;
Athirady Tamil News

மனச்சோர்வு நோயின் உச்சக்கட்டம் தான் மனிக் டிப்ரஷன் !! (மருத்துவம்)

0

இயந்திரமயமான மனித வாழ்க்கையில் மனச்சோர்வும் தவிர்க்க முடியாத ஒரு நோயாகி விட்டது. உலகில் பிறந்த எல்லோரும் ஏதோ ஒருவகையில் மனச் சோர்வுக்கு ஆளாகிய நிலையிலேயே வாழ்கின்றனர். அந்த வகையில் இந்த மனச்சோர்வு நோயின் உச்சக்கட்ட நிலையை தான் மனிக் டிப்ரஷன் (Manic Depression) என்று சொல்கின்றார்கள்.

இந்நோய்க்கு இலக்கானவர்கள் ஒரு நிமிடம் உலகத்தின் உச்சியில் ஏறி நிற்பது போல் மிகவும் உற்சாகமாக இருப்பார்கள், அடுத்த சில நிமிடங்களிலேயே அதாள பாதாளத்தில் விழுந்து கிடப்பது போல நடந்து கொள்வார்கள்.

அதிக சந்தோசமும், அளவுக்கு மீறிய சோகமும் இந்நோயாளர்களின் நடத்தைகளில் வந்து போகும். சந்தோஷமான மனோ நிலைமையில் இருக்கும்போது எதையும் செய்ய துணிவார்கள். அத்துடன் அபரிமிதமான சிந்தனைகளை கொண்டவர்களாகவும், உலகத்தை தலைகீழாக மாற்றியமைக்கும் யோசனைகளையும், அறிவுரைகளையும் சொல்லும் திறமை கொண்டவர்களாகவும் இருக்கின்ற அதேவேளை தேவைக்கு அதிகமாக செலவழிப்பார்கள். தம்மை முன்னிலைப்படுத்தியே எல்லாச் செயல்களையும் செய்வார்கள்.

அதுபோலவே அதே நபர் அடுத்த நாள் காலையில் சோர்ந்து, உடைந்து, தளர்ந்து போய் மிகவும் மனச்சோர்வுடன் காணப்படுவார். நேற்று ஏன் அப்படி செய்தேன்? ஏன் அப்படி சொன்னேன்? ஏன் அப்படி நடந்து கொண்டேன்? என மனவேதனைக்கும் துயரத்துக்கும் ஆளாகுவார்கள்.

இதனால் மேலும் மனச்சோர்வு அதிகரித்து ஒருவிதமான பரிதாப நிலைக்கு செல்வதுடன், தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான மிக சாதாரணமான வேலைகளை கூட செய்ய முடியாத நிலைக்கு ஆளாகுவார்கள்.

அந்தவகையில் தன்னுடைய உடல் பராமரிப்பைக் கூட செய்ய முடியாத அளவுக்கு சோர்ந்து போவதுடன், வாழ்க்கை தன்னை விட்டு எங்கோ தொலை தூரத்திற்கு சென்றுவிட்டதாக நினைத்துக் கொள்வார்கள்.

இவ்வாறு மனோநிலை பாதிக்கப்பட்டு மனிக்டிப்ரஷன் நிலையை அடையும்போது இவர்களுடைய வாழ்க்கையும் குழம்பி போய் விடுகின்றது.

எனவே ஆரோக்கியமான மனோநிலையில் பூமியில் பிறக்கின்ற மனிதனுக்கு மனிக்டிப்ரஷன் நோய் ஏற்படுவதற்கான காரணங்களை எவை என்று பார்க்கும் போது, அதற்கு பல காரணங்கள் பின்னணியாக இருக்கின்றன. அவையெல்லாம் ஒன்றோடொன்று ஒத்துப் போவதும் இல்லை. மனிதனுக்கு மனிதன் வேறுபடும் தன்மை கொண்டது. அந்த வகையில்…

சிக்கலான குடும்ப அமைப்பில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும் இந்நிலையை அடைவதற்கான சாத்தியங்கள் அதிகம் உண்டு.
ஒரு நபரின் இளமைக்காலத்தில் நடந்த துன்ப நினைவுகளின் தொடர் எதிரொளிகளும் அவற்றையே நினைத்து நினைத்து வருத்தமடைதல்.
இயற்கையான உணர்வுகளை அடக்கி வாழ்தல், அதாவது இளம் வயதில் அடக்கி, அதட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகள் தன் உணர்வுகளை வெளிப்படுத்த பயப்படுதல், இது அவர்கள் வளர்ந்த பிறகும் தன் உணர்வுகளை ஏனையவர்களிடம் வெளிப்படுத்த பயப்படும் நிலைக்கு வருவதால் எதிர்காலத்தில் மனிக்டிப்ரஷன் நோயிக்கு இலக்காகும் வாய்ப்பு அதிகம்.
வாழ்க்கையில் ஏற்பட்ட கொடிய அனுபவங்கள்.
உள, உடல் அமைப்பும் பரம்பரை ரீதியான சில அம்சங்களும். அதாவது மரபணுக்கள் ரீதியாக தொடர்வது.

போன்ற பல காரணங்கள் தான் மனிக்டிப்ரஷனை ஏற்படுத்துகின்றது.

அந்தவகையில் மனிக்டிப்ரஷன் நோயிக்கு இலக்கானவர்களின் அறிகுறிகள் என்ன? அவர்களுடைய செயற்பாடுகள் எப்படி இருக்கும்? அவர்களுக்கான சிகிச்சை முறைகள் என்ன? என்பதை மருத்துவம் பகுதியில் தொடர்ச்சியாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.