கோல்டன் டோம் பாதுகாப்பு.. டிரம்பின் அழைப்பை நிராகரித்தது கனடா!

அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா இணையும்பட்சத்தில், கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்பு இலவசமாகவே பெறலாம் என்று அதிபர் டிரம்ப் விடுத்தக் கோரிக்கையை கனடா நிராகரித்துவிட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை, கனடா பிரதமர் மார்க் கார்னி அலுவலகம் அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.
கனடா, ஒரு பெருமைமிக்க, சுதந்திர நாடு. அதன் இறையாண்மையை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு திட்டமும் இல்லை என்று கனடா நாட்டு பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிமுகப்படுத்திய கோல்டன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பை சுதந்திர நாடாகவே இருந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், கனடாவுக்கு 61 பில்லியன் டாலர்கள் ஆகும். அல்லது, அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைந்துகொண்டால், இந்த பாதுகாப்பு அமைப்பு முழுக்க இலவசமாகவே கிடைத்துவிடும்.
அமெரிக்கா, அதிநவீன உலகில் வான் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ’கோல்டன் டோம்’ என்ற வான் பாதுகாப்பு திட்டத்தை டிரம்ப் வெளியிட்டிருந்தார். உலகின் எங்கிருந்தும், ஏன் விண்வெளியிலிருந்து கூட அமெரிக்காவைத் தாக்க முடியாத வகையில் இந்த கோல்டன் டோம், 175 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் உருவாக்கப்பட உள்ளது. இந்த வான் பாதுகாப்பு அமைபப்னது இன்னும் மூன்று ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்றும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில்தான், கோல்டன் டோம் வான் பாதுகாப்பு அமைப்புக்கு ஒரு பிரசாரம் செய்வது போல, டிரம்ப் விடுத்த அழைப்பில், ஒருவேளை, இந்த கோல்டன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பைக் கனடா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், பணம் செலுத்த வேண்டும், அல்லது அமெரிக்காவின் அங்கமாக மாறிவிட்டால் அதற்கு இந்த வான் பாதுகாப்பு அமைப்பு இலவசமாகவே கிடைத்துவிடும் என்று கூறியிருந்தார்.
கடந்தகாலங்களில், பாதுகாப்பு அமைப்புக்குக் கனடா செலவிட்டத் தொகை குறித்து விமர்சித்திருக்கும் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுடன் இணைவதன் மூலம், கனடா தனது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.