;
Athirady Tamil News

கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை வீசுகிறது: பசவராஜ் பொம்மை பேச்சு!!

0

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். ஹாவேரி மாவட்டம் ஹானகல் தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. இரட்டை என்ஜின் அரசு கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. பிரதமர் அவாஸ் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகின்றன.

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் ஆண்டுக்கு 13 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர்கள் சமூக நீதி குறித்து பேசியே மக்களை கிணற்றில் தள்ளியுள்ளனர். ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம். ஆனால் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்துவதாக கூறியுள்ளது. நாங்கள் கடந்த 3 ஆண்டுகளில் 40 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளோம். இந்தியா தற்போது பாதுகாப்பான நாடாக திகழ்கிறது. சித்தராமையா ஆட்சியில் அதிகளவில் மதக்கலவரங்கள் நடைபெற்றன. கற்பழிப்புகள், விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடைபெற்றன.

நமது பிரதமர் நாட்டை பாதுகாப்பாக வைத்துள்ளார். அமெரிக்காவில் இப்போதும் கொரானா பயத்தால் முககவசம் அணிகிறார்கள். பிரதமர் மோடி இங்கு கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்தி அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகமாக நடைபெற்றது. காங்கிரசார் தற்போது உத்தரவாத அட்டையை வழங்குகிறார்கள். முதலில் காங்கிரசுக்கு உத்தரவாதம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.