;
Athirady Tamil News

அரசியல் கூட்டு என்பதால் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும்

0

முருகானந்தம் தவம்

இலங்கையின் அரசியலில் தமிழ்த் தேசிய கட்சிகளின் தாய்க் கட்சி என்று கூறிக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் 5 பங்காளிக் கட்சிகளின் கூட்டாக அடிக்கடி கட்சி மாறிக் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் மீள் இணைவு இடம்பெற்றுள்ள நிலையில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரையும் இக்கூட்டு சந்தித்தது.

பதில் தலைவராக .சி.வி.கே.சிவஞானத்தையும் பதில் பொது செயலாளராக எம்.ஏ.சுமந்திரனையும் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டு அமைத்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் (புளொட்) தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா, சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் பங்காளிக் கட்சித் தலைவர்களாகவுள்ளனர்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய அமைப்பாக இயங்கி வருகிறது. தனியான யாப்பையும் சின்னத்தையும் கொண்டிருக்கும் அந்தக் கூட்டணி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏற்கெனவே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில், அந்தக் கூட்டணி செயற்பட்டு வருகிறது. ஆனால், அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மாகாண சபைகள் முறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கொண்டிருக்கும் நிலைப்பாடு காரணமாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் முரண்பட வேண்டியேற்பட்டது.
நடைபெற்று முடிந்த மூன்று தேர்தல்களான ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் வடக்கு , கிழக்கிலிருந்த தமிழ் கட்சிகள் பெரும்பாலும் தனித்தனியாகவே செயற்பட்டிருந்தன. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரைக் களமிறக்கியபோது, அதற்கு எதிராக தமிழரசுக் கட்சி பகிரங்கமாகவே செயற்பட்டபோது, தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து முன்னிலையில் நின்று செயற்பட்டது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி. இவர்கள் பாராளுமன்றத் தேர்தலிலும் அதே கூட்டைப் பயன்படுத்தி பின்னர், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலிலும் அதையே தொடர்ந்தனர்.

பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தனித்துக் களமிறங்கியபோதும், ஒரு பாராளுமன்ற ஆசனத்தை மட்டுமே பெற முடிந்தது .உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களின் பின்னர் ஆட்சியமைக்கும் விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பக்கம் நிற்காது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பக்கம் இது சாய்ந்திருந்தது. இருந்தபோதும், சபைகளின் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான அரசியல் கூட்டாக மாத்திரம் அது அமைந்தது. அதற்கும் அப்பால் சென்று அரசியல் கூட்டணியாகத் தொடரவில்லை.

இவ்வாறாக கொள்கை, இலக்கு எதுவுமின்றி, “தறி கெட்ட மாடு போல்” சகல கட்சிகளுடனும் ‘கூட்டு’ என ஒட்டிக்கொண்டு திரிந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைத்தான் தற்போது இலங்கை தமிழரசுக் கட்சி தன்னுடன் இணைத்துக் கொண்டு ஏதோ பெரிதாகச் சாதித்து விட்டது போல் கதை விட்டுக் கொண்டிருக்கின்றது. அத்துடன், கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோருடனான சந்திப்பிலும் இக்கூட்டுப் பங்கு பற்றியது.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் நடைபெற்ற மீள் இணைவுக்கான சந்திப்பில் முக்கியமாக இரண்டு பிரதான விடயங்கள் பற்றியே அதிகம் பேசப்பட்டுள்ளது. முதலாவது, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமல் பிற்போடப்படும் சூழ்நிலையில், அத்தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதாகும். இரண்டாவது தமிழ் மக்களுக்கான நீதியான – நியாயமான அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒருமித்த நிலைப்பாட்டை வெளிக்கொணர்ந்து தொடர்ச்சியான சந்திப்புக்களை நடத்துவது என்பதாகவே இருந்தது .

இரண்டு விடயங்களுடனேயே தமது சந்திப்பு மட்டுப்படுத்தப்பட்டதாக இரு தரப்பிலும் கூறப்பட்டாலும் அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் காலத்தில் தயாரித்த முன்மொழிவின் அடிப்படையில், கலந்துரையாடல்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்க இங்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இதுபற்றிய கலந்துரையாடல்களை மாதாந்தம் நடத்துவதற்கும் பல தரப்பினருடன் விரிவான கருத்துப் பரிமாற்றங்களை முன்னெடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரையில் கடந்த மூன்று நான்கு தேர்தல்கள் அவர்களுக்குப் பல பாடங்களைப் புகட்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் பல பகுதிகளில் வீசிய அனுர அலை வடக்கு, கிழக்கிலும் தாக்கம் செலுத்தியிருந்தது. எவரும் எதிர்பாராத விதமாகப் பாராளுமன்றத் தேர்தலில் அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு அதிகமான ஆசனங்கள் கிடைத்தன. தமக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் குறுகிய அரசியல் இலாபங்கள் காரணமாகப் பிரிந்து நின்ற தமிழ் கட்சிகளின் வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்பட்டது.
வடக்கு, கிழக்கில் பல உள்ளூராட்சி சபைகளைத் தமிழ்த் தேசிய கட்சிகளினால் கைப்பற்ற முடிந்தாலும் ஒப்பீட்டளவில் தேசிய மக்கள் சக்திய கணிசமான வாக்குகளைத் தனதாக்கிக் கொண்டது. இவ்வாறான பின்னணியில் நடைபெறக்கூடிய மாகாண சபைத் தேர்தலில் தொடர்ந்தும் தமிழ் கட்சிகள் பிரிந்து நின்றால் தேசிய மக்கள் சக்தி ஏனைய அரசியல் தரப்புக்களுடன் இணைந்து தமிழர் தாயகமான, தமிழ்த் தேசிய கட்சிகளின் அரசியல் உயிர் மூச்சான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆட்சியமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.இவ்வாறான பின்னணியிலேயே பொதுக் காரணிகளை முன்வைத்து ஒன்றிணைந்து செயற்படுவதற்கான முஸ்தீபுகளைத் தமிழ்த் தேசிய கட்சிகள் எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

இவ்வாறான நிலையில், இலங்கையின் அண்மைய அரசியல் வரலாற்றில் வடக்கிலுள்ள மக்களின் கணிசமான ஆதரவைப் பெற்ற ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க விளங்குவது தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவற்றுக்குச் சவாலாக உள்ளது. எனவே, வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியத்திற்குத் தொடர்ந்தும் சவாலாக இருக்கும் தேசிய மக்கள் சக்தியை எதிர்கொள்ள வேண்டுமானால் தமக்கிடையில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் வந்துள்ளமை வரவேற்கத்தக்கதே. ஆனால், இக்கூட்டு எந்தளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதுதான் இங்குள்ள கேள்வி.

உள்ளளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு முன்னர் தமிழரசுக் கட்சிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றிருந்தபோதும், அது தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லப்பட்டிருக்கவில்லை. தமிழ்த் தேசிய அரசியல் என்றால், அது தாமே என்றதொரு தோற்றப்பாட்டை முன்வைக்கும் அரசியலையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்து வருகின்றது. வடக்கில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் சமஷ்டியை வலியுறுத்தி தமிழகத் தலைவர்களுடன் நடத்திய சந்திப்புக்கள் மூலம் இது தெளிவாகியுள்ளது. எனவே, தமிழரசுக் கட்சி-ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கூட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு போதும் இணையப் போவதில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதில் தமிழரசு கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் ஆர்வமும் அதற்கு ஏற்ப, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தமிழரசுக் கட்சியுடன் மீண்டும் இணைந்திருப்பதும் வரவேற்கப்பட வேண்டியவை. ஏனெனில், தமிழ்க் கட்சிகள் பல்வேறு அணிகளாகச் சிதறியிருப்பதால் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கான அணுகுமுறைகளைப் பொறுத்தவரை ஒருமித்த நிலைப்பாடுகளை எடுக்க முடியாமல் இருக்கிறது என்று தமிழ் மக்கள் நீண்ட நாட்களாகவே கவலையடைந்திருக்கிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலிலும் வடக்கிலும் கிழக்கிலும் தேசிய மக்கள் சக்திக்கு அவர்கள் பெருமளவில் வாக்களித்ததற்கான காரணங்களில் இது முக்கியமானது..

இவ்வாறான நிலையில், 2001ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் 2022ஆம் ஆண்டு பிளவடைந்து வெளியேறிப் பல அரசியல் பாடங்களைக் கற்றுக் கொண்ட பின்னர் மீண்டும் தற்போது தாய்க் கட்சியான தமிழரசுக் கட்சியுடன் இணைந்துள்ளமை என்பது தமிழ்த் தேசிய அரசியலில் முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டாலும், இது மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கான மீள் இணைவாக, அரசியல் ஆதாயத்திற்கான கூட்டாக இருப்பதால் இதன் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.