;
Athirady Tamil News

ஊழியர்களுக்கு நள்ளிரவு 2.30 மணிக்கு இமெயில் அனுப்பிய எலான் மஸ்க் – ஏன் தெரியுமா? !!

0

டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருக்கிறார். கடந்த புதன் கிழமை அனுப்பிய மின்னஞ்சல் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன் படி, எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது குறித்து டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது. அதிகாலை 2.30 மணிக்கு எலான் மஸ்க் அனுப்பிய மின்னஞ்சலில், “Office is not optional” அதாவது அலுவலகம் விருப்பம் இல்லை என தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. டுவிட்டர் நிறுவனத்தின் சான்ஃபிரான்சிஸ்கோ அலுவலகம் நேற்று ஊழியர்கள் இன்றி காலியாக இருந்தது என்று எலான் மஸ்க் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து அதில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தார். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய கார்ப்பரேட் திட்டங்கள் பற்றிய அறிவிப்பை இரவு நேரத்திலோ அல்லது அதிகாலை சமயங்களிலோ வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் நள்ளிரவு 2.30 மணிக்கு ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் அவர்களுக்கு பழகிப் போன ஒன்றுதான். எலான் மஸ்க் கைப்பற்றுவதற்கு முன் டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றுவதற்கான அனுமதி பரவலாக வழங்கப்பட்டு இருந்தது.

நிறுவனத்தை கைப்பற்றிய எலான் மஸ்க் ஊழியர்கள் குறைந்தபட்சம் வாரத்திற்கு 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதை எலான் மஸ்க் ஆரம்பத்தில் இருந்தே ஊக்குவித்தது இல்லை. கடந்த ஆண்டு டெஸ்லா நிறுவன தலைவரான எலான் மஸ்க், “டெஸ்லா ஊழியர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 40 மணி நேரம் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு செய்யாதவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கருதப்படுவர்,” என்று தெரிவித்து இருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.