8 ஆம் திகதி முதல் கொட்டப்போகும் மழை; மக்களே அவதானம்!
எதிர்கால வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பு இன்று (05) மாலை 3.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டிற்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல் நிலை மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட முன்னெச்சரிக்கை
இதன் காரணமாக, ஜனவரி 8 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் நாட்டின் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் தற்போது காணப்படும் தாழ்வு நிலை வலுப்பெறுகின்றது. இன்றைய நிலையில் இது இலங்கையின் கிழக்கு கரையூடாக வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு மாகாணத்தை மிக அண்மித்து தமிழ்நாட்டை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.
இந்த தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய, தென் மாகாணங்கள் கன மழையைப் பெறும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். இந்த தாழமுக்கத்தினால் இன்று முதல் எதிர்வரும் 11.01.2026 வரை கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளும் பரவலாக கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
அத்தோடு இத்தாழமுக்கம் கிழக்கு பகுதியை அண்மித்தே (நிலப்பகுதியோடு இணைந்ததாக) வடக்கு நோக்கி நகரும் என்பதனால் வேகமான காற்றோடு இணைந்த கனமழையும் இடி மின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும்.
இந்த தாழமுக்கம் கிழக்கு கரையூடாக வடக்கு நோக்கி நகர்ந்து வடக்கு கரையூடாக தமிழ்நாட்டை அடையும் என்பதனால், இன்று முதல் வடக்கு மாகாணம் மிதமான மழையைப் பெறும். ஆனால் எதிர்வரும் 07.01.2026 முதல் வடக்கு மாகாணம் பரவலாக மிகக் கனமழையைப் பெறும்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அதிகனமழையும் வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட முன்னெச்சரிக்கையுடன் செயற்படவேண்டும்.
உருவாகியுள்ள தாழமுக்கத்தினால் எதிர்வரும் 07.01.2026 முதல் யாழ்ப்பாண மாவட்டமும் கிளிநொச்சி மாவட்டமும் அதிகனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக ஊவா மாகாணம் இன்று முதல் கனமானது முதல் மிகக்கனமானது வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அத்துடன் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
இந்த தாழமுக்கத்தின் காரணமாக மழை தொடர்ச்சியாக கிடைக்கும் என்பதனாலும், சில நாட்களில் மிகக்கனமழை பெய்யும் என்பதனாலும் யாழ்ப்பாணம் (மாவட்டத்தின் பல பகுதிகள்), கிளிநொச்சி (மாவட்டத்தின் பல பகுதிகள்), முல்லைத்தீவு (மாவட்டத்தின் பல பகுதிகள்), வவுனியா (மாவட்டத்தின் பல பகுதிகள்), மன்னார் (மாவட்டத்தின் சில பகுதிகள்) திருகோணமலை (மாவட்டத்தின் பல பகுதிகள்), மட்டக்களப்பு (மாவட்டத்தின் பல பகுதிகள்), அம்பாறை (மாவட்டத்தின் பல பகுதிகள்), பதுளை (மாவட்டத்தின் பல பகுதிகள்), மொனராகலை (மாவட்டத்தின் பல பகுதிகள்), அனுராதபுரம் (மாவட்டத்தின் பல பகுதிகள்), பொலன்னறுவை (மாவட்டத்தின் பல பகுதிகள்), புத்தளம் (மாவட்டத்தின் சில பகுதிகள்), குருநாகல் (மாவட்டத்தின் பல பகுதிகள்) அம்பாந்தோட்டை (மாவட்டத்தின் சில பகுதிகள்) வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உள்ளன.
வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் குளங்களின் நீரை தற்போதே சற்று குறைந்த மட்டத்தில் பேணுவது சிறந்தது. இந்நாட்களில் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் அதனோடு இணைந்த நிலச்சரிவு அனர்த்தங்களும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
நாளை முதல் (06.01.2026) இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தயவு செய்து இந்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகளினால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள மக்களைத் தாயார்ப்படுத்தும் திணைக்களங்களின் அதிகாரிகள் இது தொடர்பாக மக்களை விழிப்பூட்டுவது அவசியம்.
தயவு செய்து மேற்குறிப்பிட்ட மாகாணங்களிலுள்ள மக்கள் இந்த தாழமுக்கம், கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் கடற்கொந்தளிப்பு தொடர்பில் அவதானமாக இருப்பது மிக மிக அவசியம் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் தெரிவித்தார்.