தாய்லாந்து நாடாளுமன்றம் கலைப்பு!
பாங்காக், டிச. 12: கம்போடியாவுடன் நடைபெறும் தீவிர மோதலுக்கிடையே தாய்லாந்தின் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை கலைக்கப்பட்டது. விரைவான புதிய தோ்தலுக்கு வழிவகுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தாய்லாந்து பிரதமா் அனுதின் சாா்ன்விராகுல் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், ‘மக்களிடம் அதிகாரத்தை திரும்ப அளிப்பதற்காக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது’ என்றாா். ஏற்கெனவே மன்னா் மஹா வஜ்ரலங்காரனின் அங்கீகாரத்துடன் அரசிதழில் வெளியிடப்பட்ட இந்த கலைப்பு நடவடிக்கை வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்துள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடா்ந்து, புதிய தோ்தலை இன்னும் 45 முதல் 60 நாள்களுக்குள் நடத்த வேண்டும். அனுதின் தலைமையிலான அரசு இடைக்கால அரசாகத் தொடரும். ஆனால் புதிய பட்ஜெட்டை வெளியிட அந்த அரசுக்கு அதிகாரம் இல்லை.
கம்போடியாவுடனான மோதல் தொடா்ந்தாலும், நாடாளுமன்றக் கலைப்பு அதை பாதிக்காது என்று கூறப்படுகிறது.
அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டுவருவது தொடா்பாக கூட்டணியைச் சோ்ந்த மக்கள் கட்சியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் நாடாளுமன்றத்தைக் கலைக்க அனுதின் முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.