;
Athirady Tamil News

அமெரிக்காவில் தொடரும் சம்பவம்: வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு-குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!!

0

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரத்தின் புறநகரமான ஆலனில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏராளமானோர் கூடி இருந்தனர். அப்போது வணிக வளாகத்துக்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர் புகுந்தார். அங்கு திரண்டிருந்த பொதுமக்களை நோக்கி சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறியடித்தப்படி சிதறி ஓடினார்கள். பலர் அங்குள்ள கடைகளுக்குள் புகுந்து பதுங்கி கொண்டனர். மேலும் வணிக வளாகத்தில் இருந்து வெளியே ஓடி வந்தனர். துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வணிக வளாகத்தை சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த கட்டிடத்துக்குள் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். மர்ம நபரின் துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் உள்பட 9 பேர் பலியானார்கள். 7 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வணிக வளாகத்துக்குள் சிக்கியிருந்த பொது மக்களை மீட்டு ஒவ்வொருவராக வெளியே அழைத்து வந்தனர். வணிக வளாகத்துக்குள் வேறு யாராவது துப்பாக்கியுடன் உள்ளனர்களா? என்று தீவிரமாக சோதனை நடத்தினர். அதன்பின் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்தனர். இதற்கிடையே மர்ம நபர் வாகனத்தில் இருந்து துப்பாக்கியுடன் இறங்கி வணிக வளாகத்துக்குள் செல்லும் வீடியோ காட்சி பரவி வருகிறது. துப்பாக்கி சூடு நடத்திய நபர்? எதற்காக தாக்குதல் நடத்தினார்? போன்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. அதேபோல் பலியானவர்களின் விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை.

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்தபடி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு தொடக்க பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 21 பேர் பலியான சம்பவம் அந்நாட்டை உலுக்கியது. இதையடுத்து துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெக்சாஸ் மாகாணத்தில் எந்த பயிற்சியும், உரிமமும் இன்றி யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக் கொள்ள சட்டம் அனுமதி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.