;
Athirady Tamil News

இந்தியாவின் AMBRONOL, DOK-1 Max இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: உலக சுகாதார நிறுவனம் !!

0

இந்தியாவின் நொய்டா நகரைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் இருமல் மருந்துகளான AMBRONOL, DOK-1 Max ஆகியனவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிறுவனத் தயாரிப்புகள் தர நிர்ணயக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை என்று கூறியுள்ளது.

இன்றைய தேதிவரை சம்பந்தப்பட்ட மரியான் பயோடெக் நிறுவனம் தங்கள் இருமல் மருந்துகளின் பாதுகாப்பு, தரம் குறித்து எவ்வித உத்தரவாதமும் உலக சுகாதார அமைப்புக்கு தரவில்லை என்பதால் இந்த எச்சரிக்கையை விடுப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதிப்புக்குள்ளான உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதார அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் அந்த இரு மருந்துகளிலும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிலான டைஎத்திலின் க்ளைக்கால், எத்திலீன் க்ளைக்கால் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஹூ தெரிவித்துள்ளது. இந்த மருந்துகளை வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உஸ்பெகிஸ்தான் ஆய்வக அறிக்கையின்படி அந்நாடு இனி இந்த இரண்டு மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

18 குழந்தைகள் பலியான சோகம்: கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை அருந்தியதில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Doc-1 Max என்ற இருமல் மருந்த உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த மருந்து இந்தியாவின் நொய்டா நகரில் உள்ள மேரியான் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை நாங்கள் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அதில் எத்திலின் க்ளைக்கால் என்ற நச்சுப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

உயிரிழந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக 2 முதல் 7 நாட்கள் வரை அன்றாடம் 2.5 ml முதல் 5 ml அருந்தியுள்ளனர். அன்றாடம் மூன்று முதல் 4 முறை இந்த மருந்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மருந்துக்கடைக்காரர்கள் பரிந்துரையின்படி பெற்றோர் இந்த மருந்தினை குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளனர். இதனையடுத்து நாட்டில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளிலும் இருந்து Doc-1 Max மருந்தை அரசு திரும்பப்பெற்றுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

காம்பியாவில் நடந்த துயரம்: கடந்த அக்டோபர் மாதம் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில் இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தின் தயாரிப்புகள் இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. கெட்டுபோன மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவைத் தவிர வேறு சில நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகியிருக்கலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் தான் AMBRONOL, DOK-1 Max இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.