.50 ஆயிரம் பரிசு தொகை கிடைத்தது. அதை முன்பணமாக வைத்து, நவீன கழிவறைகள் உட்பட பல்வேறு வசதிகள் அடங்கிய சுகாதார வளாகம் உருவாக்க பணிகளை திட்டமிட்டோம். நிறைய நல்ல உள்ளங்கள் செலவுகளை பிரித்து, ஏற்றுக்கொண்டனர்” என்கிறார்.

பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு பத்தரை லட்சம் ரூபாய் செலவில் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் ஆசிரியர் சதீஷ்குமாரின் சொந்தப் பணமாகும். கழிவறையில் மாணவிகள் பயன்படுத்த தானியங்கி நாப்கின் எந்திரம் பொருத்தப்பட்டது. அத்துடன், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரியூட்டும் எந்திரமும் வைக்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளி மாணவிகள் பயன்படுத்தும் கழிவறை உட்பட 13 கழிவறைகளும் கட்டப்பட்டன. 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வந்த நவீன கழிவறை மூலம் பல ஆண்டுகால மாணவிகளின் துயர் துடைக்கப்பட்டது. அரசுப் பள்ளி குழந்தைகள் வெளியில் சொல்லமுடியாத வலிகளை அருகில் இருந்து உணர்ந்தவர் ஆசிரியர் சதீஷ்குமார். அவர் முன்னெடுத்த ஒவ்வொரு உதவிக்கும் பின்னால் மாணவர்களுடைய கஷ்டங்களின் கறை படிந்துள்ளன. அவர்களின் பொருளாதாரப் பிரச்சினைகளை அறிந்த ஆசிரியர் ஆண்டுதோறும் பள்ளியில் படிக்கும் 450 மாணவர்களுக்குச் சீருடை வாங்கிக் கொடுக்கிறார். ஏழை-எளிய மாணவர்களின் உயர் படிப்புச் செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.