;
Athirady Tamil News

அம்மா உணவகத்தை மூடுவதா?- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!!

0

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சேலம் மாநகரம் கொண்டலாம்பட்டிக்கு உட்பட்ட மணியனூர் அம்மா உணவகத்தில் பணிபுரியும் 6 மகளிரை பணியில் இருந்து அகற்றிவிட்டு தி.மு.க.வினருக்கு வேண்டியவர்களை பணியமர்த்தும் முயற்சி நடைபெறுவதாகவும், மாநகராட்சி சார்பில் எவ்வித நிதியுதவியும் அளிக்கப்படாத நிலையில், அங்கு பணிபுரியும் மகளிர் தங்களுடைய பணத்தை போட்டு அம்மா உணவகத்தை நடத்தி வருவதாகவும், மாமன்ற உறுப்பினருக்கும், தனக்கும் மாதம் 5,000 ரூபாய் தரவேண்டும் என்று சேலம் மாநகர தி.மு.க. மண்டலக் குழுத் தலைவர் கோருவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

இதுகுறித்து மாமன்ற உறுப்பினரிடம் கேட்டபோது, அம்மா உணவகம் இயங்கும் கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து இருப்பதால், அதைப் புதிதாகக் கட்ட நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், கட்டிட பணிகள் முடியும் வரை அவர்களை வேறு வேலை பார்த்துக் கொள்ளச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில், மணியனூர் அம்மா உணவகம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தவிர, தி.மு.கவினரின் வற்புறுத்தலின் பேரில், சேலத்தில் மேலும் சில அம்மா உணவகங்களை மூடும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அம்மாவால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், தி.மு.க. அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மணியனூர் அம்மா உணவகம் அங்கே தொடர்ந்து செயல்படவும், உள்ளூர் தி.மு.க.வினர் இதில் தலையிடுவதை தடுத்து நிறுத்தவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.