;
Athirady Tamil News

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க ஜி20 மாநாட்டில் புதிய தீர்வுகள் கிடைக்கும்- இந்தியா நம்பிக்கை!!

0

இந்தியாவின் ஜி20 தலைமையின்கீழ், முதலாவது ஜி20 வேளாண் பிரதிநிதிகளின் மூன்று நாள் கூட்டம், இந்தூரில் இன்று தொடங்கியது. ஜி20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 90 பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். மத்திய வேளாண் துறை செயலாளர் மனோஜ் அஹுஜாவும் பங்கேற்றார். மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

கண்காட்சியில் சிறுதானியம் மற்றும் அதன் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்களுடன் கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை தொடர்பான அரங்குகள் இடம்பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் சவுகான் பேசியதாவது:- வேளாண் உற்பத்தியை அதிகரிப்பது, சாகுபடி செலவை குறைப்பது மற்றும் விவசாயிகளுக்கு நல்ல விலையை உறுதி செய்வது ஆகிய மூன்று முக்கியப் பகுதிகளில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். இந்த இலக்கை நோக்கி இந்தியா ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.

அதிகரித்து வரும் மக்கள்தொகை காரணமாக உணவுப் பாதுகாப்பு என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. 2000ஆம் ஆண்டில் 192 மில்லியன் டன்னாக இருந்த உலக உணவு தானிய தேவை, 2030ஆம் ஆண்டில் 345 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகில் உள்ள விளை நிலங்களில் 12 சதவீதம் மட்டுமே விவசாயத்திற்கு ஏற்றவையாக உள்ளன. நிலமோ, இயற்கை வளமோ தற்போது உள்ளதைவிட அதிகரிக்கப் போவதில்லை.

எனவே, எதிர்கால உணவுத் தேவையை பூர்த்தி செய்ய நிலம் மற்றும் இயற்கை வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். உள்ளூர் அமைப்புகள் மூலம் புதிய தொழில்நுட்பங்களை இணைப்பதன் மூலம் விவசாயத் துறையை மேம்படுத்த ஜி-20 உச்சிமாநாடு உதவும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.