;
Athirady Tamil News

மாறி வரும் மாமல்லபுரம்- துணை நகரமாவதால் புதிய நவீன வசதிகள்!!

0

மாமல்லபுரம் என்றதுமே அங்குள்ள கற்சிற்பங்கள் தான் நினைவுக்கு வரும். இங்குள்ள புராதன சின்னங்களை பார்க்க தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த இடமாக மாமல்லபுரம் மாறி உள்ளது. சிறப்புமிக்கு சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கும் மாமல்லபுரம், தற்போது சென்னை அடுத்த துணை நகரமாக மாற உள்ளது. இதற்கான அறிவிப்பை கவர்னர் ஆர். என்.ரவி சட்டசபையில் அறிவித்தார். இதையடுத்து அரசின் அனைத்து துறையின் கவனமும் தற்போது மாமல்லபுரம் பக்கம் திரும்பி உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரம் என்றாலே சவுக்கு காடுகளும், முறையான அடிப்படை வசதிகளும் இல்லாததே நினைவுக்கு வரும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இரவு இருட்டுவதற்கு முன்பே திரும்பி விடுவார்கள்.

இந்தநிலை தற்போது படிப்படியாக குறைந்து, இ.சி.ஆர், ஓ.எம்.ஆர் சாலைகள் மேம்படுத்தப்பட்டது. போக்குவரத்து வசதி, நகரில் ஒளி விளக்குகள் அதிகரிக்கப்பட்டது. மேலும் தொல்லியல்துறை சார்பில் புராதன சின்னங்களை சுற்றி புல்வெளி அமைத்து பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங், முறைசாரா மாநாடாக மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். தலைவர்கள் இருவரும் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இருந்த பகுதியில அமர்ந்து ரசித்தனர். அங்குள்ள அனைத்து சின்னங்களையும் பார்வையிட்டு அதன் சிறப்புகளை பிரதமர் மோடி, சீன அதிபரிடம் விளக்கி கூறினார்.

இதன் பின்னர் மாமல்லபுரத்தின் மதிப்பு உலக அரங்கிலும் பல மடங்கு அதிகரித்தது. அதன் தொன்மை மற்றும் புராதன சின்னங்களின் வரலாறு குறித்த தேடுதல்கள் அதிகரித்தன. பிரமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகைக்கு பின்னர் மாமல்லபுரம் நகரின் அழகு மேலும் அதிகரிக்கத்தொடங்கியது. பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள், புராதன சின்னங்களுக்கு இரவில் லேசர் ஒளி, கருங்கல் நடைபாதை, டிஜிட்டல் பலகைகள், நவீன தெரு விளக்குகள் என மேம்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு “சர்வதேச செஸ் ஒலிம்பியாட்” போட்டி இந்தியாவில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதனை தமிழகத்தில் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து அனுமதி பெற்றார். இந்த போட்டியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த மாமல்லபுரத்தில் நடத்தியது கூடுதல் சிறப்பு ஆகும். இதன் பின்னர் மாமல்லபுரத்தின் பெயர் மற்றும் அங்குள்ள கற்சிற்பங்களின் மதிப்பு உலக அளவில் மேலும் உயர்ந்தது.

இதனால் தற்போது மாமல்லபுரம் கூடுதலாக சர்வதேச கவனம் பெற்று உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவிற்கு குவியும் நகரமாக மாறி உள்ளது. கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகையின் கணக்கெடுப்பில் உலக அதிசயமான டெல்லியில் உள்ள தாஜ்மகாலை பின்னுக்கு தள்ளிவிட்டு மாமல்லபுரம் முதல் இடத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மாமல்லபுரம் துணை நகரமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதன் அழகிய முகம் மேலும் வளர்ச்சி அடைந்து மாறி வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கைவசம் உள்ள ஆளவந்தாரின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் துணை நகரம் அமைய உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இன்னும் கூடுதலாக அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சென்னை நகரருக்கு இணையாக மாமல்லபுரம் மாறும் என்று உள்ளூர் மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதுகுறித்து மால்லபுரம் பகுதி மக்கள் கூறும்போது, மாமல்லபுரம் துணை நகரமாவதால் மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் உள்ளிட்ட நவீன வசதிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். மாமல்லபுரம் சுற்றுலா தலமாக இருந்தாலும் இதற்கு முன்பு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

பிரதமர் மோடி-சீனஅதிபரின் வருகை மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பின்னர் மாமல்லபுரத்தின் மதிப்பு வெகுவாக உயர்ந்து உள்ளது. இந்திய அளவிலும், உலக அளவிலும் மாமல்லபுரம் உச்சத்தில் உள்ளது. மாறி வரும் மாமல்லபுரத்தை நினைத்தால் இங்கு வசிப்பது பெருமையாக இருக்கிறது என்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.