;
Athirady Tamil News

ஆசிரியர் பணியில் சேர சிடெட் தகுதி தேர்வு சேலத்தில் ஜூலை மாதம் நடக்கிறது!!

0

மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிடெட் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு சிடெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்திய அரசு உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- சிடெட் தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆன்லைன் மூலமாக மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. நடப்பாண்டுக்கான தேர்வு வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு ஆகிய மாதங்களுக்கு இடைப்பட்ட நாட்களில் நடைபெற உள்ளது.

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் பிளஸ்-2 தேர்ச்சியுடன் 2 வருட டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்திருக்க வேண்டும். இவர்கள் 1 முதல் 5-ம் வரையிலான ஆசிரியர் பணிக்கு சிடெட் தாள்- 1 எழுத தகுதியுடையவர்கள் ஆவர். 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரிய ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்து பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் சிடெட் தாள்-2 எழுத தகுதியுடைவர்கள் ஆவர்.

ஆசிரியர் பணிக்கான பி.எட்., டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பு ஆகிய தகுதியை என்.சி.டி.இ -ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேவையான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். 2 தாள் தேர்வையும் எழுத விரும்பினால் ரூ.1200 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2023 ஆகும். தமிழ்நாட்டில் இந்த தேர்வு சேலம், நாகர்கோவில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.