உணவு கையாளும் நிலையங்கள் பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை உடனே தவிருங்கள்
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை உடனே உணவுகையாளும் நிலையங்கள் தவிர்க்க வேண்டுமென மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் அறிவுறுத்தியுள்ளார்.
பூநகரிப் பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற உணவு கையாளும் நிறுவன உரிமையாளர்களுடனான சந்திப்பில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
லஞ்சீற்றை தட்டிலிட்டு சூடான உணவுப்பொருட்களைப் பரிமாறுதல், பொதி செய்தல், குழம்பு, சொதி கட்டுதல் போன்ற நடவடிக்கைகளால் உணவுப்பொருட்களில் மைக்கிறோ, நனோ பிளாஸ்டிக் கூறுகள் உருவாகி இரசாயனங்கள் உணவுடன் கலப்பதால் புற்றுநோய் ஏற்படுவதுடன் ஓமோன் சமநிலையும் பாதித்து மலட்டுத்தன்மையையும் ஏற்பட காரணமாகின்றது.
மேலும் இப்பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்கும்போது அவை சுவாசத்துடன் கலந்து புற்றுநோய் மற்றும் ஆஸ்துமாவை தூண்டுகின்றன.
பொலித்தீன் ,பிளாஸ்டிக் பொருட்களை தரை ,கடல் வாழ் உயிரினங்கள் உண்பதால் உணவுச்சங்கிலியூடாக அவை மனிதரை அடைந்து பாதிப்புக்களை ஏற்படுத்தல் போன்ற அபாயங்களும் காணப்படுகின்றன.
தொடர்ச்சியான பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையால் நனோ பிளாஸ்டிக் கூறுகள் தாய்ப்பால் மற்றும் விந்துகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளின் நோய் எதிர்ப்புதிறன் பாதிக்கப்படல், விந்துகளின் வீரியம் குறைதல் போன்ற பாரதூரமான உயிரியல் கேடுகளும் ஏற்படுகின்றன.
எனவே உடனடியாகவே எமதும், எமது எதிர்கால சந்ததியினதும் நல்வாழ்வை முன்னிட்டு உணவகங்களில் பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை முற்றாக தவிருங்கள்.
அதற்குப்பதிலாக வாழையிலைகள், வாழைத்தடல்களைப் பயன்படுத்துதல்,கண்ணாடி மற்றும் மாபிள் தட்டுக்களை சுடுநீரில் கழுவிப் பயன்படுத்துதல், உணவுத்தர மெழுகு பூசப்பட்ட கடதாசி மற்றும் காட்போட் பெட்டிகளை உணவு பொதி செய்யப் பயன்படுத்துதல், சூடான பானங்களைப் பருக உலோக, மாபிள் கோப்பைகளை மட்டுமே பயன்படுத்துதல் போன்றவற்றுக்கு மாறுமாறும் கோரினார்.