;
Athirady Tamil News

திருவனந்தபுரம் தொழுவன்கோடு சாமுண்டி தேவி கோவில் பொங்கல் வழிபாடு 5-ந் தேதி நடக்கிறது!!

0

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள தொழுவன்கோட்டில் சாமுண்டி தேவி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவனந்தபுரம் மாவட்டம் நகர எல்லையின் வடகிழக்கு பகுதியில் விட்டியூர்காவுக்கு அருகே அமைந்துள்ளது. இங்கு துர்காவின் வடிவமாக சாமுண்டி தேவி குடி கொண்டுள்ளார். 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலை களரி குருக்கள் என்றழைக்கப்படும் ஈட்டு வீட்டில் தரவாடு குடும்பத்தினர் நிர்வகித்து வருகிறார்கள்.

வாரத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களில் மட்டுமே இந்த கோவிலில் நடை திறக்கப்பட்டு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். மும்மூர்த்திகளின் முன்னிலையில் பிரதிஷ்டை நடைபெற்ற பாரதத்தின் ஒரே கோவில் தொழுவன்கோடு சாமுண்டி தேவி கோவில் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மார்த்தாண்டவர்மா மகாராஜா வணங்கி வழிபடும் தெய்வமாக சாமுண்டி தேவி விளங்கியதால் மார்த்தாண்டவர்மா மகாராஜா மாதத்திற்கு ஒருமுறை இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அசுர நிக்ரஹத்திற்குப் பிறகு அலைந்து திரிந்த தேவி இறுதியாக ஒரு வாசல் கோட்டையில் உள்ள மேக்காடு குடும்ப வீட்டை அடைந்து அங்கேயே இருப்பிடமானாள் என்று தல வரலாறு கூறுகிறது.

அடர்ந்த மரங்கள் நிறைந்த ஒரு அழகான மற்றும் அமைதியான பகுதி தொழுவன்கோடு. இந்த இடம் ஒரு காலத்தில் தொழுவன்காடு என்று அழைக்கப்பட்டது. பராசக்தியான சாமுண்டிதேவி இங்கு குடி கொண்ட பிறகு இந்த தெய்வீக இருப்பிடம் தொழுவன்கோடு என்று ஆனது. பாரம்பரியமும், பழமையும் வாய்ந்த தொழுவன்கோடு சாமுண்டி தேவி கோவிலில் வாரத்தில் 3 நாட்கள் தவிர வருடத்திற்கு ஒரு முறை 11 நாட்கள் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது. அதன்படி 2023-ம் ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து தேவியின் அருளை பெற்று செல்கிறார்கள்.

விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணி முதல் 9 மணி வரை நவகிரக ஹோமம், நவகிரக பூஜை நடைபெறுகிறது. மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை தினமும் சக்ர பூஜை நடந்து வருகிறது. விழாவின் 11-ம் நாளில் 5-ந் தேதி அன்று சிகர நிகழ்ச்சியாக காலை 5.30 மணிக்கு லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு படைக்கும் பொங்கல் வழிபாடு நடக்கிறது. பொங்கல் வழிபாட்டுக்கு பிறகு நிவேத்தியம் நடைபெறுகிறது. அன்று இரவு 9 மணிக்கு சிறுமிகளின் தாலப்பொலி நேர்ச்சை வழிபாடு நடைபெறும். அப்போது கோவிலுக்குள் ஆண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. விழாவையொட்டி தினமும் இரவு கலாசார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு உள்ளதால் கோவில் தரிசனத்திற்கு தினமும் திரளான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

கோவில் திருவிழாவையொட்டி நகரின் முக்கிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருவிழாவையொட்டி 11 நாட்கள் முழு பகலும் நடை திறக்கப்படுவதால் வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை), 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் கோவில் நடை அடைக்கப்படுவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.