;
Athirady Tamil News

மோதியின் இந்துத்துவ பிம்பம் வளைகுடா நாடுகளுடனான உறவை ஏன் பாதிக்கவில்லை?

0

அரபு உலகம் ஒரு கோடியே மூன்று லட்சம் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ளது. அரபு உலகம் மேற்கில் மொராக்கோ மற்றும் வடக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரை நீண்டுள்ளது. இந்த பகுதிகளில் அரபு இனத்தை சேராதவர்கள் மற்றும் சரளமாக அரபு மொழியை பேசாத பல குழுக்கள் உள்ளன.

ஆனால் அரேபிய கலாசாரத்தின் தாக்கத்தால், அவர்களும் அரபு உலகிலேயே சேர்க்கப்படுகிறார்கள். அரபு நாடுகளில் மக்கள் தொகை மூன்று குழுக்களாக அதாவது வட ஆப்பிரிக்கா, லெவண்டைன் அரபு மற்றும் வளைகுடா அரபு என்று பார்க்கப்படுகிறது. வளைகுடா அரபுக்கும் மோதி அரசுக்கும் இடையிலான உறவுகள் பற்றி இப்போது நாம் பேசலாம்.
2002 குஜராத் கலவரத்தின் போது நரேந்திர மோதி முதல்வராக இருந்தார். கலவரத்திற்குப் பிறகு மோதியின் பிம்பம் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று ஆனது. இந்த பிம்பம் குறித்த விவாதம் சர்வதேச அளவிலும் நடந்தது.
2005ல் நரேந்திர மோதி குஜராத் முதல்வராக இருந்தபோது, ​​அமெரிக்க சர்வதேச மத சுதந்திரச் சட்டம் 1998ன் கீழ் அவர் மீது விசா தடையை அமெரிக்கா விதித்தது.

அமெரிக்க ஏஜென்சியான சர்வதேச மத சுதந்திரத்திற்கான கமிஷனின் பரிந்துரையின் பேரில் இந்தத் தடை விதிக்கப்பட்டது. 2002 கலவரத்தில் நரேந்திர மோதியின் பங்கை இந்த ஆணையம் விமர்சித்திருந்தது. 2014ஆம் ஆண்டு நரேந்திர மோதி பிரதமராக பதவியேற்றதும் அமெரிக்கா இந்தத் தடையை நீக்கியது.

பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை தொடர்பாக செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்காவில் எந்த சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள மாட்டார் என்று சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நவம்பர் 18 ஆம் தேதி பைடன் நிர்வாகம் முடிவு செய்தது.

ஜமால் கஷோக்ஜியின் கொலைக்கு செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசரே காரணம் என்று அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்திருந்தன. இந்த விவகாரத்தில் செளதி இளவரசருக்கு அமெரிக்கா விலக்கு அளித்ததும், அதிபர் ஜோ பைடன் மீது விமர்சனங்கள் எழுந்தன.

விதிமுறைகளின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், 2014 இல் பிரதமரான பிறகு இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் இந்த விஷயத்தில் விலக்கு அளிக்கப்பட்டதாகவும் இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறினார். கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி செளதி மன்னர் சல்மான், தனது மகன் முகமது பின் சல்மானை பிரதமராக நியமிப்பதாக அறிவித்தார்.

செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசருக்கு விலக்கு அளிக்கும் விவகாரத்தில் மோதியை மேற்கோள் காட்டியது தேவையற்றது மற்றும் பொருத்தமற்றது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது.
2014-க்குப் பிறகு பலமுறை அமெரிக்கா சென்ற நரேந்திர மோதி, 2016-ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்திலும் உரையாற்றினார்.

மறுபுறம் ஜோ பைடன் மனித உரிமைகள் விஷயத்தில் செளதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது பற்றி தனது தேர்தல் பிரசாரத்தில் பேசினார். ஆனால் அவரது அரசு செளதி பட்டத்து இளவரசருக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த ஆண்டு ஜூலையில் பைடன், செளதி அரேபியாவுக்குச்சென்றார். எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு பைடன், செளதி அரேபியாவிடம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தார். ஆனால் பட்டத்து இளவரசர் இதற்கு செவி மடுக்கவில்லை.

நரேந்திர மோதியின் இந்துத்துவ பிம்பம் இஸ்லாமிய நாடுகளில் தடையாக இருந்ததா?
2002 கலவரத்திற்குப் பிறகு ஏற்பட்ட நரேந்திர மோதியின் முஸ்லிம் விரோத பிம்பம் இஸ்லாமிய நாடுகளுடனான உறவுகளில் தடையாக இருந்ததா?
“2014 முதல் இஸ்லாமிய நாடுகளான செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்தியுள்ளோம். இந்த நாடுகளின் பாடத்திட்டத்தில் யோகா அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது. அபுதாபி மற்றும் பஹ்ரைனிலும் இந்துக்களுக்காக கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன,”என்று கடந்த மாதம் நடந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலின்போது அகமதாபாத்தின் சரஸ்பூரில் நடந்த பேரணியில் உரையாற்றிய நரேந்திர மோதி தெரிவித்தார்.
நரேந்திர மோதி கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்த நேரத்தில் வளைகுடாவின் இஸ்லாமிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் விஷயத்தை அவர் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் பிரதமர் மோதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நான்கு முறை பயணம் மேற்கொண்டார். முதல் பயணம் 2015 ஆகஸ்ட் மாதத்திலும், இரண்டாவது பயணம் 2018 பிப்ரவரியிலும், மூன்றாவது பயணம் 2019 ஆகஸ்டிலும் மேற்கொள்ளப்பட்டது.
பிரதமர் மோதி நான்காவது முறையாக 2022 ஜூன் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச்சென்றார். 2015 ஆகஸ்டில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அவர் மேற்கொண்ட பயணம், ​​34 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் அந்த நாட்டிற்கு மேற்கொண்ட முதல் பயணமாக அமைந்தது. இதற்கு முன் இந்திரா காந்தி 1981ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றிருந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி, பிரதமர் மோதி அபுதாபி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, ​​ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவரை வரவேற்பதற்காக அங்கு காத்திருந்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் பிரதமர் மோதியை வரவேற்பதற்காக நின்றிருந்தது நெறிமுறைகளுக்கு எதிரானது. ஆனாலும் அதை இந்திய பிரதமருக்காக அவர் உடைத்தார்.
மோதிக்கு கிடைத்த இந்த வரவேற்பு குறித்து பாகிஸ்தானில் பரபரப்பாக பேசப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கடந்த மே மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றபோது அவரை அமைச்சர் ஒருவர் வரவேற்றதாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் ஹை கமிஷனர் அப்துல் பாஸித் தெரிவித்தார். இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட இந்த கெளரவம் கவலையளிக்கிறது என்று அப்துல் பாஸித் கூறியிருந்தார்.
ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் நரேந்திர மோதி ஆழ்ந்த நட்பை ஏற்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. 2017ஆம் ஆண்டு குடியரசு தினவிழாவில் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சிறப்பு விருந்தினராக மோதி அரசு அழைத்தது.
அப்போது முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக இருக்கவில்லை. அபுதாபியின் பட்டத்து இளவரசராக அவர் இருந்தார். பாரம்பரியப்படி, குடியரசு தினத்தில் ஒரு நாட்டின் பிரதமரையோ அல்லது அதிபரையோ தலைமை விருந்தினராக அழைப்பது வழக்கம். ஆனால் 2017 குடியரசு தின விழாவில் அல் நஹ்யான் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.
பட மூலாதாரம், @NARENDRAMODI
இடைவெளி எப்படி மறைந்தது?
செளதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இளவரசர்கள் இருவரும், மோதியின் நடைமுறை அரசியல் பாணியையும், வலிமையான தலைவர் என்ற பிம்பத்தையும் விரும்புகிறார்கள் என்று அபுதாபியில், மேற்கத்திய நாட்டின் முன்னாள் தூதர் ஒருவர் கூறினார்.
பிரதமர் மோதி 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் செளதி அரேபியாவிற்கு பயணம் செய்தார். 2019 இல் பஹ்ரைன் மற்றும் 2018 இல் ஒமான், ஜோர்டன், பாலஸ்தீனிய பிரதேசம் மற்றும் 2016 இல் கத்தார் ஆகிய நாடுகளுக்கும் அவர் சென்றார்.
பிரதமர் மோதி 2015 இல் ஷேக் சயீத் கிராண்ட் மசூதி மற்றும் 2018 இல் ஓமன் சுல்தான் கபூஸ் கிராண்ட் மசூதிக்கும் சென்றிருந்தார். நரேந்திர மோதிக்கு செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் உயரிய சிவிலியன் விருதுகளும் வழங்கப்பட்டன.
”நரேந்திர மோதியின் அரசியல் பின்னணி அரேபிய தீபகற்பத்துடனான உறவை மேம்படுத்துவதற்குத் தடையாக இருக்கும் என்று ஆரம்பத்தில் தோன்றியது. மோதி இந்து தேசியவாதத்தின் வலுவான ஆதரவாளர்,” என்று திங்க் டேங்க் கார்னகி எண்டோவ்மென்ட் 2019 ஆகஸ்டில் தனது அறிக்கையில் எழுதியது.
2002 குஜராத் கலவரத்திற்குப் பிறகு மோதியின் சர்வதேச பிம்பமும் பாதிக்கப்பட்டது. இந்தக் கலவரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆனால் வளைகுடா நாடுகளின் தலைவர்கள் குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகமும் செளதி அரேபியாவும் மோதியை இந்த வடிவத்தில் பார்க்கவில்லை.
அரசியல் இஸ்லாத்தின் தீர்வில் பாதுகாப்பு குறித்த மோதியின் அணுகுமுறை இரு நாட்டு ஆட்சியாளர்களின் கருத்துக்களுடன் ஒத்துப் போனது. 2019 பிப்ரவரியில் புது டெல்லியில் நடந்த ஒரு விழாவில் நரேந்திர மோதியை தனது ‘மூத்த சகோதரர்’ என்று செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் அழைத்தார்.
“2002 கலவரத்தின் போது, ​​புது டெல்லியில் உள்ள வளைகுடா நாடுகளின் தூதரகங்கள் இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் எந்த விளக்கத்தையும் கோரவில்லை.இருப்பினும், இஸ்லாமிய நாடுகள் அமைப்பில்(OIC) பாகிஸ்தான் இந்த விவகாரத்தை எழுப்பி வருகிறது,” என்று மத்திய கிழக்கு நிபுணரும், திங்க் டேங்கான ORF இந்தியாவின் உறுப்பினருமான கபீர் தனேஜா குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அமெரிக்கா மோதிக்கு விசா தடை விதித்ததும் விவாதம் மேலும் தொடங்கியது. 2014 மக்களவை தேர்தலில் நரேந்திர மோதி வெற்றி பெற்றபோது ​​வளைகுடா நாடுகளின் எதிர்வினை உற்சாகமானதாக இருக்கவில்லை. இந்தியாவில் ஏற்பட்ட மாற்றத்தை வளைகுடா நாடுகள் திறந்த மனதுடன் வரவேற்கவில்லை. ஆனால் மெல்ல மெல்ல சூழல் மாறியது. அணிசேரா கொள்கை மோதியை கட்டிப்போடவில்லை.
முதல் வளைகுடா போரில் இந்தியாவின் நிலைப்பாடு சதாம் உசேனுக்கு ஆதரவாக இருந்தது. 2014-க்குப் பிறகு, வளைகுடா நாடுகளுடனான உறவை மிகவும் பயனுள்ள முறையில் மோதி மாற்றினார்.
“2014ல் மோதிக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களில் முகமது பின் சயீதும் ஒருவர்” என்று கபீர் தனேஜா, எழுதியுள்ளார்.

மூத்த சகோதரர்’ என்று வர்ணிக்கப்பட்ட மோதி
2019 பிப்ரவரியில் செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், இந்தியா வந்தார். புதுடெல்லி விமான நிலையத்தில் பட்டத்து இளவரசர் தரையிறங்கியபோது அவரை வரவேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோதி அங்கு நின்றிருந்தார். பிரதமர் மோதி வரைமுறைகளை மீறி விமான நிலையத்திற்கு சென்றார்.
அப்போது பட்டத்து இளவரசர் செளதி அரேபியாவின் பிரதமராகக்கூட இருக்கவில்லை. இந்த பயணத்தின் போது ​​புதுடெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் செளதி இளவரசர், “நாங்கள் இருவரும் சகோதரர்கள். பிரதமர் மோதி எனது மூத்த சகோதரர். நான் அவருடைய இளைய சகோதரன். நான் அவரைப் பாராட்டுகிறேன்.
அரேபிய தீபகற்பத்துடனான இந்தியாவின் உறவு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. அரேபிய தீபகற்பத்திற்கும் இந்தியாவிற்கும் உள்ள தொடர்பு நமது டிஎன்ஏவில் உள்ளது,”என்று கூறியிருந்தார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்திருந்த முகமது பின் சல்மான், “கடந்த 70 ஆண்டுகளாக இந்திய மக்கள் நண்பர்களாகவும், செளதி அரேபியாவைக் கட்டியெழுப்புவதில் பங்குதாரர்களாகவும் உள்ளனர்” என்று கூறியிருந்தார்.
2014ல் நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்த பிறகு, வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் உறவு வலுப்பெற்றுள்ளதாக பல நிபுணர்கள் கருதுகின்றனர். குஜராத் முதல்வராக இருந்தபோது உருவான ​​முஸ்லிம் விரோத பிம்பத்தை உடைக்க, வளைகுடா நாடுகளின் மீது மோதி சிறப்பு கவனம் செலுத்தினார் என்றும் பலர் நம்புகிறார்கள்.
2022 மே மாத இறுதியில், பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா, முகமது நபிகள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார். இதற்கு இஸ்லாமிய நாடுகளில் இருந்து கடுமையான எதிர்வினைகள் வரத் தொடங்கின.
பட மூலாதாரம், GETTY IMAGES
அந்த நேரத்தில் அப்போதைய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கத்தாருக்கு சுற்றுப்பயணம் சென்றார். வெங்கையா நாயுடுவுடன் நடத்தவிருந்த அரசு விருந்தை கத்தார் ரத்து செய்தது. இது இந்தியாவின் கெளரவத்தை பாதித்ததாக பலர் கருதுகின்றனர்.
நூபுர் ஷர்மாவின் அறிக்கை இந்தியாவுக்கு பின்னடைவா?
​​“அரபு நாடுகளுடனான இந்தியாவின் உறவு சில சம்பவங்களால் தாக்கம் ஏற்படும் அளவிற்கு அத்தனை பலவீனமானது என்று நான் நினைக்கவில்லை,”என்று லிபியா மற்றும் ஜோர்டானுக்கான இந்திய தூதராக இருந்த அனில் திரிகுணாயத் குறிப்பிட்டார்.
”இந்த அரசு, அரபு நாடுகளை தனது முன்னுரிமையில் வைத்துள்ளது என்பது முற்றிலும் உண்மை. மோதியின் கீழ் அரபு நாடுகளுடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளன. இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பாரம்பரியம் நமது பொதுவான கலாசாரத்தின் ஒரு பகுதியாகும் என்றும் அரபு நாடுகளுடனான நட்பை வலுப்படுத்த இது அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.”
“கிட்டத்தட்ட 90 லட்சம் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வேலை செய்கிறார்கள். இந்தியர்கள் தங்கள் கடின உழைப்பாலும் நேர்மையாலும் இந்த நாடுகளில் நற்பெயரைப் பெற்றுள்ளனர். அவர்களின் உழைப்பைக் கெடுக்கும் எதுவும் நமது உள்நாட்டு அரசியலில் நடக்கக்கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இந்த நாடுகளில் இந்தியாவுக்கு நல்ல இமேஜ் உள்ளது. அதை வலுப்படுத்த மோதி அரசும் கடுமையாக உழைத்துள்ளது. செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் பிரதமர் நரேந்திர மோதிக்கு தங்களது உயரிய சிவிலியன் விருதுகளையும் வழங்கியுள்ளன,” என்று அனில் திரிகுணாயத் மேலும் கூறினார்.

இந்தியாவின் ஒத்துழைப்பு
பல முக்கியமான துறைகளில் வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இந்த நாடுகளுடன் இந்தியா பல முனைகளில் இணைந்து செயல்படுகிறது.
2018 இல் செய்துகொள்ளப்பட்ட ஏழு ஆண்டுகால ஒப்பந்தத்தின் கீழ் அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனம் அதாவது ADNOC, இந்தியாவின் செயல் உத்தி பெட்ரோலிய இருப்பை நிரப்பும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இதன் கீழ், மங்களூரில் உள்ள ஒரு சேமிப்பகத்தில் 50.860 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் நிரப்பப்படவேண்டும்.
ADNOC மற்றும் செளதி அரேபியாவின் Aramco ஆகிய நிறுவனங்கள் இணைந்து மகாராஷ்டிராவில் 12 லட்சம் பீப்பாய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இதற்கு 44 பில்லியன் டாலர்கள் செலவாகும்.
இரான் போன்ற நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதிக்கும் பட்சத்தில் இந்த திட்டங்கள் மிகவும் முக்கியமானவை. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு பல கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார். இந்த தடைகளுக்குப் பிறகு இரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்த வேண்டி வந்தது.
2018 ஆம் ஆண்டில் இரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா அதிகாரப்பூர்வமாக நிறுத்தியது. இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் இரானின் பங்கு 10%.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான இந்தியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பல நிலைகளில் வளர்ந்துள்ளது. இஸ்லாமியவாத தீவிரவாதிகளுக்கு எதிராக முகமது பின் சயீத்தின் நிலைப்பாடு மிகவும் கடுமையாக இருந்தது. இஸ்லாமியவாத தீவிரவாதத்திற்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸிடமிருந்து இந்தியா நிறைய உதவிகளைப் பெற்றுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது மற்றும் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. அப்போதும் வளைகுடாவின் இஸ்லாமிய நாடுகளிடமிருந்து கடுமையான எதிர்வினை எதுவும் இல்லை. வரலாற்று ரீதியாக பாகிஸ்தான் GCC (வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்) நாடுகளுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 1970களில் வெறும் 180 மில்லியன் டாலராக இருந்தது. அது இன்று 73 பில்லியன் டாலராக வளர்ந்துள்ளது.

2021-22ல் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இருந்தது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இந்தியா அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது.

2021-22ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இந்தியாவின் ஏற்றுமதி 28 பில்லியன் டாலர் ஆகும். அதேசமயம் 2021 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா இருந்தது. எண்ணெய் அல்லாத வணிகம் 45 பில்லியன் டாலர்களாக இருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையே விரிவான பொருளாதார கூட்டாளித்துவ ஒப்பந்தம் 2022 பிப்ரவரி 18 ஆம் தேதி கையெழுத்தானது. இரு நாடுகளின் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலர்களாக எட்டுவது இந்த ஒப்பந்தத்தின் இலக்கு.

வரலாற்று சிறப்புமிக்க உறவு
அரபு நாடுகளுடனான இந்தியாவின் உறவு வரலாற்று சிறப்புமிக்கது. வளைகுடா அரபு நாடுகளில் சுமார் 90 லட்சம் இந்திய மக்கள் வாழ்கின்றனர். இந்த 90 லட்சம் இந்தியர்களும் அங்கு சம்பாதித்து ஆண்டுதோறும் பல லட்சம் டாலர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். 2019 இல் இந்த இந்தியர்கள் 40 பில்லியன் டாலர்கள் அனுப்பியுள்ளனர்.

இந்தத் தொகை இந்தியாவிற்கு வந்து சேர்ந்த மொத்தப்பணத்தின் 65 சதவிகிதமாகவும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவிகிதமாகவும் இருந்தது.

இந்தியா தனது மூன்றில் ஒரு பங்கு எண்ணெயை வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இதனுடன் கத்தார் இந்தியாவின் முன்னணி எரிவாயு சப்ளையர் நாடாக உள்ளது.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் அதாவது ஜி.சி.சி யில் மொத்தம் ஆறு நாடுகள் உள்ளன. இந்த நாடுகள்- செளதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஒமான், கத்தார் மற்றும் பஹ்ரைன். GCC நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 2021-2022 இல் 154 பில்லியன் டாலர்கள் ஆகும். இது இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 10.4 சதவிகிதமாகவும், மொத்த இறக்குமதியில் 18 சதவிகிதமாகவும் உள்ளது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக செளதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இந்தியாவுடன் உறவுகளை வலுப்படுத்தத் தொடங்கின. அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் கைவிட்டுவிடும் என்றும், பாகிஸ்தானை நம்ப முடியாது என்றும் இரு நாடுகளும் எப்போதும் எச்சரிக்கையாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

செளதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல்-சவுத் 2006-ம் ஆண்டு இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் அவரது பயணம் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.

செளதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியாவின் தேசிய உள்கட்டமைப்பில் முதலீடு செய்து வருகின்றன. இது தவிர இந்தியாவுடனான இரு நாடுகளின் எண்ணெய் அல்லாத வர்த்தகம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து கோதுமை மற்றும் தடுப்பூசி இறக்குமதியும் அதிகரித்துள்ளது.

“செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல்-நஹ்யான் ஆகிய இருவருமே இந்தியாவுடனான உறவு மிகவும் முக்கியமானது என்று நம்புகிறார்கள்.
அவர்கள் இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் கவனம் செலுத்துவதில்லை. ஆபிரஹாம் உடன்படிக்கைக்குப் பிறகு அரபு நாடுகளில் இஸ்ரேலுக்கு அதிகரித்த வரவேற்பு, வளைகுடா நாடுகளின் கோபம் பற்றிய இந்தியாவின் அச்சத்தை குறைத்தது.

இஸ்ரேலுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோதி அரபு நாடுகளுடன் உறவை வலுப்படுத்துவதற்காக மோதி இஸ்ரேலை புறக்கணிக்கவில்லை. மோதி அரசு இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளுடன் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை பல நிலைகளில் முன்னெடுத்துச்சென்றது. இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்காவும் I2U2 கூட்டணியை உருவாக்கின,” என்று அனில் திரிகுணாயத் கூறுகிறார்.

நபிகள் நாயகம் பற்றிய கருத்துக்கள்
இவை அனைத்தும் ஒருபுறம் இருந்தாலும், நாட்டிற்குள் சில முக்கியமான விஷயங்களை இந்தியா கவனித்துக் கொள்ள வேண்டும் என்று செளதி அரேபியா உட்பட பல நாடுகளுக்கு இந்திய தூதராக இருந்த தல்மீஸ் அகமது கருதுகிறார்.

“இஸ்லாமிய சமூகம் மதத்தின் பெயரால் துன்புறுத்தப்பட்டது, இஸ்லாமிய பாரம்பரியத்தை அழிக்க முயற்சிப்பது போன்ற பல நிகழ்வுகள் இந்தியாவில் காணக்கிடைக்கிறது. எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடக் கூடாது என்பது நம் மரபு.
ஆனால் முகமது நபி என்று வரும்போது அரபு நாடுகள் இதைப் பற்றி மௌனம் காக்காது. உள்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து, வெளிநாட்டில் ஒழுக்கத்தைப்பற்றி உயர்வாகப் பேசினால், அது நீண்ட காலம் நீடிக்காது என்று வெளிநாட்டில் பலர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

விஷமிகளின் இந்தக்கருத்துக்கள் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்று நூபுர் ஷர்மா சர்ச்சை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது,
“ஜிசிசி நாடுகளில் இருந்து இந்தியர்கள் அனுப்பும் பணத்தின் அளவு, இந்தியாவின் வருடாந்திர எண்ணெய் இறக்குமதி செலவின் மூன்றில் ஒரு பங்கை நிறைவுசெய்துவிடும். உள்நாட்டு அரசியலில் இந்தியா இவற்றைச் சரி செய்யாவிட்டால் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். இந்தியப் பொருட்களின் புறக்கணிப்பு ஆரம்பமானது எதிர்பாராத ஒன்றாகும். இந்திய பணியாளர்களின் நியமனத்திலும் எதிர்மறையான தாக்கம் ஏற்படும்,” என்று தல்மீஸ் அகமது கூறினார்.

அமெரிக்கா, சீனா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் நான்காவது பெரிய வர்த்தக பங்காளியாக செளதி அரேபியா உள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 18% மற்றும் LPG யின் 22 சதவிகித்தையும் செளதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.

2021-22 ஆம் ஆண்டில், செளதி அரேபியா மற்றும் இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 44.8 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதில் செளதி அரேபியா இந்தியாவிற்கு 34 பில்லியன் டாலர் ஏற்றுமதியும், 8.76 பில்லியன் டாலர் இறக்குமதியும் செய்துள்ளது. 2021-22ல் இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் செளதி அரேபியாவின் பங்கு 4.14% ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.