;
Athirady Tamil News

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து; 3 மாணவர்கள் உயிரிழப்பு – யார் மீது தவறு?

0

பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

3 பேர் உயிரிழப்பு

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில், ரயில்வே கேட்டில் தனியார் பள்ளி வாகனத்தின் மீது, திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில், 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். வேன் ஓட்டுநர் உட்பட 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்திற்கு காரணம் ரயில் கேட் கீப்பரின் அலட்சியம் தான் என குற்றஞ்சாட்டிய பொதுமக்கள், கேட் கீப்பர் பஞ்சஜ் சர்மா என்பவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, கேட் கீப்பர் பஞ்சஜ் சர்மாவை இடைநீக்கம் செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. தற்போது, கேட் கீப்பர் பஞ்சஜ் சர்மா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரணம் என்ன?
இதை தொடர்ந்து, “பள்ளிக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என வேன் ஓட்டுநர் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதால் ரயில்வே கேட்டை, கேட் கீப்பர் திறந்துள்ளார். பாதுகாப்பு விதிகளுக்குப் புறம்பாக கேட்டைத் திறந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது” என ரயில்வே விளக்கமளித்துள்ளது.

ரயில் வரும் நேரம் தெரிந்தும் கேட் கீப்பர் மூடாமல் அலட்சியமாக இருந்தது எப்படி என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

சம்பவ இடத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை அமைச்சர் சிவி கணேசன் நேரில்சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.

உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரூ. 5 லட்சமும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.