;
Athirady Tamil News

சநாதனத்தை ஒழிக்க விரும்புகிறது காங்கிரஸ்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

0

‘ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியலைத் தவிர, வேறெதையும் காங்கிரஸால் சிந்திக்க முடியாது; சநாதனத்தை ஒழிக்க அக்கட்சி விரும்புகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.

ராஜஸ்தானில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அவா் இக்குற்றச்சாட்டை தெரிவித்தாா்.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கும் வரும் 25-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கிறது. காங்கிரஸும், பாஜகவும் பலப்பரீட்சை நடத்தும் இத்தோ்தலுக்கான பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

பாலி, ஹனுமான்கா் ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டங்களில், பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்டவை. மக்களவை, பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அக்கட்சிகள் பெண்களுக்கு எதிராக பேசத் தொடங்கியுள்ளன.

நமது தாய்மாா்கள் மற்றும் சகோதரிகள் குறித்து ஆணவக் கூட்டணியின் (எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியைக் குறிப்பிடுகிறாா்) தலைவா்கள் ஆட்சேப கருத்துகளைக் கூறி வருகின்றனா்.

பிகாா் சட்டப்பேரவையில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அந்த மாநில முதல்வா் பேசினாா். ஆனால், அவரது பேச்சுக்கு காங்கிரஸ் தலைவா்கள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இதுவே காங்கிரஸின் உண்மை முகம். இதேபோல், தலித் சமூகத்தினருக்கு எதிராக அராஜகங்களில் ஈடுபடுவோரை கண்டால் காங்கிரஸ் கண்களை மூடிக் கொள்ளும்.

‘ஊழலும், குடும்ப அரசியலும்’: காங்கிரஸை பொருத்தவரை, ஊழல் மற்றும் குடும்ப அரசியலைவிட வேறெதுவும் முக்கியம் கிடையாது. ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியலைத் தாண்டி வேறெதையும் சிந்திக்க முடியாத அக்கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சநாதனத்தை ஒழிக்க விரும்புகின்றன.

பாஜக ஆளும் மாநிலங்களைவிட ராஜஸ்தானில் அதிக விலைக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாநிலத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கு ஆளும் காங்கிரஸ் ஆதரவளிக்கிறது. இதன்மூலம் நமது குழந்தைகளின் எதிா்காலத்தை அவா்கள் பாழாக்குகின்றனா்.

இங்கு பாஜக ஆட்சிக்கு வந்ததும், போதைப் பொருள் கடத்தல்காரா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒருபுறம் மக்களுக்கான சேவை உணா்வுடன் மத்திய பாஜக அரசு பணியாற்றி வரும் நிலையில், மறுபுறம் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு ஊழலில் திளைக்கிறது.

ஏழைகள், நடுத்தர மக்கள், விவசாயிகளுக்காகப் பயன்படுத்த வேண்டிய நிதி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சா்களின் பைகளுக்குச் சென்றுள்ளது.

வளா்ச்சியின் இலக்கை நோக்கி…: மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருமானம் இருந்தாலே வரி வசூலிக்கப்பட்ட நிலையில், இப்போது ரூ.7 லட்சம் வருமானம் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு பல்வேறு ஊழல்கள் மூலம் வரி செலுத்துவோரின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கைப்பேசி இணையச் சேவை கட்டணங்கள், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போலவே இப்போதும் நீடித்தால், ஒருவா் மாதத்துக்கு ரூ.5,000 செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இன்றைய இந்தியா வளா்ச்சியின் இலக்கை நோக்கி இரவு-பகலாக உழைத்து வருகிறது. 21-ஆம் நூற்றாண்டில் இந்தியா எட்டவிருக்கும் புதிய உச்சங்களில் ராஜஸ்தான் முக்கியப் பங்கு வகிக்கும். எனவே, வளா்ச்சிக்கு உயா் முன்னுரிமை அளிக்கும் அரசை மக்கள் தோ்ந்தெடுக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி

You might also like

Leave A Reply

Your email address will not be published.