;
Athirady Tamil News

இளம்பெண்கள்-ஆண்களை குறிவைக்கும் லோன் ஆப்: யுக்திகளை மாற்றி தொடர்ந்து பணம் பறிக்கும் மோசடி பேர்வழிகள்!!

0

ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை முதலில் தூண்ட வேண்டும்… இங்கு சிலர் கனகச்சிதமாக அந்த வேலையை செய்து முடிக்கிறார்கள். வங்கிகள், பொது காப்பீ ட்டு நிறுவனங்கள், அஞ்சலகங்களில் முதலீடு செய்யும் தொகைக்கு குறைவான வட்டி கிடைப்பதால் மக்களின் நாடி துடிப்பை அறிந்து கொண்டு பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும். நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் முதலீடு செய்தால் உடனடியாக குபேரன் ஆகிவிடலாம் என்றெல்லாம் தூண்டில் போடுகிறார்கள்.

இந்த மோசடி பேர்வழிகள் நேரடி பரிச்சயம் இல்லாவிட்டாலும் கூட, ஏதோ ஒருவகையில் உறவினராகவோ, நண்பர்களாகவோ இருப்பவர்களை தங்களுடன் சேர்த்து கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் மூலம் அப்பாவிகளுக்கு வலைவிரிக்கிறார்கள். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் சிக்கி தங்கள் கையில் இருக்கும் பொருளாதாரத்தை தொலைத்து தவிக்கிறார்கள். இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் சிக்கி சென்னை, திருச்சி, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் மக்கள் நாளும் பணத்தை இழந்து காவல் நிலையங்களில் காத்து நிற்கிறார்கள்.

திருச்சியில் நடப்பு ஆண்டில் மட்டும் 20க்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருச்சி புறநகர் சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர். எத்தனை விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும் ஆன்லைன் மோசடி கும்பலின் வலையில் சிக்குபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. சமீபத்தில் திருச்சி பெல் நிறுவனத்தைச் சேர்ந்த மேலாளர் ஒருவர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ. 49 லட்சம் தொகையை இழந்து சைபர் கிரைம் போலீசிடம் சரணடைந்தது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. திருச்சி தில்லை நகரில் சட்டக்கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனின் தாய் வெளிநாட்டு கார் பரிசு விழுந்ததாக தனது செல்போனுக்கு வந்த குறுந்தகவலை வைத்து சம்பந்தப்பட்ட மோசடி பேர் வழியை தொ டர்பு கொண்டார்.

அதன் விளைவாக அந்த பெண்மணியின் கணவர் அயல்நாட்டில் கஷ்டப்பட்டு அனுப்பிய ரூ.12 லட்சம் பணத்தை மோசடி பேர்வழி கூறிய வங்கிக்கணக்குகளுக்கு பல தவணைகளாக செலுத்தி ஏமாந்து நிற்கிறார். இந்த மோசடி ஆசாமி முதலில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுக் கார் பரிசு விழுந்ததாக கூறி ஜிஎஸ்டி, ரிசர்வ் பேங்க் அனுமதி, சர்வீஸ் டாக்ஸ் என பல யுக்திகளை கையில் எடுத்து சில லட்சங்களை கறந்திருக்கிறான். கேட்க… கேட்க பணம் வரவும் சுதாகரித்துக்கொண்ட அந்த ஆசாமி நீங்கள் ஒரு அதிர்ஷ்டசாலி என்பதால் மேலும் ரூ. 8 லட்சம் பரிசு விழுந்ததாக புரூடா விட்டு மொத்தமாக ரூ. 12 லட்சம் வரை விழுங்கி விட்டான். நேற்றைய தினம் காந்தி மார்க்கெட் பகுதியில் பிரவீன் என்ற சாப்ட்வேர் என்ஜினீயர் கூடுதல் வட்டித்தொகைக்கு ஆசைப்பட்டு ஆன்லைன் கும்பலிடம் ரூ.8 லட்சத்து 42 ஆயிரத்தை இழந்துவிட்டார்.

இது போன்ற மோசடிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மோசடி பேர்வழிகள் யுக்திகளை மாற்றி மிரட்டும் வேலைகளையும் செய்ய தொடங்கியிருக்கும் தகவல் பேரதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. அதற்கு இப்போது கடன் செயலி (லோன் ஆப்) என்ற ஒன்றை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ஆண்ட்ராய்டு செல்போன்களில் ப்ளே ஸ்டோரில் இவ்வாறான கடன் செயலிகள் நிரம்ப இருக்கிறது. இதனை நாம் டவுன்லோட் செய்து அப்டேட் கொடுத்தால் வாடிக்கையாளரின் ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவற்றை பதிவிட சொல்கிறார்கள். பின்னர் நம்முடன் நட்பாக பழகி நமது காண்டாக்ட் லிஸ்ட் அத்தனையும் எடுத்து விடுகிறார்கள். பின்னர் நாம் ரூ.5 ஆயிரம் கடன் கேட்டு அப்ளை செய்தால் அடுத்த சில நிமிடங்களில் பிடித்தம் போக ரூ.3000 ரூ.4000 நமது வங்கிக் கணக்கிற்கு அனுப்புகிறார்கள்.

அதன்பின்னர் அந்த கும்பல் ஒரு வாரத்தில் இந்த தொகைக்கான வட்டியுடன் ரூ. 5500, 6000 செலுத்த வேண்டும் என மிரட்டுகிறார்கள். இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்தால் அந்த மோசடி பேர்வழிகள் கையில் எடுக்கும் ஆயுதம் தான் இப்போது பாதிக்கப்பட்டவர்களை நிலைகுலைய செய்து வருகிறது. அது என்னவென்றால், கடன் கேட்டு அந்த மோசடி பேர்வழிகளின் செயலில் நாம் பதிவிடும் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகியவற்றில் இருக்கும் போட்டோக்களை எடுத்து மார்பிங் செய்து பெண்ணாக இருந்தால் ஆணுடனும், ஆணாக இருந்தால் வேறு பெண்ணுடனும் தவறாக சித்தரித்து நமது காண்டாக்ட் லிஸ்டில் அந்த ஆபாச பதிவை வாட்ஸ் அப்பில் பதிவிடுகிறார்கள்.

முதலில் மிரட்டுகிறார்கள். அதற்கு அடிபணியவில்லை என்றால் வீடியோக்களை அனுப்பி விடுகிறார்கள். இவ்வாறு சைபர் கிரைம் போலீசாரிடம் தினமும் நான்கு முதல் ஐந்து புகார்கள் வருவதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் இளம்பெண்கள், குடும்ப பெண்கள், ஆண்கள் ஆத்திர அவசரத்திற்கு கடன் பெற்று மோசடி கும்பலிடம் சிக்கி கண்ணீர் வடிக்கின்றனர். பொதுவாக இந்த மாதிரியான செயலியை தேடும் போது ரிசர்வ் வங்கி அங்கீகரித்த நிறுவனம் தானா என்பதை முதலில் நாம் உறுதி செய்ய வேண்டும். அதன் பின்னரே கடனுக்கு அப்ளை செய்ய வேண்டும்.

மோசடி பேர்வழிகள் ஏதோ ஒரு ரூபத்தில் நமது நெருக்கடிகளை சாதகமாக்கி நெருங்குவார்கள். நாம் தான் உஷாராக இருக்க வேண்டும். இது போன்ற மோசடி கும்பல் வடமாநிலங்களில் இருந்து இயங்குகிறது. ஆகவே குற்றவாளிகளை பிடிப்பது கடினமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளித்தால் வங்கிக்கணக்கை முடக்கி பணத்தை கைப்பற்றலாம். இல்லை என்றால் அதுவும் இயலாமல் போய்விடுகிறது. இவ்வாறு மோசடி கும்பலிடம் சிக்குபவர்கள் உடனடியாக புகார் அளித்தால் நிவாரணம் கிடைக்கும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.