;
Athirady Tamil News

பிரான்ஸ் பூங்காவில் குழந்தைகளை கத்தியால் குத்திய சிரியா நாட்டு அகதி கைது!!

0

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கே ஆல்ப்ஸ் பிராந்தியத்தில் அன்னெசி நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு பூங்காவிற்கு குழந்தைகள் சுற்றுலா அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக சிலர் உடன் வந்திருந்தனர். பூங்காவில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவன் கையில் கத்தியுடன் பூங்காவிற்குள் நுழைந்தான். திடீரென அவன் அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை சரமாரியாக கத்தியால் குத்த தொடங்கினான்.

இதில் கத்திக்குத்து விழுந்த குழந்தைகள் வலி பொறுக்க முடியாமல் அலறி துடித்தனர். இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 22 மாத குழந்தை, 5 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்கள், 2 பெரியவர்கள் அடங்குவார்கள். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து மர்மநபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். கத்திக்குத்தில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் காயமடைந்த சிறுவர்களில் 2 பேர் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

போலீசில் சிக்கியவர் சிரியா நாட்டை சேர்ந்த அகதியாவார். அவர் சட்ட விரோதமாக பிரான்ஸ் நாட்டில் நுழைந்தது தெரியவந்தது. அவர் எதற்காக குழந்தைகளை மட்டும் குறி வைத்து இந்த தாக்குதலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவாரா? அல்லது சைக்கோவா? என்பது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிடிபட்ட வாலிபர் குழந்தைகளை கத்தியால் குத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அந்த நபர் பூங்காவில் சர்வ சாதாரணமாக வலம் வருகிறார்.

திடீரென தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை கையில் எடுத்து கண்ணில் பட்ட குழந்தைகளை குத்துகிறார். அந்த சமயம் ஒரு பெண் இதனை தடுக்க முயல்கிறார். உடனே அந்த பெண்ணை நோக்கி அவன் செல்கிறான். கத்தியால் குத்த முயன்ற போது அந்த பெண் வாலிபருடன் போராடுகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தான் தற்போது வைரலாகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.