;
Athirady Tamil News

குழப்பமான சூழலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம்!!

0

உள்ளாட்சித் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தேர்தல் ஆணைக்குழுவிற்குள் பொதுமக்களுக்குத் தெரியவரும் வகையில் காணப்படும் குழப்பமான சூழலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் வலியுறுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் வலுவான அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.

எனவே, தேர்தல் ஆணைக்குழு அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

தேர்தலை நடத்துவதற்கு இணைக்கப்பட வேண்டிய நிறுவனங்களுடனான தற்போதைய உறவுகளும் குழப்பமில்லாத வகையில் பேணப்பட வேண்டும் என நாம் நம்புகின்றோம்.

தற்போது தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகியுள்ளதோடு , அவரது பதவி விலகலுக்கான காரணம் ஆணைக்குழுவின் தலைவரது செயற்பாடுகளாகும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்தோடு ஆணைக்குழுவின் மற்றுமிரு உறுப்பினர்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கோ அல்லது கூட்டங்களுக்கு சமூகமளிப்பதில்லை என்றும் தெரியவருகிறது.

இதேவேளை தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் , அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாத அதே வேளை, இதற்கான அறிவிப்பில் ஆணைக்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கையெழுத்திடவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

தேர்தலை சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடத்துவதோடு, அதன் வழக்கமான முடிவுகளின் செல்லுபடியாகும் தன்மையும் மிகவும் முக்கியமானது என்று தேசிய தேர்தல் கண்காணிப்பு மையம்உறுதியாக நம்புகிறது.

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரின் சான்றுபடுத்தழுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குழுநிலை விவாதத்தின் போது சட்ட மூலத்தில் சேர்க்கப்பட்ட திருத்தங்களை, சபாநாயகரின் சான்றுபடுத்தலின் பின்னர் சரியாக அறிந்து கையாள முடியும்.

எனினும் தேர்தல் செலவு தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணைக்குழு இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாகவும் , அது சட்ட ரீதியாக காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறிருந்தும் சபாநாயகர் குறித்த சட்டத்திற்கு சான்றளிக்கும் முன், அது செயல்படுத்தப்படும் என்று சுட்டிக்காட்டும் நடவடிக்கைகளை எடுப்பது முறையானதல்ல.

மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் ஆணைக்குழு மிக அவசரமாக செயற்படுகின்றமை எம்மை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது.

தேர்தல் ஆணைக்குழுவில் பிளவுகள் இருப்பதாகவும், கூட்டங்களை நடத்த நடப்பெண் கூட இல்லை என்றும், சில உறுப்பினர்கள் ஆணைய அலுவலகத்துக்கு வருவதில்லை என்றும் பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. இவை மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலைமையாகும்.

இது பொதுமக்கள் மத்தியில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அச்சத்தையும் வலுவான அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.

எனவே, தேர்தல் ஆணைக்குழு அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.