;
Athirady Tamil News

சீனாவை சுற்றி வளைக்க திட்டமிடுகிறதா அமெரிக்கா: மீண்டும் சர்ச்சை !!

0

தென் சீன கடல் பகுதியை ஆக்கிரமிப்பதில் சீனாவுக்கும், அமெரிக்காவிற்கும் பல ஆண்டுகளாக மோதல்கள் நடந்து வரும் சூழலில், தற்போது இந்த விவகாரத்தில் அமெரிக்கா புதிய திட்டங்களை வகுத்து வருகிறது.

பிலிப்பைன்ஸில் கூடுதலாக நான்கு ராணுவ தளங்களை அமைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அந்த ராணுவ தளங்கள் அமையவிருக்கும் நிலப்பரப்பானது, தென்சீன கடல் எல்லையையும், தைவானின் எல்லைகளையும் ஆக்கிரமித்திருக்கும் சீன ராணுவத்தை கண்காணிப்பதற்கு ஏதுவான இடமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் வடக்கிலிருக்கும் ஜப்பான், தெற்கில் இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் தென்கொரியா போன்ற தனது கூட்டணி நாடுகளுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அதே போல் அமெரிக்காவின் மற்றொரு கூட்டணி நாடான பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் தென்சீன கடல் பகுதிகளையொட்டி இரண்டு பெரிய முக்கியமான எல்லைப் பகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் தென்சீன கடலின் சில பகுதிகள் மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் என்று அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் (EDCA) படி அமெரிக்காவிற்கு ஏற்கனவே இங்கு ஐந்து இடங்களில் சில அனுமதிகள் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது கூடுதலாக அமையவிருக்கும் இந்த ராணுவத் தளங்களும், விரிவாக்கப்படவிருக்கும் அனுமதி சலுகைகளும் அமெரிக்கா இனி பிலிப்பைன்ஸில் செயல்படுவதற்கு கூடுதலான சுதந்திர நிலையை உருவாக்குகிறது.

மேலும் காலநிலை மாற்றத்தின்போது ஏற்படும் பேரிடர் சூழல்களிலும், மனிதாபிமான அடிப்படையிலும், மற்ற சவால்களைச் சமாளிப்பதற்கு துணையாகவும் பிலிப்பைன்ஸுக்கு உதவியாக அமெரிக்க ராணுவம் இருக்கும். இது சீனாவிற்கு எதிராக தனது கூட்டணிகளை அமெரிக்கா மறைமுகமாக வலுப்படுத்தி வரும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த வியாழனன்று பிலிப்பைன்ஸ் பிரதமர் ஃபெர்டினந்த் போங் போங் மார்கஸை அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் லாய்டு ஆஸ்டின் சந்தித்த பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிதாக அமைக்கப்படவிருக்கும் 4 ராணுவ தளங்கள் எங்கு அமைக்கப்படும் என்பது குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் அதில் மூன்று ராணுவ தளங்கள் பிலிப்பைன்ஸின் வடக்கு முனையில் அமைந்துள்ள லூசன் என்னும் தீவில் அமையலாம் என கூறப்படுகிறது. தைவானையொட்டி மிகப்பெரிய நிலப்பரப்பு பகுதியில் இந்த தீவு அமைந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா பிலிப்பைன்ஸுடன் மேற்கொண்டிருக்கும் இந்த அணுகுமுறை தற்செயலானது இல்லை என ’Centre for Strategic and International Studies in Washington’ மையத்தின் தென்கிழக்கு ஆசிய இயக்குனர் கிரிகோரி பி போலிங் கூறுகிறார்.
இது அமெரிக்காவின் ராணுவ தளங்கள் பற்றிய விஷயம் இல்லை, இது அந்த நிலப்பரப்பை பற்றியது என்று அவர் குறிப்பிடுகிறார்.

அதாவது அதிகளவில் தங்களுடைய துருப்புகளை அங்கே நிறுத்துவதை விட, தங்களுடைய ராணுவ தளங்களை செயல்படுத்துவதற்கும், தேவையானபோது அதனைக் கண்காணிப்பதற்கும் ஏதுவான வகையில் மிகவும் எளிதான இடங்களை அமெரிக்கா தேர்ந்தெடுக்கிறது.

1980களில் அமெரிக்காவின் 15,000 ராணுவ துருப்புகளும், இரண்டு மிகப்பெரும் ராணுவ தளங்களும் பிலிப்பைன்ஸில் இருந்தன. 1991ஆம் ஆண்டு அது முடிவிற்கு வந்தது. பிலிப்பைன்ஸின் குடிமக்கள் தங்களது பிரதமருக்கு எதிராக குரல் எழுப்பினர். பழைய காலனித்துவ எஜமானர்களை வீட்டிற்கு அனுப்பினர்.

30 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் அதேபோன்றதொரு நிலை பிலிப்பைன்ஸில் உருவாகியுள்ளது. ஆனால் இப்போது நடப்பது அப்படியான ஒரு நிகழ்வு மட்டும் அல்ல. அன்றைய காலகட்டத்தில் இருந்ததைவிட சீன ராணுவம் இப்போது அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. தென்சீன கடல் பகுதியின் புதிய வரைபடம் பெய்ஜிங்கில் வரையப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் 14 செயற்கை தீவுகளை சீனா அங்கே உருவாக்கியுள்ளது. அதில் ஒரு தீவு பிலிப்பைன்ஸுக்கு சொந்தமான பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் சீனாவின் இத்தகைய செயல்களையெல்லாம் கேள்வி கேட்பதற்கு பிலிப்பைன்ஸ் தற்போது தயாராக இல்லை. பிலிப்பைன்ஸின் தலைநகரமான மனிலா மிகவும் அச்சத்துடன் காணப்பட்டு வருகிறது என்பது இப்போதைய உண்மை நிலை.

’சீனாவின் இத்தகைய அணுகுமுறைக்கு முந்தைய காலகட்டம் வரை பிலிப்பைன்ஸ் தலைநகரான மனிலாவிற்கும், சீன தலைநகரான பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவு அவ்வளவு மோசமானதாக இல்லை. ஆனால் 2014ஆம் ஆண்டு தென்சீன கடல்பகுதியில் சீனா செயற்கை தீவுகளை உருவாக்கி நிலங்களை ஆக்கிரமிக்க துவங்கிய பின்னர்தான் இரு நாட்டிற்கும் இடையிலான உறவு சிக்கலாக மாறியது’ என்கிறார் பிலிப்பைன்ஸ் பல்கலைகழகத்தின் அரசியல் அறிவியல் பேராசியர் ஹெர்மன் கிராப்ட்.

தென்சீன கடல் பகுதியின் விவகாரத்தில் ‘வாழு, வாழவிடு’ – என்ற அணுகுமுறையைதான் நாங்கள் கடைபிடித்து வந்தோம். ஆனால் எப்போதுமே தாங்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை மீறும் பழக்கத்தையே சீனா தொடர்ந்து வருகிறது.

சீனாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்த்து சமாளிப்பதற்கான ஆற்றல் எங்களுக்கு இப்போது போதுமானளவு இல்லை. சீனாவை எதிர்ப்பதற்கு அமெரிக்காவால் மட்டுமே முடியும். பிலிப்பைன்ஸால் இதை தனியாக கையாள முடியாது என்கிறார் பிலிப்பைன்ஸின் முன்னாள் தூதர் ஜோஸ் குயிசியா.
ஆனால் மற்றொருபுறம் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் பிலிப்பைன்ஸுக்குள் வருவதை அந்நாட்டு குடிமக்கள் விரும்பவில்லை. ஏனென்றால் 1980களில் இதேபோல் அமெரிக்க ராணுவ துருப்புகள் பிலிப்பைன்ஸில் முகாமிட்டிருந்தபோது பிலிப்பைன்ஸ் பெண்களும், குழந்தைகளும் நிறைய துன்புறுத்தல்களை சந்தித்தனர். அங்கே நிறைய பாலியல் வல்லுறவுகள் நடந்தன என்கிறார் பிலிப்பைன்ஸின் இடது சாரி கட்சியில் செயலாளர் ரெனிடா ரெயிஸ்.

எங்கள் ஆண் – பெண் உறவுகளில் காணப்படும் சமத்துவமின்மைக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. இதற்கு முந்தைய காலகட்டத்தில் அமெரிக்க ராணுவ வீரர்கள் அவர்களின் நாட்டிற்கு திரும்பியபோது இங்கே 15,000 குழந்தைகள் அவர்களின் பிலிப்பைன்ஸ் தாய்மார்களுடன் தனியே விடப்பட்டனர். அதேபோல் இங்கே பல நச்சு கழிவுகளையும் அவர்கள் விட்டுச்சென்றனர்’ என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
எனவே இப்போது மீண்டும் அமெரிக்க ராணுவம் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குள் நுழைவதை இடது சாரி இயக்கங்கள் முற்றிலும் எதிர்த்து வருகின்றனர்.

1980 காலகட்டங்களில் அமெரிக்க ராணுவத்தினர் அதிகளவிலான எண்ணிக்கையில் பிலிப்பைன்ஸில் முகாமிட்டிருந்தனர். ஆனால் இப்போது அவ்வளவு பெரிய எண்ணிக்கையில் அவர்கள் நுழையவில்லை என்றாலும், பிலிப்பைன்ஸின் பல்வேறு புதிய பகுதிகளுக்குள் செல்ல அவர்கள் அனுமதி கோரி வருகின்றனர். சிலர் தென்சீன கடல் பகுதியை நோக்கி தெற்கு பகுதிக்கும், சிலர் தைவானை நோக்கிய வடக்கு பகுதிக்குள்ளும் செல்லவிருக்கின்றனர். சிறிய சிறிய குழுவாக பிலிப்பைன்ஸுக்குள் நுழையும் அமெரிக்க ராணுவத்தினர் சுழற்சி முறையில் இயங்கவிருக்கின்றனர்.
இது தவிர ககாயன், ஜாம்பலேஸ், பலவான் மற்றும் இசபெலா போன்ற பகுதிக்குள்ளும் அவர்கள் செல்லவிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவுடனான இந்த பிரச்சனையில் இருந்து வெளியேறுவதற்கு பிலிப்பைன்ஸுக்கு வழி இல்லை. இந்தியாவிலிருந்து பிரமோஸ் ஏவுகணைகளை ( BrahMos missiles) வாங்க பிலிப்பைன்ஸ் திட்டமிட்டிருக்கிறது. அதேபோல் டொமவ்க் குருஸ் (Tomahawk cruise missiles) ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது.

அதேபோல் தைவானுக்கும், பிலிப்பைன்ஸுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் போக்கின் காரணமாக, அமெரிக்க ராணுவத்தை நாட்டின் பின்புற வழியாக அணுக செய்து சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பிலிப்பைன்ஸ் திட்டமிட்டு வருகிறது. ஆனால் அதேசமயம் தைவானில் 150,000 முதல் 200,000 வரையிலான எண்ணிக்கையில் தன்னுடைய நாட்டு மக்கள் வசித்து வருகிறது என்பதை இந்த அரசாங்கம் மறந்துவிட்டது என்று குறிப்பிடுகிறார் கிரிகோரி பி போலிங்.

அதேசமயம் சீனாவுக்கு எதிரான அணுகுமுறையில் பிலிப்பைன்ஸ் அமெரிக்காவின் நிரந்தர கூட்டாளி இல்லை என்று சொல்கிறார் ஹெர்மன் கிராப்ட்.

ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை போல தென்சீன கடல் பகுதி விவகாரத்தில் பிலிப்பைன்ஸ் சீனாவுக்கு எதிராக நேரடியாக எந்த சவால்களையும் இதுவரை விடுக்கவில்லை. பிரதமர் மார்கஸுக்கு அமெரிக்காவுடனான நல்ல உறவையும் காப்பாற்ற வேண்டும், அதேசமயம் பொருளாதார சூழலை காப்பதற்காக சீனாவுடனும் நல்ல உறவை கடைபிடிக்க வேண்டும் என்கிறார் கிராப்ட்.

பிலிப்பைன்ஸ் தனது அண்டை நாடான அமெரிக்காவுடன் மேற்கொண்டிருக்கும் இந்த புதிய ஒப்பந்தத்தை சீர்குலைக்க விரும்பவில்லை என பெய்ஜிங்கும் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீன அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வரும் குலோபல் டைம்ஸ் பத்திரிக்கை அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் உறவு பற்றி சமீபத்தில் எழுதியிருந்தது. அதில், ‘அமெரிக்கா பிலிப்பைன்ஸுக்கு பொறி வைத்திருக்கிறது என்றும், சீனாவுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதற்கு பிலிப்பைனஸை கட்டாயபடுத்தி வருகிறது என்றும்’ அதில் குறிப்பிட்டிருந்தது.

சீனாவும் அமெரிக்காவை போன்ற முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுதான் என்று நம்பும் பேராசிரியர் ரெயிஸ், ‘நாங்கள் மீண்டும் ஒருமுறை இரண்டு நாடுகளுக்கும் நடுவில் சிக்கி தவிக்கிறோம்’ என்று கவலையுடன் கூறுகிறார்.
இன்னும் காலனிய மனப்பான்மையில் இருந்து வெளிவராத பிலிப்பைன்ஸ் அமெரிக்காவைத் தன்னுடைய பெரியண்ணனாக கருதி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.