கேரளாவில் 6 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு: பினராயி விஜயன் அறிவிப்பு!!
கேரளாவில் வருகிற 29-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஓணம் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசு பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- கேரளாவில் நடப்பாண்டில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுகள் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 5 லட்சத்து 87 ஆயிரத்து 691 பேர், நல வாழ்வு மையங்களில் வாழும் 20 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த ஆண்டு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த தொகுப்பில் தேயிலைத்தூள், சிறுபருப்பு, சேமியா பாயாசம் மிக்ஸ், நெய், முந்திரி பருப்பு, தேங்காய் எண்ணெய், சாம்பார் பொடி, மிளகு பொடி, மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, துவரம் பருப்பு, சிறுபயறு மற்றும் உப்பு ஆகிய பொருட்கள் அடங்கி இருக்கும். ரேஷன் கடைகள் மூலமாக ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இதற்காக ரூ.32 கோடி முன்பணமாக சப்ளை கோ நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-மந்திரியின் அறிவிப்பை தொடர்ந்து ஓணம் பரிசு தொகுப்பு விரைவில் ரேஷன் கடைகளுக்கு கொண்டு வரப்பட்டு, கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த ஆண்டு 86 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. நடப்பாண்டில் நிதி நெருக்கடி காரணமாக 6 லட்சத்து 7 ஆயிரத்து 691 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 17 பொருட்கள் வழங்கப்பட்டன. தற்போது உலர் அரிசி, சர்க்கரை வரட்டி, சீனி, ஏலக்காய் ஆகிய 4 பொருட்கள் நீக்கப்பட்டு, 13 பொருட்கள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.