;
Athirady Tamil News

மேற்கத்திய நாடுகளின் நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் போரில் வெல்ல முடியும்- உக்ரைன் அதிபரின் ஆலோசகர் கூறுகிறார்!!

0

உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் ஓர் ஆண்டை நெருங்கி உள்ளது. ஆனாலும் போர் முடிவுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் தென்படவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், இருதரப்பும் நாளுக்குநாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. ரஷியாவின் தாக்குதலை எதிர்கொண்டு உக்ரைன் பதில் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. மேற்கததிய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், மேற்கத்திய நாடுகள் ஆயுத விநியோகத்தை அதிகரித்தால், குறிப்பாக நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளை அதிகமாக வழங்கினால், இந்த ஆண்டு போரில் வெற்றிபெற முடியும் என உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கேலோ பொடோலியாக் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது:- 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான இலக்கை தாக்கும் சக்தி கொண்ட ஏவுகணைகளால் மட்டுமே, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்த முடியும், இந்த சூழ்நிலையானது இலையுதிர்காலத்தில் போரை முடிவுக்கு கொண்டுவரும். நீண்ட தூர ஏவுகணைகள் மூலம், ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் ஊடுருவி ரஷிய ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து தாக்க முடியும். அமெரிக்கா கடந்த ஆண்டு உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளை வழங்கியது. அவை சுமார் 80 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய ஏவுகணைகளை செலுத்தக்கூடியவை. இது பல போர் முனைகளில் போரை உக்ரைனுக்கு சாதகமாக மாற்றியிருக்கிறது. சமீபத்தில் இதேபோன்ற பிரெஞ்சு ஏவுகணை அமைப்புகளை உக்ரைன் பெற்றுள்ளது. ஆனால், US ATACMS ஏவுகணைகளை வழங்கும்படி அமெரிக்காவுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. இது சுமார் 300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடியது. இந்த ஏவுகணை அமைப்புகள் மூலம், கிழக்கு உக்ரைன் மற்றும் 2014 இல் ரஷியாவால் இணைக்கப்பட்ட கருங்கடல் தீபகற்பத்தில் உள்ள டான்பாஸ் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்து ரஷிய ராணுவ உள்கட்டமைப்பையும் அழிக்க முடியும். நாங்கள் ரஷியாவைத் தாக்க மாட்டோம், தற்காப்புப் போரை நடத்துகிறோம். ஆனால் அதிக அளவிலான மேற்கத்திய கனரக ஆயுதங்களை வழங்காவிட்டால், இந்த போர் பல ஆண்டுகள் நீடிக்கும்.

உக்ரைனுக்கு கவச வாகனங்கள், குறிப்பாக ஜெர்மனின் லியோபார்ட்ஸ் மற்றும் பீரங்கிகள் போன்ற கனரக பீரங்கி வாகனங்கள் தேவைப்படுகிறது. ஐரோப்பாவும் அமெரிக்காவும் விரைவில் ஆயுதங்களை அனுப்பும் பணியை விரைவுபடுத்தக்கூடும். ஏனெனில் இந்த ஆயுதங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முக்கியம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

அமெரிக்காவின் பேட்ரியாட்ஸ், அல்லது பிரான்சின் க்ரோடேல் போன்ற புதிய விமான எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகள், உக்ரைனின் எரிசக்தி உற்பத்தி மையங்களுக்கு எதிரான ரஷிய வான் தாக்குதல் அச்சுறுத்தலை விரைவில் தடுக்க முடியும்.

ஆயுதங்கள் வரப்பெற்றால் ஒரு மாத கால இடைவெளியில் எங்கள் வான் பகுதியை மூடிவிடுவோம். தற்போது ரஷியாவால் ஏவப்படும் ஏவுகணைகளில் 75 சதவீத ஏவுகணைகளை உக்ரைன் சுட்டு வீழ்த்துகிறது. விரைவில் 95 சதவீத ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.