;
Athirady Tamil News

மக்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் தேசம் வளரும்- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு!!

0

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் வளாகத்தில் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்-யுவ சங்கமம்’ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப மைய மாணவர்கள் நேற்று பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அகர்தலா தேசிய தொழில்நுட்ப மைய டீன் நீலேஜ் ஜே வாசா, பேராசிரியர்கள் அர்ஷிந்தர் கவுர், ரத்னகுமார் அன்னபத்துல்லா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மாணவர்கள் முன்னிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:- 2047-ம் ஆண்டுக்குள் உலக நாடுகளில் இந்தியா உன்னத நிலையை எட்டவும், இந்தியாவின் மீள் எழுச்சிக்காகவும் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உறுதியான கோட்பாடு மிகவும் தேவையான ஒன்றாகும். நமது பண்டிகைகள், நடனங்கள், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் கதைகள் அனைத்துமே நாட்டின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில்தான் இருக்கின்றன.

மக்கள் பூமி தாய்க்கு மரியாதை தருகிறார்கள். உலகளாவிய ஒருமைப்பாட்டில் நமது சனாதன அத்தியாயம் முக்கியமானது. நம்மிடையே பல வேற்றுமைகள் இருந்தாலும் நாம் ஒற்றுமையாகவே இருக்கிறோம். அந்த ஒற்றுமையாலேயே கட்டமைக்கப்பட்டு இருக்கிறோம். ஒன்றுபட்டு கிடந்த நமது ராஜ்ஜியங்கள், ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்டது. கலாசார-நாகரிக துண்டிப்பும் இதற்கு சாத்தியக்கூறாக அமைந்தது. ஆனால் இன்றைய நிலை வேறு.

இன்றைய மாறுபாடுகள் தெளிவாக காட்டப்பட்டு விடுகின்றன. இதனால் சமூகம் தொடர்ச்சியாக வாழ வழி அமைந்து விடுகிறது. துரதிர்ஷ்டவசமாக, அரசியல் வரையறைகள் மோசமாக பாதித்ததின் விளைவாக கலாசாரத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது மாநிலங்கள் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டன, ஆனாலும் பாரதம் என்ற ஆன்மா அனைத்து மாநிலங்களையும் ஒருமுகப்படுத்தி உள்ளன. நமது பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களையும், தாய் மண்ணையும் இரு கண்களாகவே பார்க்கிறார்.

நம் நாட்டை பற்றி உலக நாடுகளின் பார்வை மாறிவிட்டது. அடிப்படை வசதிகளான கல்வி, சுகாதார வசதி, உள்கட்டமைப்பு, குடிநீர், கியாஸ் சிலிண்டர், கழிப்பறை வசதிகள் என அனைத்தும் மக்களுக்கு வீடு தேடி சென்று வழங்கப்படுகிறது. இது புரட்சிகரமான மாற்றங்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது. மக்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் நமது தேசம் வளரும். இந்த தேசத்தை தகுதியான இடத்திற்கு கொண்டு செல்லும் கடமை மக்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.