;
Athirady Tamil News

உடலுறவு கொள்ளும்போது யாருக்கு திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது? ஏன்? (மருத்துவம்)

0

உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு பெண்களைவிட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால், உடலுறவினால் அரிதாகவே மாரடைப்பு ஏற்படுகிறது.

துல்லியமாக 4557 மாரடைப்புகளை ஆராய்ந்ததில், 34 மட்டுமே உடலுறவின் போதும், உடலுறவுக்குப் பிந்தைய ஒரு மணி நேரத்திலும் ஏற்பட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் ஆண்கள்.

மாரடைப்புக்கும் உடலுறவுக்கும் சம்பந்தம் உள்ளது. உடலுறவு மாரடைப்பிற்கு முக்கிய காரணி என்று சொல்லும் முதல் ஆய்வு இதுதான் என்கிறார் சிடார்ஸ் சினாய் இதய கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த சுமீத் சக்.

இந்த ஆய்வறிக்கை, அமெரிக்க இதய கழகம் ஒருங்கிணைத்த சந்திப்பில் சமர்பிக்கப்பட்டது.

இதயம் முறையாகச் செயல்படாதபோது மாரடைப்பு ஏற்படுகிறது. இதயம் துடிப்பது உடனே நிற்கிறது. இதனால் சுயநினைவை இழக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், அவர்களின் சுவாச இயக்கமும் நிற்கிறது. ‘கார்டியோபல்மனரி ரிஸாசிடேஷன் சிகிச்சை’ அளிக்காதபோது, அவர்கள் இறக்கவும் நேரிடுகிறது.

இதய இயக்க கோளாறிலிருந்து (Heart attack) இது முற்றிலுமாக வேறுபடுகிறது. ஹார்ட் அட்டாக், இதயத்திற்குச் செல்லும் ரத்தம் நிற்பதால் ஏற்படுகிறது.

உடலுறவால் ஹார்ட் அட்டாக் ஏற்படுவது முன்பே அறிந்த ஒன்று. ஆனால், மாரடைப்புக்கும் உடலுறவுக்கும் உள்ள தொடர்பு முன்பு அறியாத ஒன்று.

மருத்துவர் சுமீத்தும்கலிஃபோர்னியாவில் உள்ள அவருடைய சகாக்களும், 2002 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் மாரடைப்புக்கு உள்ளான போர்ட்லாண்ட் மற்றும் ஒரிகன் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் மருத்துவப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில், உடலுறவினால் ஏற்படும் மாரடைப்புகள் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதாக இருந்துள்ளது. அப்படி மாரடைப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். அதுவும் குறிப்பாக நடுத்தர வயதைச் சேர்ந்தவர்கள் மற்றும் முன்பே இதய நோய் உள்ளவர்கள்.

சுமீத், “இந்தக் கண்டுப்பிடிப்புகள், கார்டியோபல்மனரி ரிஸாசிடேஷன் சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு உணர்த்தப் பயன்படும்,” என்கிறார்.

ஹார்ட் அட்டாக் அல்லது இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், குறைந்தது ஆறு வாரங்களுக்கு உடலுறவில் ஈடுப்படக் கூடாது என்று பிரிட்டிஷ் இதய அறக்கட்டளை வலியுறுத்துகிறது.

அதேவேளையில், ஆரோக்கியமான உடல்நிலையில் மேற்கொள்ளும் உடலுறவு மாரடைப்பு போன்ற அபாயங்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க வழிவகுப்பதாக பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியின்போது மகப்பேறு மற்றும் பாலியல் மருத்துவர் ஜெயராணி காமராஜ் தெரிவித்துள்ளார்.
உடலுறவு மன அழுத்தத்தைக் குறைக்கிறது

அவர், “பரவலாக இருக்கும் மன அழுத்தத்தை உடலுறவு குறைக்கிறது, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அதிகமாக உடலுறவு கொள்ளும் தம்பதிகள் மத்தியில் மன அழுத்தம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன,” என்று கூறுகிறார்.

“எடுத்துக்காட்டாக அலுவலகத்தில் ஏதேனும் உரை நிகழ்த்த வேண்டிய நாளில் மன அழுத்தம் அதிகமாக இருக்கும். அந்த நாள் காலையில் உடலுறவு கொண்டவர்களுக்குப் பதற்றம் குறைந்து, நல்ல முறையில் அவர்களால் உரை நிகழ்த்த முடிந்தது” என்பதை அமெரிக்க உளவியல் சங்கம் (American Psychological Association) ஓர் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளதாக மருத்துவர் ஜெயராணி கூறுகிறார்.

நாள்தோறும் தாம்பத்ய உறவுகொள்ளும் தம்பதிகளிடையே மனக்கசப்பு, சண்டைகள் குறைந்திருக்கின்றன. நெருக்கம் அதிகரித்திருக்கிறது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

நிறைவாக உடலுறவு கொள்ளும் தம்பதிகளின் வாழ்நாள் அதிகரிப்பதாகவும் சுமார் 8 ஆண்டுகள் வரை அவர்களது ஆயுட்காலம் அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது என்கிறார் மருத்துவர் ஜெயராணி காமராஜ்.

“இதற்கு முதல் காரணம் இதயம். உடலுறவால் இதயப் பிரச்னைகள் குறைகின்றன. சிறப்பான தாம்பத்ய உறவைக் கொண்டிருக்கும் தம்பதிகளுக்கு ரத்த அழுத்தம் சீராகிறது. சில ஹார்மோன்கள் சுரக்கும்போது இதயத் துடிப்பு அதிகமாவதால், இதயத்தின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக,” அவர் கூறுகிறார்.

இதன்மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவதாக அவர் விளக்குகிறார்.

உடலுறவின்போது சுரக்கும் ஹார்மோன்களால் ரத்த ஓட்டம் அதிகரித்து செல்களைப் புத்துணர்வடையச் செய்கிறது. இதனால் உடலில் வயதான மாற்றங்கள் ஏற்படுவது தள்ளிப்போகின்றன, இளமை நீடித்திருக்கிறது எனத் தெரிவித்தார் மருத்துவர் ஜெயராணி.

“உடலுறவை ஓர் உடற்பயிற்சியாகவும் பார்க்கலாம். சுமார் 20 நிமிடம் வரை உறவுகொள்ளும்போது சுமார் 300 கலோரி வரை நமது சக்தி எரிக்கப்படுகிறது. இதுவும் உடலுக்கு நன்மையைத் தருகிறது.”

அதோடு, “பெரும்பாலான பெண்கள் தூக்கமின்மை பிரச்னைக்காக சிகிச்சைக்கு வரும்போது அவர்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வியே அவர்களுடைய பாலியல் உறவு எப்படி இருக்கிறது என்பது பற்றியதாகத்தான் இருக்கும். பாலுறவில் குறைபாடு இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் முதல் பிரச்னையே தூக்கமின்மைதான்.”

உடலுறவில் ஈடுபடும்போது சுரக்கும் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் மனதைத் தளர்வாக்கி நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது. இந்த வகையில், “இயற்கையாக வரும் தூக்கத்தைக் காட்டிலும், உடலுறவுக்குப் பிறகு வரும் தூக்கமானது கூடுதல் உடல் ஆரோக்கியத்துக்கு காரணமாகிறது.

அதனால் உடலுறவு பிரச்னையை சரிசெய்யும்போது தூக்கமின்மை தானாகவே சரியாகிவிடுகிறது. வாழ்க்கைத் தரமும் அதிகரிக்கிறது,” என்று விளக்குகிறார் மகப்பேறு மற்றும் பாலியல் மருத்துவர் ஜெயராணி காமராஜ்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.