;
Athirady Tamil News

கேரளாவில் கோவில் விழாவில் பட்டாசு வெடித்த போது மிரண்டு ஓடிய யானை மிதித்து பக்தர் பலி!!

0

கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த கல்லேலக்காட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி சாமி ஊர்வலமும் நடந்தது. இதில் சாமி சிலையை சுமந்து செல்ல புத்தூர் கணேசன் என்ற யானை வரவழைக்கப்பட்டிருந்தது. அந்த யானையை பாகன் கோவில் வளாகத்தில் நிறுத்தி இருந்தார். நேற்று இரவு சாமி ஊர்வலம் முடிந்து யானை ஓய்வெடுத்து கொண்டிருந்தது. அப்போது கோவிலில் இரவு 10 மணிக்கு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதனை காண கோவில் வளாகத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். பட்டாசுகள் வெடிக்க தொடங்கியதும் அதன் சத்தத்தை கேட்ட யானைக்கு மதம் பிடித்தது. உடனே யானை கோவில் வளாகத்தில் இருந்து மிரண்டு ஓடியது.

யானை மிரண்டு ஓடியதை கண்டதும் கோவிலில் இருந்த பக்தர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். அவர்களை யானை தூக்கி வீசியது. இதில் பாலக்காட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 63) என்ற பக்தர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுபோல 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் யானை மிரண்டு ஓடிய போது சாலையில் நின்ற வாகனங்களையும் தும்பிக்கையால் தூக்கி வீசி துவம்சம் செய்தது. இதில் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது. இதற்கிடையே தகவல் அறிந்து கால்நடை துறை டாக்டர்களும், வனத்துறையினரும் அங்கு வந்தனர். இதுபோல யானையின் பாகனும் அதனை அடக்க முயன்றார். அனைவரும் சேர்ந்து யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அதனை வாகனத்தில் ஏற்றி கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில் விழாவில் யானை மிரண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.