அமெரிக்காவின் செயலுக்கு சீனா கண்டனம்
வெனிசுவேலா ஜனாதிபதியும் அவரது மனைவியும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளைக் கண்டித்துள்ள சீனா, வெனிசுவேலா அரசாங்கத்தைக் கவிழ்ப்பதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா வலுக்கட்டாயமாகப் பிடித்து, நாட்டை விட்டு வெளியே கொண்டு சென்றிருப்பது குறித்து சீனா தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று கூறியுள்ளது.
இந்த நடவடிக்கை சர்வதேச சட்டம், சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறைகள் மற்றும் ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளைத் தெளிவாக மீறுவதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
உடனடி நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்துள்ள அந்த அமைச்சு, “நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், வெனிசுவேலா அரசாங்கத்தைக் கவிழ்ப்பதை நிறுத்தவும், பேச்சுவார்த்தை மற்றும் சமரசங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கவும் அமெரிக்காவைச் சீனா கேட்டுக்கொள்கிறது” என்று கூறியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை, வெனிசுவேலாவின் இறையாண்மையை மீறும் மற்றும் பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் ஒரு “மேலாதிக்கச் செயல்” என்று சீனா கண்டித்துள்ளது.
ஒரு இறையாண்மை கொண்ட நாட்டிற்கு எதிராக அமெரிக்கா அப்பட்டமாகப் படைகளைப் பயன்படுத்துவதையும், அதன் ஜனாதிபதிக்கு எதிரான நடவடிக்கையையும் சீனா கடுமையாக எதிர்ப்பதாகக் கூறியது.
இத்தகைய செயல்கள் சர்வதேசச் சட்டத்தையும் வெனிசுவேலாவின் இறையாண்மையையும் கடுமையாக மீறுவதோடு, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.