;
Athirady Tamil News

எந்தத் தடை வந்தாலும் போதை ஒழிப்பிலிருந்து பின்வாங்கப் போவதில்லை

0
நாட்டை பீடித்துள்ள போதை அரக்கனை ஒழிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தத் தடை வந்தாலும் போதை ஒழிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழில் தெரிவித்தார்.
‘முழு நாடுமே ஒன்றாக’ என்கின்ற தேசிய செயற்பாட்டை ஆரம்பிக்கும் முகமாக ‘அகன்று செல்’ என்கின்ற தொனிப்பொருளில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கொக்குவில் தொழில்நுட்பவியற் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற உறுதிமொழி எடுக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நச்சு போதைக்கு எதிராக முழு நாடுமே ஒன்றிணைந்து அகன்று செல் என்கின்ற கோசத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அழைப்பை விடுகிறேன்.
நச்சுப் போதைப் பொருளினை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதில் மூன்று இலக்குகளை மையமாகக் கொண்டு அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

ஒன்று, நச்சுப் போதைப்பொருளினுடைய உற்பத்தி பரிமாற்றம் என்கின்ற வலையமைப்புக்களினை கண்டுபிடித்து அவற்றினை இல்லாது ஒழிப்பதற்காக முழுமூச்சுடன் செயல்படுவது.

இரண்டு, இவ்வாறான நச்சுப் போதைப் பொருட்களினால் – அவற்றை நுகர்வதனால் எங்கள் சமூகத்தின் உடைய ஒவ்வொரு பாதிப்புக்கு உள்ளான மற்றும் உள்ளாகி கொண்டிருக்கின்ற சகோதர சகோதரிகளிற்குப் பொறுப்புடன் புனர்வாழ்வளித்து மீளவும் சமூக வாழ்வியல் நீரோட்டத்தில் ஆரோக்கியமான பங்காளர்களாக இணைப்பது.

மூன்று, நச்சுப் போதைப் பொருளின் ஏற்கனவே சொல்லப்பட்ட இரண்டு விடயங்களுக்குள்ளும் சிக்குண்டு விடாது இருப்பதற்காக எங்களினுடைய சமூகத்தின் அனைத்து அங்கத்தவரையும் மிகப் பொறுப்புடன் அரவணைத்து – வழிகாட்டித் தொடர்ந்து அவர்கள் ஆரோக்கியமான வாழ்நிலைச் சூழலில் வாழ்வதை உறுதிப்படுத்துதல்.

இந்த மூன்று இலக்குகளையும் சட்ட அமுலாக்க மற்றும் நீதித்துறையினாலும், பாதுகாப்புத் துறையினாலும் மட்டும் செயல்படுத்தி விட முடியாது இந்த இலக்குகளை அடைவதற்கான பயணத்தில் ஒரு மதகுருவாக, ஒரு நிர்வாகியாக, ஒரு கல்வியியலாளராக, ஒரு தொழில் வாண்மையாளராக, ஒரு விவசாயியாக, ஒரு மீனவனாக, ஒரு முயற்சியாளனாக, ஒரு தாத்தாவாக, ஒரு பாட்டியாக, ஒரு தந்தையாக, ஒரு தாயாக, ஒரு சகோதரனாக, ஒரு சகோதரியாக, ஒரு நண்பனாக, ஒரு அயலவனாக, ஒரு நலன் விரும்பியாக ஒவ்வொருவரினுடைய பங்களிப்பும் அவசரமானதும் அவசியமானதுமாக இருக்கின்றது.

கடந்த காலங்களில் நாட்டை ஆட்சி செய்தவர்கள் அவர்களின் குடும்பத்திற்கு ஏற்றவாறு அவர்களின் நண்பர்களுக்கு ஏற்றவாறு அவர்களை நம்பி வாழ்பவர்களுக்கு ஏற்றவாறு இந்த நாட்டை வழிநடத்தி சென்று விட்டார்கள்.
அவர்களின் நண்பர்களால் முழு நாடும் போதைப் பொருள் என்கின்ற அரக்கனை இளம் சமுதாயத்துடன் போராட வைத்துள்ளது.
நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் போதைப் பொருளுக்கு எதிரான வேலை திட்டத்தினை ஆரம்பிக்கும் போது பாரிய சவால்கள் எமக்கு முன்னால் தோற்றுவிக்கப்பட்டன.
ஒரு கட்டத்தில் ஆட்சியைக் கூட கவிழ்க்கும் அளவுக்கு போதைப் பொருள் அரக்கர்களின் செயல்பாடுகள் அவ்வளவு தூரம் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்திகளாக உருவெடுத்தன.

ஆனால் நாம் அஞ்சவில்லை பாதுகாப்புத் துறையின் ஒத்துழைப்புடன் நேர்மையான அதிகாரிகளின் அயராத உழைப்பின் காரணமாக போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம்.

எனவே இந்தச் செயற்றிட்டத்தினை ஒரு இயக்கமாகக் கொண்டு இந்த நாட்டில் இருந்து நச்சு போதைப் பொருளினை ‘அகன்று செல்’ என்ற கோஷத்தோடு விரட்டி அடிப்பதற்கான செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வுக்கு இன, மத, ஜாதி, வர்க்க என்ற வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து சமூகத்தின் பொறுப்பு மிக்க பிரஜைகளாக ஒவ்வொருவரின் பங்கும் அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.