;
Athirady Tamil News

திருமலையில் பத்மாவதி பரிணயோற்சவம் 2-வது நாள்: மலையப்பசாமி குதிரை வாகனத்தில் உலா!!

0

திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் பத்மாவதி பரிணயோற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று மாலை 5 மணியளவில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மலையப்பசாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் சிறப்பு அலங்காரத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்தனர். மேளதாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க நாராயணகிரி தோட்டத்தை அடைந்த உற்சவர்களுக்கு முதல் நாள் போலவே மாலைகள் மாற்றுதல், பூப்பந்தல் ஆடுதல், புது வஸ்திரம் அணிதல், ஊஞ்சல் சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

நிகழ்ச்சியில் சதுர்வேத பாராயணம், சவுராஷ்ட்ர ராகம், தேசிகா, மலஹரி, யமுனா கல்யாணி, ஆனந்த பைரவி நீலாம்பரி ராகங்கள், சாமி-தாயார் திருக்கல்யாணம் ஆகிய வைபவங்கள் கோலாகலமாக நடந்தன. மேலும் அன்னமாச்சாரியாரின் பக்தி கீர்த்தனைகள் பாடப்பட்டது. புகழ்பெற்ற ஹரிகத பாகவதர் வெங்கடேஸ்வரலு பத்மாவதி-சீனிவாசர் பரிணயம் குறித்த ஹரிகதா பாராயணம் செய்தார். 2-வது நாள் நிகழ்ச்சியையொட்டி நேற்று கோவிலில் ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.