;
Athirady Tamil News

இலங்கையில் நிலையான அமைதி மலர ஒன்றிணைந்து செயற்படுவோம்!

0

“அமைதியைவிட உயர்வான சந்தோசம் இந்த பூமியில் வேறொன்றும் இல்லை” என புத்தபெருமான் போதித்துள்ளார். எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை சீர்செய்து, நாட்டை மீட்கவும், இனப்பிரச்சினைக்கு நீடித்து நிலைக்ககூடிய தீர்வைக்கண்டு இலங்கை மண்ணில் நிலையான அமைதி மலரவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வெசாக் தின வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போதிமாதவன் புத்தபெருமானின் பிறப்பு, இறப்பு, பரிநிர்வாணம் அடைந்தமை ஆகிய முக்கிய நிகழ்வுகளை நினைவு கூருவதற்கே விசாக நோன்மதி – வெசாக் நோன்மதி தினத்தை உலகவாழ் பௌத்தர்கள் வெகுசிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையிலும் பக்திபூர்வமான முறையில் பல நிகழ்வுகள் நடைபெறும். கொரோனா பெருந்தொற்று, அரசியல் நெருக்கடி மற்றும் வரிசை யுகம் இல்லாது செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் இம்முறை வெசாக் தின நிகழ்வுகள் பிரமாண்டமாக இடம்பெறவுள்ளன.

வெசாக் காலப்பகுதியில் ஊர், கிராமங்கள் , நகரங்களில் வாழும் மக்கள் ஒன்றிணைவார்கள். ஒற்றுமையுடன் அலங்கார தோரணங்களை அமைப்பார்கள். உதவிகளை திரட்டி தானம் வழங்குவார்கள். ஒற்றுமை, ஐக்கியம் என்பவற்றின் பலத்தை இதன்மூலம் நாம் காண முடியும். ஆகவே, நம் நாட்டை மீட்கவும் இவ்வாறு அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கை. அடுத்த வெசாக்கை இதைவிடவும் சிறப்பான சூழ்நிலையில் கொண்டாடுவதற்கு வேண்டுமெனில் அரசியல், கட்சி வேறுபாடுகளை துறந்து நாம் அனைவரும் இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டும். இதய சுத்தியுடன் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண முன்வர வேண்டும்.

அன்பு, இரக்கம், கருணை, அமைதி போன்ற வாழ்வில் சிறந்த விடயங்களையே புத்தபெருமான் எமக்கு போதித்துள்ளார். அவர் வழியில் நடந்தால் இந்நாட்டில் ஒருபோதும் இனவாதம், மதவாம் ஏற்படாது. ஆகவே, வெசாக் தினத்தை கொண்டாடும் அதேவேளை, புத்த பெருமானின் போதனைகளை பின்பற்றி வாழவும் கற்றுக்கொள்வோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.